Tuesday, August 28, 2018

ஜூடி சுந்தர்


சூடி சுந்தரின், “தமிழா! தமிழா! எதுகை மோனை தெரியாமலே கவிதையாகிறது!
ஆணும் பெண்ணும் கைகோர்த்து நடந்தால் அது காதல்! தாயும் மகனும் கைகோர்த்து நடந்தால் அது பாசம்! கற்பனை, கருத்து, வடிவம், உணர்ச்சி ஆகிய நான்கும் கைகோர்த்து நடந்தால் அது கவிதை! சூடியின் கவிதை வரிகளில் இவை நான்கும் கைகோர்த்து நடப்பதனைக் காண்கிறேன். அதனால் அவர் கவிதைமீது எனக்குள் ஒரு இனம்புரியாதக் காதல் உண்டு.
கவிஞர் ஒருவர் தனது கவிதை வழியாக எட்டாத உயரத்தைத் தொட்டுவிட முடியும். நல்லதொரு ஆராய்ச்சியை சமர்பிக்க முடியும். கடவுளை சகட்டுமேனிக்கு கேள்வி கேட்க முடியும். பூ பூப்பதற்கு முன்பாக அதில் குடியேறிவிட முடியும். போகாத இடத்திற்கு பயணிக்க முடியும். எமனோடு மல்லுகட்ட முடியும். சமூகத்தில் புரட்சியை உருவாக்க முடியும். இதில் தன்னை எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி நிருபித்து இருக்கிறார் கவிஞர் சூடி.
தூண்டிலை எடுத்துக்கொடுத்து கணவனை மீன்பிடிக்க அனுப்பாமல் எழுதுகோலைத் தூக்கிக்கொண்டு போர் முனைக்கு புறப்பட்டு இருக்கிறார். அதனால்தான் அவரின் கவி வரிகள் பட்டை தீட்டப்பட்ட வைரம்போல் பிரகாசிக்கிறது. எதுகை, மோனை, சீர், தளை, யாப்பு தெரியாமலே பிடிவாதமாய் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதுதான் அவரது கவிதைக்கு அழகு சேர்க்கிறது. தமிழா! தமிழா! என்கிற கவிதையில் தமிழன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதனை, ‘எத்துன்பம் வந்தாலும் தமிழா! எதிர் நீச்சல் போட்டுவிடு தமிழா! தன்மானம் காத்திடுவாய் தமிழா! தடைகளை நீ தகர்த்துவிடு தமிழா! எனத் தனது எழுதுகோல் மூலம் சிலம்பம் விளையாடுகிறார்.
‘தமிழ் இனி மெல்ல சாகும் என்ற தமிழ் கவிஞரின் தமிழ் கவிதையை விழுங்கி ஏப்பமிடும் அளவற்கு, ‘உலகத் தமிழரே! தமிழால் ஒன்று கூடுவோம் என்கிறார். சாதி, மதம் கடந்து சாதிக்க வேண்டியது இன்னும் பல இருக்கிறது. நம்மை பிளவுபடுத்தி சுயலாபம் காண பலர் துடிக்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் அதனைக் கடந்து சரித்திரம் படைக்க, ‘சங்கம் வளர்த்த தங்கத் தமிழா! தன்மானம் காத்திடுவோம்! என அழைக்கிறார்.
எரிக்கப்படாத நெகிழி, தொய்வகம் போன்ற பொருட்களை எரித்ததால் உருவான புகையால் ஓசோன் பாழ்பட்டுவிட்டது. இது வருங்கால சந்ததியருக்கான வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது என்பதனை. ‘எரிக்கப்படாத பொருள்களை எரித்ததால் விழுந்தது ஓட்டை! என்ற தனது வைர வரிகளால் காரம் சிறுத்து இயம்புகிறார். ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் மூலையில் உட்கார்ந்து இருக்கும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் காற்றால் ஓசோன் விரிப்பில் கீறல் விழுந்து கொண்டிருக்கிறது. இது சாதாரண விசயமல்ல. பெற்ற பிள்ளையை பலி கொடுப்பதற்கு சமம். பலி கொடுக்கப்பட்ட பிறகு எப்படி உயிரை மீட்க முடியாதோ அதுபோல் இது பலியிடும் வேட்டு என தனது கோபக் கனலைக் கொட்டுகிறார். ஆனால் அவரது கோபக்கனல் அவரது வீட்டில் பெட்டிப் பாம்பாய் படம் எடுத்து நிற்கிறது.
உலகத்தைப் படைத்த கடவுள் தனது வேலையை செவ்வனே செய்து முடித்திருக்கிறார். உயிரினங்கள் வாழ்வைப் பாதுகாக்க ஓசோனைப் போர்வையாகத் தந்திருக்கிறார். அப்போர்வையை மனிதர்கள் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘உலகத்தைக் காத்திடவே இறைவன் படைத்த போர்வை ஓசோன்! இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்ட பிறகும் நாம் அதில் தனிக்கவனம் செலுத்தவில்லை என்றால், ‘பூலோகம் இனி மிஞ்சுமா? உயிரினங்கள் வாழ முடியுமா? என்கிற அற்புதமான கேள்விக்கு உடலை முன்னுதாரணமாக வைத்து, ‘உன் உடம்பை நோகடித்தால் உயிர் மிஞ்சுமா? என சிந்திக்கத் தூண்டுகிறார். இங்கு கவிதையானது உயிரோட்டம் பெறுகிறது. அதுதான் கவிஞர் சூடிக்குரிய சிறப்பு.
‘சந்தேகம் என்ற நோய்க்கு சந்தோசம் இழந்து விட்டு சரிந்தவர்கள் ஏராளம் என்பது சூடியின் கவி வரிகள். தற்கொலை செய்வது குற்றம் என்கிற இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டாலும், ‘தற்கொலை செய்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை என்பது நபிமொழி வாக்கு. ‘எப்பொழுதும் சந்தோசமாக இருங்கள் என்பது விவிலிய வாக்கு. கணவன் மனைவி மத்தியில் ஆயிரம் சந்தேகங்கள் வரலாம். அதனைப் பேசி நிவர்த்தி செய்ய வேண்டும். “எந்தவித இடறல் வந்தாலும் வாழ்ந்து பார்க்க வேண்டுமே தவிர, மாய்ந்து விடுவது அழகல்ல; கோழைத்தனம் என்பதனை வெளிப்படுத்துகிறார்.
பூமியில் வாழும் வாழ்க்கை ஒரேயொரு முறைதான் கிடைக்கும். மீண்டும் அப்பிறப்பு கிடைப்பதில்லை. அதனால் கிடைத்த வாழ்வு இனிப்போ அல்லது கசப்போ அல்லது இரண்டும் கலந்தோ அதனை அனுபவித்து வாழ வேண்டும். இவ்வுலகில் கை, கால், இல்லாதவர்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை சாத்தியம் ஆகும்போது உனக்கு ஏன் ஆகாது என்பது குறித்து சிந்திக்க வேண்டுகிறார்.
காற்று ஓய்வெடுத்துக் கொண்டதாய் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுவரையும் அறிவித்தது இல்லை. நிலவு கெட்டுப் போனதாய் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சியை இன்னும் சமர்பித்துவிடவில்லை. அவ்வகையில் பிறருக்கு சுவாசமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமே தவிர விரக்தியடைந்து தன்னைத்தானே கொலை செய்வது சரியல்ல என்பதனை, ‘தன்னைத்தானே கொலை செய்யாதீர்! என்ற கவிதை மூலம் வாழ்க்கைப் பாடம் புகட்டுகிறார். ‘வாழ்க்கை வாழ்வதற்கே! வாடி உயிர் மாய்ப்பதேன்? வாருங்கள்! சிந்தித்தால் மாய்க்கும் வரலாற்றை மாற்றிடலாம் என்கிற நம்பிக்கையை விதையாக விதைத்துச் செல்கிறார்.
விழுந்து உயிர் விட்டாலும் தென்னங்கீற்றுகள் கூரையாய் உயர்ந்து நிற்பதுபோல் பெண்கள் உலகில் சிறந்து வாழ வேண்டும் என்பதை சிறப்புடன் சீர்தூக்கிக் காட்டுகிறார். மனிதர்கள் மறுதலிக்கும் தொழுநோயாளியாக கணவன் இருந்தாலும் அவனை தோளில் சுமப்பவள் மனைவி. அப்படிப்பட்டவளின் வாழ்க்கை சுதந்திரமாகிட வேண்டும் என்பதனை தெளிவுடன் முன்வைக்கிறார். ‘அடக்கி ஆளும் அவலநிலை அகிலத்தில் இனிமேல் ஒழியட்டும்! அவனியில் பெண்மை சிறந்திடவே ஆக்கம் ஊக்கம் பெருகட்டும்! என்கிற அவரின் கவி உரைவீச்சு மகத்துவம் பெறுகிறது.
மூங்கில் காட்டிலில் எந்த மூங்கில் புல்லாங்குழல் ஆகும் என சொல்ல முடியாது. இல்லத்தில் இல்லத்தரசியாக இருக்கும் திருமதி அப்படியல்ல. அவள் என்றைக்கும் இல்லத்தில் ஒரு வெகுமதியே! இல்லத்தில் இல்லாள் இல்லை என்றால் அங்கு குடித்தனம் கெட்டுப் போயிடும். ஆணின் வாழ்க்கை பூச்சியம் ஆகிவிடும் என்பதனை கவிஞர் சூடி, “இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை! என தத்ரூபமாக விளக்குகிறார்.
‘காலம் கண் போன்றது; நேரம் பொன் போன்றது, ‘காலத்தோடு பயிர் செய் என்பது பழமொழி. நேரத்தை நாம் வீணாக்கிவிட்டால் மீண்டும் அந்நேரம் நமக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. காலத்தைக் கருத்தாகக் கொண்டு பணி செய். அவ்வாறு பணி செய்தால் உள்ளத்தில் குடியிருக்கிற இருள் நீங்கிவிடும். வாழ்வு வளம் பெறும் என்கிற வாழ்க்கைத் தத்துவத்தை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். ‘காலம் நேரம் கருத்தாக காத்து வாழ்வை நகர்த்திவிட்டால் காரியம் பலவும் சாதிக்கலாம்; காரிருள் வாழ்வில் நீக்கிடலாம் என இருளை அகற்ற வழிகாட்டுகிறார்.
அண்மையில் தமிழக அரசின் குடிநீர் தேவைக்காக 95 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. ஒவ்வொரு ஆண்டும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வருவதும், அப்பொழுது திருப்திபடுத்த ஏதாவது செய்வதும், மக்கள் மெளனம் காப்பதும் வேடிக்கையாகவே நடந்து வருகிறது. ‘வருமுன் காப்போம் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மழை நீரை சேமிக்காமல் விட்டு விடுகிறோம். பின்பு, திண்டாடுகிறோம்; அல்லல்படுகிறோம். இதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதனை, ‘மழை நீர் தன்னைச் சேமித்தால் மகிழ்வாய் நாமும் வாழ்ந்திடலாம்! மண்ணில் வெப்பம் குறைந்திடும்; மனதில் பெருமை நிலவிடும்! என அதன் நோக்கத்தையும், நலனையும் தெள்ளத்தெளிவாக எடுத்து முன்வைக்கிறார்.
தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கிற்குள் மனித நேயப் பண்புகளை எடுத்துப் போட்டு கடவுளின் வாக்காய் கவிதைகளைத் தந்திருக்கிறார். அவ்வாக்குகள், சூளையில் வைத்து சுட்டெரித்து பக்குவப்படுத்தி பதம் பார்க்கத் தந்ததுபோல் பலமுள்ளதாகவும், பலனுள்ளதாகவும் இருக்கிறது. அவ்வாக்கிற்கு முதுகெலும்பாய் இருக்கும் மனிதநேயப் பண்புகளை மறந்தவர்கள் மனிதர்கள் அல்ல; மாக்கள் என்பதனை, ‘மனிதநேய பண்புதனை மறந்தவர் எவரும் விலங்கன்றோ? எனக் கேள்விக்கணை மூலம் வெளிப்படுத்துகிறார்.
புறநானூறு ஒன்று, “தமிழா! தமிழா! நூல் வடிவில் புறப்பட்டு வருகிறது. அன்று சிறுவன் ஒருவன் கையில் வேல் ஒன்றினைப் பிடித்துக்கொண்டு போருக்கு சென்றதுபோல், இன்று எழுதுகோல் ஒன்றினைப் பிடித்துக்கொண்டு வீதிக்கு வந்திருக்கிறார் கவிஞர் சூடி. அவரது எழுதுகோல் எதிரியைக் குத்தும் வேலல்ல; கல்லாமையை செதுக்கும் உளி என்பதனை, ‘கலையாம் கல்வியைப் பயின்றிடுவோம்; கசடறக் கற்று மகிழ்ந்திடுவோம் என்பதன் மூலம் கல்வியின் மகத்துவத்தை போதிக்கிறார். கல்வி மட்டும்தான் மனிதனுக்கு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதைத்தவிர நல்ல மருந்து வேறில்லை என்பதனை, ‘மனப்புண் ஆற்றும் நல்மருந்தாம்! மனிதராய் மாற்றும் சொல்விருந்தாம்! மரகத ஒளியைத் தந்திடுமாம்! மாட்சி வழியைப் பொழிந்திடுமாம்! என்ற கவி வரிகளால் சுட்டுகிறார்.
முயற்சி இல்லையென்றால் எதுவுமில்லை. முயற்சி ஒன்றுதான் ஒரு மனிதரை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். ஒருவேளை உணவிற்கே வழியில்லாமல் அலைந்து திரிந்த பயோனியர் பின்னாளில் பயோனியர் பேருந்து, பயோனியர் மின்சாரம், பயோனியர் கரிவாயு உற்பத்திப் பட்டறை, பயோனியர் தொழில் பயிற்சி மையம், பயோனியர் ஓட்டுத் தொழிற்சாலை, நாகம்மாள் ஆலை, பயோனியர் தபால் சேவை என நாகர்கோவிலில் ஒரு தொழில் அதிபதியாக வலம் வந்தார். அப்பொழுது அவரிடம் உங்கள் வெற்றிக்கு காரணம் என்னவெனக் கேட்டபோது, “எதுவுமில்லை; கடின முயற்சிதான் என்றார். அதைத்தான் சூடி, “முன்னேற நினைத்தால் முயன்றிடுவாய்; முயன்றால் வாழ்க்கை பொலிவுறுமே; முயல் ஆமையிடம் தோல்வியுறும்; முயலாமை தோல்வி தரும் என அழகுபட முயலை தோற்கடித்த ஆமை கதை வாயிலாக எடுத்து இயம்புகிறார்.
ஆசிரியர் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதனை ஆசிரியராக வாழ்ந்து அனுபவித்துக் கொண்டே கவிதை வடித்திருக்கிறார் சூடி. ஆசிரியர் என்பவர், “அகத்தில் ஒளியை ஏற்றிடுவார்; ஆணவ இருளை அகற்றிடுவார் என்கிறார். ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக ஆசிரியர் இருக்க வேண்டும் என்பதனை தெளிவுபடுத்துகிறார். ஒழுக்கம் இல்லாத ஆசிரியர் கல்வி கற்பிப்பதற்கே தகுதியற்றவர் என்பதனை மறைமுகமாகச் சுட்டுகிறார். நல்ல ஆசிரியர் ஒருவர் வாய்த்தால் அவ்வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் நல்லவர்களாக வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். தொலைக்காட்சிப் பெட்டிகூட தொல்லைக் காட்சியாக மாறி கல்வி கற்ற பெண்களை எந்தவகையில் எல்லாம் கெடுத்துவிடுகிறது என்பதனை தொ(ல்)லைக் காட்சி கவிதை மூலம் பட்டியலிடுகிறார்.  
கவிதைகள் எளிமையான நடையில் இருப்பது மட்டுமின்றி தங்கு தடையின்றி விறுவிறுப்பாக அதனை நகர்த்தியிருக்கின்ற விதம் ஆச்சரியப்பட வைக்கிறது. சொல்ல வரும் செய்திகள் எல்லோரையும் எட்ட வேண்டும் என்பதற்காக பொறுப்புணர்ச்சியோடு செய்திகளை கவி நடையில் எளிமைப்படுத்தி தந்திருக்கிறார். ஒவ்வொரு வரிகளும் உயிர்பெற்று உணர்வு நடனம் புரிகின்றன. “அழகிய பொருட்கள் நிலையானது அல்ல; ஆனால் அழகு என்ற தத்துவம் நிரந்தரமானது என்கிற சென் மதத் தத்துவத்தின் அடிப்படையில் சூடியின் அழகியல் படைப்பு தத்துவமானது காலத்தால் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும். “தமிழா! தமிழா!” சூடியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு நூல். இலக்கிய உலகில் ஏற்றம் கண்டுவரும் இலக்கியச் சிற்பி சூடியை வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment