Thursday, March 29, 2018

நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமாரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டி

26.03.2018 அன்று சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமாரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டி தெற்கு எழுத்தாளர் இயக்கத் தலைவர் திருத்தமிழ்த்தேவனார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1. பல ஏழைகளின் சிறிய வீடுகளுக்கு அதிக வரியும், பல வசதியானவர்களின் பெரிய வீடுகளுக்கு குறைந்த வரியும் நாகர்கோவில் நகராட்சி நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் நகராட்சியில் பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகளின் சாதி, மத, அரசியல், ஆள்பலம் மற்றும் ஏழை பணக்காரன் என்கிற பாரபட்சத்தால் நடந்தவையாகும். இதனால் நாகர்கோவிலில் சிறிய வீடுகளை சொந்தமாகக் கொண்டுள்ள ஏழைகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். வரி செலுத்த முடியாமல் அவதிப் படுகின்றனர். அதனால் அனைத்து வீடுகளுக்கும் மறுஅளவீடு செய்யப்பட வேண்டும்.
2. 31.03.2018 தேதிக்குள் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் ஆகியவைகளை செலுத்த வேண்டுமென தினசரி பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளார் நாகர்கோவில் நகராட்சி ஆணையர் கு. சரவணகுமார். ஆணையரின் உத்தரவை (ந.க.எண்.2726/2018/அ1) ஆணையராலே பின்பற்றத் தெரியவில்லை. 31.03.2018 நாளுக்கு முன்பாகவே வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க வருவாய் அதிகாரி குமார் சிங், வருவாய் அலுவலர்கள் சுப்பையன், முருகன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் இலட்சக்கணக்கில் வரி பாக்கி வைத்திருக்கும் பெருநிறுவனங்களின் ஒருசிலவற்றில் மட்டும் கண் துடைப்பிற்காக நடவடிக்கை எடுத்திருப்பது போல் நடித்தும், ரூ 500/- ரூ 1000/- பாக்கி வைத்ததுள்ள ஏழைகளின் குடிநீர் இணைப்புகளை குண்டர்களின் துணை கொண்டு துண்டித்தும் சென்றுள்ளனர். அவர்களின் அடவாடித்தனத்தாலும், ஆணையரின் உத்தரவாலும் தமிழக அரசின் நற்பெயரானது கேலிக் கூத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
3. 1992-1993 வருட முதல் அரையாண்டில் வீட்டு வரி, கடை வரியானது நாகர்கோவில் நகராட்சியால் கூட்டப்பட்டது. 1993-1994 வருட முதல் அரையாண்டில் மேற்படி வரியானது நாகர்கோவில் நகராட்சியால் இரண்டாவது முறையாகக் கூட்டப்பட்டது. 1993-1994 இரண்டாவது அரையாண்டில் மறுசீரமைப்பு என்கிற பெயரில் வரியானது மூன்றாவது முறையாகக் கூட்டப்பட்டது. 1991-இல் ரூ 412/- ஆக இருந்த கடை வரியானது இன்றைக்கு ரூ 3882/- ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டிய வரியானது விதிமுறைக்கு எதிராக வரி என்கிற பெயரில் நாகர்கோவில் மக்களை கொன்று வாட்டுகிறது.
4. 22.09.1994 அன்று நாகர்கோவில் நகராட்சிக்கு எதிராக W.M.P. No. 25207/1994, W.P. No. 16621/1994 என்கிற வழக்கானது சென்னையில் நடைபெற்றது. உயர்த்தப்பட்ட வரி தவறு என்றும், சீராய்வு மனு ஒழுங்காக பரிசீலனை செய்யவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி நாகர்கோவில் நகராட்சி 01.10.1993 30% வரியை குறைத்ததாக அறிவித்தது. இருப்பினும் அந்த வரியினை இரத்து செய்யாமல் நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாக வசூலில் தொடர்ந்து ஈடுபட்டது.
5. 30% வரியை குறைக்காத காரணத்தாலும், உயர்த்தப்பட்ட வரியை ரத்து செய்யாத காரணத்தினாலும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 03.08.1999 அன்று OS 285/1995 என புதிய வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, உயர்த்தப்பட்ட வரியானது நகராட்சி சட்டத்திற்கு எதிரானது. என்றும், அதனை ஆணையரோ அல்லது அவருடைய அதிகாரிகளோ வசூலிக்கக்கூடாது எனவும் தீர்ப்பு வழங்கியது. அதனையும் ஆணையர் நடைமுறைப்படுத்தவில்லை. உயர்த்தப்பட்ட வரியை வசூலிப்பதிலே அவர்கள் குறியாக இருக்கிறார்கள். இது கிட்லரின் சர்வாதிகார போக்கினை நினைவுப் படுத்துகிறது.
6. மக்கள் மன்றம் கலைக்கப்பட்ட நிலையில், மக்கள் மன்றத்தை அணுக முடியாத நிலை இருக்கும்போது, முறையீடு செய்ய வழியில்லாத நிலை இருக்கும்போது, இதுதான் வாய்ப்பென கருதி சட்டத்திற்கு புறம்பாக உயர்த்தப்பட்ட வரியை கட்டுங்கள். எங்களால் அதனை குறைப்பதற்கு ஒன்றும் செய்ய இயலாது என்கிற நாகர்கோவில் நகராட்சி ஆணையரின் போக்கு கட்டப்பஞ்சாயத்தை உறுதிபடுத்துகிறது.
7. குடிநீர் கட்டணம் செலுத்தியிருந்தாலும், சட்டத்திற்கு புறம்பாக உயர்த்தப்பட்ட வீட்டு வரியினை கட்டவில்லை என்பதற்காக ஏழைகளின் குடிநீர் இணைப்புகளை துண்டித்துவிடுவோம், குடிக்க நீர் தரமாட்டேன் என மிரட்டுவது வெள்ளைக்காரனின் கொள்ளைக்கார ஆட்சியைவிட கொடுமையானது.
8. உணவுக்கு உத்திரவாத சட்டத்தில் அருந்தும் தண்ணீரும் ஓர் அங்கம். நீரை விலைக்கு விற்பதே அடிப்படை உரிமைக்கு எதிரானது. உணவுக்கான உரிமை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை. அதற்கு எதிராக நாகர்கோவில் நகராட்சி ஆணையரின் போக்கு உள்ளது.
9. எனவே அரசானது, (1) தமிழக அரசுக்கு மக்கள் மத்தியில் கெட்டப் பெயரினை உருவாக்கும் நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். (2) மக்கள் மன்றம் அமைக்கப்படும் வரை மக்களிடம் வரி பிரிப்பதனை நிறுத்தி வைக்க வேண்டும். (3) குடிநீர் இணைப்பை துண்டித்து, குடிக்ககுடிநீர் தரமாட்டேன் என மிரட்டும் ரெளடிகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.


No comments:

Post a Comment