Monday, October 3, 2016

கரித்துவாரில் திருவள்ளுவர் அவமதிக்கப்பட்டாரா?


நாடு முழுவதும் திருக்குறளின் சிறப்பை பரப்பும் பணியில் ஈடுபடுவதில் பெருமை கொள்கிறேன். வேறு எந்த நூல்களுக்கும் இல்லாத வகையில் சிறப்புக்கு உரியது திருக்குறள். தொன்மை வாய்ந்த மொழியாம் தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுவதுடன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூலாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நூலை வடிவமைத்த திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கரித்துவாரில் முழு உருவச் சிலையை நிறுவ உள்ளேன். கங்கைக் கரையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை இல்லை என்று கூறுகின்றனர். தமிழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.


17 டிசம்பர் 2015 அன்று திருக்குறளை போற்றும் வகையில் டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் திருக்குறள் திருவிழா ஒன்று நடைபெற்றது. இவ்விழாவில் அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர். விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது, குன்றக்குடி பொன்னம்பல தம்பிரான் அடிகளாருக்கு திருவள்ளுவர் மக்கள் விழிப்புணர்வு விருது, பத்திரிகையாளர் கே. வைத்தியநாதனுக்கு விழிப்புணர்வு திருவள்ளுவர் ஆசிரியர் விருது மற்றும் சாகித்ய அகாதமி விருதுபெற்ற நாவலாசிரியர் ஜோ.டி. குருசுக்கு திருவள்ளுவர் இலக்கியம் மற்றும் அறிவியல் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இவ்விழாவில் தமிழ்க் குழவியின் குறளகம் சார்பில் மாணவிகள் ஆஷ்மி ஜெனிபர் மற்றும் ஜேஷா மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடுத்தகட்ட நிகழ்வாக கரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதற்கான அனுமதியும் முறையாக பெறப்பட்டது. இதற்கான துவக்க விழா 18 சூன் 2016 அன்று கன்னியாகுமரி காந்தி மன்டபம் முன்பாக நடைபெற்றது. அரசியல்வாதிகள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சிலையானது 7 அடி உயரமுள்ள சிலையாகும். அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

திருவள்ளுவரின் திருவுருவச் சிலையானது 12 அடி உயரத்தில் 4 டன் எடையில் சிற்பி சக்தி கணபதியால் வடிவமைக்கப்பட்டது. அச்சிலை சென்னை எடுத்துச் செல்லப்பட்டது. நாமக்கல் கூலிப்பட்டியில் சிற்பி எல்.எம்.பி. குமேரசன் என்பவர் திருக்குறள் மாணவர் இளைஞர் அமைப்பு சார்பில் ரூ 20 லட்சம் செலவில் 12 அடி உயரம், 4.50 டன் எடை கொண்ட திருவள்ளுவர் சிலையை கொல்லிமலை அடிவாரத்திலிருந்து எடுக்கப்பட்ட கல்லில் வடிவமைத்தார். அச்சிலையும் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. திருவள்ளுவர் திருநாள் கழகம் சார்பில் மாமல்லபுரம் சிற்பி கிருஷ்ணமூர்த்தி 5 அடி உயர திருவள்ளுவர் திருவுருவச் சிலையை உருவாக்கியிருந்தார். அச்சிலையும் சென்னை எடுத்துச் செல்லப்பட்டது.

சென்னை தியாகராய நகரிலுள்ள வாணி மகாலில் கங்கைக் கரையில் நிறுவப்படுவதற்கான சிலையை தருண் விஜய்யிடம் ஒப்படைத்தனர். அச்சிலை பத்திரமாக தொடர்வண்டி மூலம் கரித்துவாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு எடுத்துச் செல்லப்பட்ட சிலையானது சிற்பி சக்தி கணபதி வடிவமைத்த சிலையாகும். ஆனால் நாமக்கல்லில் வடிவமைக்கப்பட்ட சிலைதான் எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். 11 சூன் 2016 அன்று சென்னையில் வைத்து பேசும்போது நாமக்கல்லில் செய்யப்படும் சிலையை எடுத்துச்செல்ல இருப்பதாக தருண் விஜய் பத்திரிகைக்குத் தெரிவித்தார். அச்சிலையை யாரோ மாற்றிவிட்டனர். அச்சிலை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வள்ளுவர் சிலை போன்று இல்லை. வளைந்து நெழிந்த கலையிழந்த கம்பீரமற்ற நிலையில் உள்ளது.



இருப்பினும் அச்சிலை கங்கைக் கரையில் கர் கி பெளரி (சிவபெருமானின் பாதங்கள்) என்ற இடத்தில் அமைக்க தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஒருவாரமாக அங்கிருந்த கங்கை சபை, பாரதிய தீர்த்த புரோகிதர் சபை எதிர்ப்பு தெரிவித்து வந்தது. கங்கைக் கரையில் ஒரு சிலையை வைக்க அனுமதித்தால் நாளுக்கு நாள் சிலைகள் வைப்பது அதிகமாகிவிடும் என்றனர். சாதுக்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் சாதுக்கள் பல்லாண்டுகளாக குடியிருந்து வருகிற பகுதியாகும். அவ்விடம் சாதுக்களில் சதுக்கம் என்றே அழைக்கப்படுகிறது. கங்கையை புண்ணியமாகவும் கடவுளாகவும் அவர்கள் பாவிப்பதாலும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பதற்காக வந்து செல்கிற இடமாதலாலும் எதிர்ப்பு வலுக்கத் துவங்கியது.

திருவள்ளுவர் தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி கங்கைக் கரையோரத்தில் சிலை வைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சில சாதுக்களோ ஆதிசங்கர் மடத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சிலை வைக்கக்கூடாதென எதிர்ப்புத் தெரிவித்தனர் என தினமலர் ஒருகோணத்தில் செய்தி வெளியிட, அரசியல்வாதிகளின் சிலையை வைக்க அனுமதிக்க மாட்டோம் என சாதுக்கள் சொன்னதாக விகடன் இன்னொரு கோணத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இரண்டு செய்திகளுக்குமே பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. செய்திகள் எப்படி திரித்து வெளியிடப்படுகிறது என்பதனை வாசகர்கள் நின்று நிதானிக்க வேண்டும்.

இந்நிலையில் சங்கராச்சாரியார், திருவள்ளுவர் தென் இந்தியாவை சார்ந்தவர். அவருக்கும் உத்தரகாண்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் சிலையை கரித்துவாரில் நிறுவுவது அப்பகுதி மக்களின் உணவர்வுகளை பாதிக்கும் செயலாகும் என்றார். வங்கத்தில் பிறந்த ராமகிருஷ்ணருக்கு மடமும், விவேகானந்தருக்கு சிலையும் குமரி மண்ணில் இருக்கும்போது வடமாநிலம், தென்மாநிலம் என்று பொறுப்பான பீடத்தில் இருக்கும் ஒருவர் பொறுப்பின்றி பேசக்கூடாது. காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதநாடு; தமிழருக்கும் சேர்த்தே தாய்நாடு என்று சாமித்தோப்பு பாலபிரஜாதிபதி அடிகளார் அறிக்கை வெளியிட்டார்.

திருவள்ளுவர் சிலையை வைப்பதற்கான முயற்சியில் தருண் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கு சாதுக்கள், அகராக்கள் (மடத் தலைவர்கள்) சம்மதிக்கவில்லை. இந்த புண்ணிய தலத்தில் எதற்காக மனிதர்களின் சிலையை வைக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். அதனைத் தொடர்ந்து சங்கராச்சாரியா சவுக் என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது. 01 சூலை 2016 அன்று சிலை திறக்கப்பட வேண்டிய நாளில் மேலும் எதிர்ப்புகள் வலுப்பெறவே உத்தரகண்ட முதல்வர் கரிஷ் ராவத், ஆளுநர் கிருஷ்ணகாந்த் பால் ஆகியோர் விழாவை புறக்கணித்தனர்.

தருண் விஜய்யின் கடினமான முயற்சியால் 29  சூலை 2016 அன்று சங்கராச்சாரியா சவுக் என்ற இடத்தில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. அதற்குப் பிறகும் எதிர்ப்புகள் கிளம்பவே அச்சிலையானது நெகிழியால் சுற்றப்பட்டு, கயிற்றால் கட்டப்பட்டு ஒதுக்குப்புறமாக ஓரிடத்தில் கீழே படுக்க வைக்கப்பட்டது. அச்சிலை வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்த ஒட்டுமொத்த தமிழ் ஆர்வலர்களும் வருத்தத்தில் ஆழ்ந்தனர். தமிழ்க்குழவி, கோட்டாறு ராசகோகிலம் அரங்கில் கண்ணீர் விட்டு அழுதார். திருவள்ளுவர் அவமதிக்கப்பட்டதை அறிந்து தமிழ் ஆர்வலர்கள் பலர் இவ்வாறாக மிகுந்த வருத்தம் அடைந்தனர்.  

திருவள்ளுவர் குமரி மாவட்டத்தில் பிறந்தார் என்பதினை வட்டார மொழியின் அடிப்படையில் திருக்குறள் கேசவ சுப்பையா, முனைவர் பத்மநாபன், பள்ளம்துறை தொ. சூசைமிக்கேல் போன்ற ஆய்வாளர்கள் குமரி மண்ணிற்கு பெருமை சேர்த்து வரும் சூழ்நிலையில் அன்னாரின் திருவுருவம் அவமதிக்கப்பட்டிருப்பது குமரி மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும், திருவள்ளுவரின் புகழைப் பரப்ப தருண் விஜய் எடுக்கும் முயற்சிகளை யாரும் குறை சொல்ல வேண்டிய தேவையில்லை. யாரும் எடுக்காத ஒரு முயற்சியை தருண் விஜய் முன்னெடுத்துச் செல்கிறார். அதற்காக அவரை மனதார பாராட்ட வேண்டும்.

நல்ல மனிதர்களும், நல்ல இலக்கியங்களும் காலமெல்லாம் போற்றப்பட வேண்டும். அவர்கள் எம்மொழியைச் சார்ந்தவராயினும் அவர்கள் புகழ் போற்றப்படவும், அம்மொழி இலக்கியம் ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்க்கப்படவும் வேண்டும். நல்லவைகளை அறிந்து கொள்ளவும், அல்லவைகளை விட்டு விலகவும் நன்னெறி நூல்கள் உதவும். மனித வாழ்வை செம்மைப்படுத்த துணை நிற்கும். சாதி, இனம், மொழி, மாநிலம், நாடு கடந்து சங்கராச்சாரியார் போன்ற சாதுக்கள் சிந்திக்கவில்லை என்றால் அவர்கள் சாதுவாக வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் ஆவர். சில இடங்களில் சில சிக்கல்கள் இவ்வாறாக உருவாகும்போது பறவைகள் பலவிதம்; அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதை நினைவிற் கொள்க!


திருத்தமிழ்த் தேவனார், தெற்கு எழுத்தாளர் இயக்கம்.


No comments:

Post a Comment