Tuesday, August 28, 2018

ஜூடி சுந்தர்


சூடி சுந்தரின், “தமிழா! தமிழா! எதுகை மோனை தெரியாமலே கவிதையாகிறது!
ஆணும் பெண்ணும் கைகோர்த்து நடந்தால் அது காதல்! தாயும் மகனும் கைகோர்த்து நடந்தால் அது பாசம்! கற்பனை, கருத்து, வடிவம், உணர்ச்சி ஆகிய நான்கும் கைகோர்த்து நடந்தால் அது கவிதை! சூடியின் கவிதை வரிகளில் இவை நான்கும் கைகோர்த்து நடப்பதனைக் காண்கிறேன். அதனால் அவர் கவிதைமீது எனக்குள் ஒரு இனம்புரியாதக் காதல் உண்டு.
கவிஞர் ஒருவர் தனது கவிதை வழியாக எட்டாத உயரத்தைத் தொட்டுவிட முடியும். நல்லதொரு ஆராய்ச்சியை சமர்பிக்க முடியும். கடவுளை சகட்டுமேனிக்கு கேள்வி கேட்க முடியும். பூ பூப்பதற்கு முன்பாக அதில் குடியேறிவிட முடியும். போகாத இடத்திற்கு பயணிக்க முடியும். எமனோடு மல்லுகட்ட முடியும். சமூகத்தில் புரட்சியை உருவாக்க முடியும். இதில் தன்னை எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி நிருபித்து இருக்கிறார் கவிஞர் சூடி.
தூண்டிலை எடுத்துக்கொடுத்து கணவனை மீன்பிடிக்க அனுப்பாமல் எழுதுகோலைத் தூக்கிக்கொண்டு போர் முனைக்கு புறப்பட்டு இருக்கிறார். அதனால்தான் அவரின் கவி வரிகள் பட்டை தீட்டப்பட்ட வைரம்போல் பிரகாசிக்கிறது. எதுகை, மோனை, சீர், தளை, யாப்பு தெரியாமலே பிடிவாதமாய் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதுதான் அவரது கவிதைக்கு அழகு சேர்க்கிறது. தமிழா! தமிழா! என்கிற கவிதையில் தமிழன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதனை, ‘எத்துன்பம் வந்தாலும் தமிழா! எதிர் நீச்சல் போட்டுவிடு தமிழா! தன்மானம் காத்திடுவாய் தமிழா! தடைகளை நீ தகர்த்துவிடு தமிழா! எனத் தனது எழுதுகோல் மூலம் சிலம்பம் விளையாடுகிறார்.
‘தமிழ் இனி மெல்ல சாகும் என்ற தமிழ் கவிஞரின் தமிழ் கவிதையை விழுங்கி ஏப்பமிடும் அளவற்கு, ‘உலகத் தமிழரே! தமிழால் ஒன்று கூடுவோம் என்கிறார். சாதி, மதம் கடந்து சாதிக்க வேண்டியது இன்னும் பல இருக்கிறது. நம்மை பிளவுபடுத்தி சுயலாபம் காண பலர் துடிக்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் அதனைக் கடந்து சரித்திரம் படைக்க, ‘சங்கம் வளர்த்த தங்கத் தமிழா! தன்மானம் காத்திடுவோம்! என அழைக்கிறார்.
எரிக்கப்படாத நெகிழி, தொய்வகம் போன்ற பொருட்களை எரித்ததால் உருவான புகையால் ஓசோன் பாழ்பட்டுவிட்டது. இது வருங்கால சந்ததியருக்கான வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது என்பதனை. ‘எரிக்கப்படாத பொருள்களை எரித்ததால் விழுந்தது ஓட்டை! என்ற தனது வைர வரிகளால் காரம் சிறுத்து இயம்புகிறார். ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் மூலையில் உட்கார்ந்து இருக்கும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் காற்றால் ஓசோன் விரிப்பில் கீறல் விழுந்து கொண்டிருக்கிறது. இது சாதாரண விசயமல்ல. பெற்ற பிள்ளையை பலி கொடுப்பதற்கு சமம். பலி கொடுக்கப்பட்ட பிறகு எப்படி உயிரை மீட்க முடியாதோ அதுபோல் இது பலியிடும் வேட்டு என தனது கோபக் கனலைக் கொட்டுகிறார். ஆனால் அவரது கோபக்கனல் அவரது வீட்டில் பெட்டிப் பாம்பாய் படம் எடுத்து நிற்கிறது.
உலகத்தைப் படைத்த கடவுள் தனது வேலையை செவ்வனே செய்து முடித்திருக்கிறார். உயிரினங்கள் வாழ்வைப் பாதுகாக்க ஓசோனைப் போர்வையாகத் தந்திருக்கிறார். அப்போர்வையை மனிதர்கள் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘உலகத்தைக் காத்திடவே இறைவன் படைத்த போர்வை ஓசோன்! இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்ட பிறகும் நாம் அதில் தனிக்கவனம் செலுத்தவில்லை என்றால், ‘பூலோகம் இனி மிஞ்சுமா? உயிரினங்கள் வாழ முடியுமா? என்கிற அற்புதமான கேள்விக்கு உடலை முன்னுதாரணமாக வைத்து, ‘உன் உடம்பை நோகடித்தால் உயிர் மிஞ்சுமா? என சிந்திக்கத் தூண்டுகிறார். இங்கு கவிதையானது உயிரோட்டம் பெறுகிறது. அதுதான் கவிஞர் சூடிக்குரிய சிறப்பு.
‘சந்தேகம் என்ற நோய்க்கு சந்தோசம் இழந்து விட்டு சரிந்தவர்கள் ஏராளம் என்பது சூடியின் கவி வரிகள். தற்கொலை செய்வது குற்றம் என்கிற இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டாலும், ‘தற்கொலை செய்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை என்பது நபிமொழி வாக்கு. ‘எப்பொழுதும் சந்தோசமாக இருங்கள் என்பது விவிலிய வாக்கு. கணவன் மனைவி மத்தியில் ஆயிரம் சந்தேகங்கள் வரலாம். அதனைப் பேசி நிவர்த்தி செய்ய வேண்டும். “எந்தவித இடறல் வந்தாலும் வாழ்ந்து பார்க்க வேண்டுமே தவிர, மாய்ந்து விடுவது அழகல்ல; கோழைத்தனம் என்பதனை வெளிப்படுத்துகிறார்.
பூமியில் வாழும் வாழ்க்கை ஒரேயொரு முறைதான் கிடைக்கும். மீண்டும் அப்பிறப்பு கிடைப்பதில்லை. அதனால் கிடைத்த வாழ்வு இனிப்போ அல்லது கசப்போ அல்லது இரண்டும் கலந்தோ அதனை அனுபவித்து வாழ வேண்டும். இவ்வுலகில் கை, கால், இல்லாதவர்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை சாத்தியம் ஆகும்போது உனக்கு ஏன் ஆகாது என்பது குறித்து சிந்திக்க வேண்டுகிறார்.
காற்று ஓய்வெடுத்துக் கொண்டதாய் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுவரையும் அறிவித்தது இல்லை. நிலவு கெட்டுப் போனதாய் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சியை இன்னும் சமர்பித்துவிடவில்லை. அவ்வகையில் பிறருக்கு சுவாசமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமே தவிர விரக்தியடைந்து தன்னைத்தானே கொலை செய்வது சரியல்ல என்பதனை, ‘தன்னைத்தானே கொலை செய்யாதீர்! என்ற கவிதை மூலம் வாழ்க்கைப் பாடம் புகட்டுகிறார். ‘வாழ்க்கை வாழ்வதற்கே! வாடி உயிர் மாய்ப்பதேன்? வாருங்கள்! சிந்தித்தால் மாய்க்கும் வரலாற்றை மாற்றிடலாம் என்கிற நம்பிக்கையை விதையாக விதைத்துச் செல்கிறார்.
விழுந்து உயிர் விட்டாலும் தென்னங்கீற்றுகள் கூரையாய் உயர்ந்து நிற்பதுபோல் பெண்கள் உலகில் சிறந்து வாழ வேண்டும் என்பதை சிறப்புடன் சீர்தூக்கிக் காட்டுகிறார். மனிதர்கள் மறுதலிக்கும் தொழுநோயாளியாக கணவன் இருந்தாலும் அவனை தோளில் சுமப்பவள் மனைவி. அப்படிப்பட்டவளின் வாழ்க்கை சுதந்திரமாகிட வேண்டும் என்பதனை தெளிவுடன் முன்வைக்கிறார். ‘அடக்கி ஆளும் அவலநிலை அகிலத்தில் இனிமேல் ஒழியட்டும்! அவனியில் பெண்மை சிறந்திடவே ஆக்கம் ஊக்கம் பெருகட்டும்! என்கிற அவரின் கவி உரைவீச்சு மகத்துவம் பெறுகிறது.
மூங்கில் காட்டிலில் எந்த மூங்கில் புல்லாங்குழல் ஆகும் என சொல்ல முடியாது. இல்லத்தில் இல்லத்தரசியாக இருக்கும் திருமதி அப்படியல்ல. அவள் என்றைக்கும் இல்லத்தில் ஒரு வெகுமதியே! இல்லத்தில் இல்லாள் இல்லை என்றால் அங்கு குடித்தனம் கெட்டுப் போயிடும். ஆணின் வாழ்க்கை பூச்சியம் ஆகிவிடும் என்பதனை கவிஞர் சூடி, “இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை! என தத்ரூபமாக விளக்குகிறார்.
‘காலம் கண் போன்றது; நேரம் பொன் போன்றது, ‘காலத்தோடு பயிர் செய் என்பது பழமொழி. நேரத்தை நாம் வீணாக்கிவிட்டால் மீண்டும் அந்நேரம் நமக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. காலத்தைக் கருத்தாகக் கொண்டு பணி செய். அவ்வாறு பணி செய்தால் உள்ளத்தில் குடியிருக்கிற இருள் நீங்கிவிடும். வாழ்வு வளம் பெறும் என்கிற வாழ்க்கைத் தத்துவத்தை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். ‘காலம் நேரம் கருத்தாக காத்து வாழ்வை நகர்த்திவிட்டால் காரியம் பலவும் சாதிக்கலாம்; காரிருள் வாழ்வில் நீக்கிடலாம் என இருளை அகற்ற வழிகாட்டுகிறார்.
அண்மையில் தமிழக அரசின் குடிநீர் தேவைக்காக 95 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. ஒவ்வொரு ஆண்டும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வருவதும், அப்பொழுது திருப்திபடுத்த ஏதாவது செய்வதும், மக்கள் மெளனம் காப்பதும் வேடிக்கையாகவே நடந்து வருகிறது. ‘வருமுன் காப்போம் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மழை நீரை சேமிக்காமல் விட்டு விடுகிறோம். பின்பு, திண்டாடுகிறோம்; அல்லல்படுகிறோம். இதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதனை, ‘மழை நீர் தன்னைச் சேமித்தால் மகிழ்வாய் நாமும் வாழ்ந்திடலாம்! மண்ணில் வெப்பம் குறைந்திடும்; மனதில் பெருமை நிலவிடும்! என அதன் நோக்கத்தையும், நலனையும் தெள்ளத்தெளிவாக எடுத்து முன்வைக்கிறார்.
தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கிற்குள் மனித நேயப் பண்புகளை எடுத்துப் போட்டு கடவுளின் வாக்காய் கவிதைகளைத் தந்திருக்கிறார். அவ்வாக்குகள், சூளையில் வைத்து சுட்டெரித்து பக்குவப்படுத்தி பதம் பார்க்கத் தந்ததுபோல் பலமுள்ளதாகவும், பலனுள்ளதாகவும் இருக்கிறது. அவ்வாக்கிற்கு முதுகெலும்பாய் இருக்கும் மனிதநேயப் பண்புகளை மறந்தவர்கள் மனிதர்கள் அல்ல; மாக்கள் என்பதனை, ‘மனிதநேய பண்புதனை மறந்தவர் எவரும் விலங்கன்றோ? எனக் கேள்விக்கணை மூலம் வெளிப்படுத்துகிறார்.
புறநானூறு ஒன்று, “தமிழா! தமிழா! நூல் வடிவில் புறப்பட்டு வருகிறது. அன்று சிறுவன் ஒருவன் கையில் வேல் ஒன்றினைப் பிடித்துக்கொண்டு போருக்கு சென்றதுபோல், இன்று எழுதுகோல் ஒன்றினைப் பிடித்துக்கொண்டு வீதிக்கு வந்திருக்கிறார் கவிஞர் சூடி. அவரது எழுதுகோல் எதிரியைக் குத்தும் வேலல்ல; கல்லாமையை செதுக்கும் உளி என்பதனை, ‘கலையாம் கல்வியைப் பயின்றிடுவோம்; கசடறக் கற்று மகிழ்ந்திடுவோம் என்பதன் மூலம் கல்வியின் மகத்துவத்தை போதிக்கிறார். கல்வி மட்டும்தான் மனிதனுக்கு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதைத்தவிர நல்ல மருந்து வேறில்லை என்பதனை, ‘மனப்புண் ஆற்றும் நல்மருந்தாம்! மனிதராய் மாற்றும் சொல்விருந்தாம்! மரகத ஒளியைத் தந்திடுமாம்! மாட்சி வழியைப் பொழிந்திடுமாம்! என்ற கவி வரிகளால் சுட்டுகிறார்.
முயற்சி இல்லையென்றால் எதுவுமில்லை. முயற்சி ஒன்றுதான் ஒரு மனிதரை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். ஒருவேளை உணவிற்கே வழியில்லாமல் அலைந்து திரிந்த பயோனியர் பின்னாளில் பயோனியர் பேருந்து, பயோனியர் மின்சாரம், பயோனியர் கரிவாயு உற்பத்திப் பட்டறை, பயோனியர் தொழில் பயிற்சி மையம், பயோனியர் ஓட்டுத் தொழிற்சாலை, நாகம்மாள் ஆலை, பயோனியர் தபால் சேவை என நாகர்கோவிலில் ஒரு தொழில் அதிபதியாக வலம் வந்தார். அப்பொழுது அவரிடம் உங்கள் வெற்றிக்கு காரணம் என்னவெனக் கேட்டபோது, “எதுவுமில்லை; கடின முயற்சிதான் என்றார். அதைத்தான் சூடி, “முன்னேற நினைத்தால் முயன்றிடுவாய்; முயன்றால் வாழ்க்கை பொலிவுறுமே; முயல் ஆமையிடம் தோல்வியுறும்; முயலாமை தோல்வி தரும் என அழகுபட முயலை தோற்கடித்த ஆமை கதை வாயிலாக எடுத்து இயம்புகிறார்.
ஆசிரியர் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதனை ஆசிரியராக வாழ்ந்து அனுபவித்துக் கொண்டே கவிதை வடித்திருக்கிறார் சூடி. ஆசிரியர் என்பவர், “அகத்தில் ஒளியை ஏற்றிடுவார்; ஆணவ இருளை அகற்றிடுவார் என்கிறார். ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக ஆசிரியர் இருக்க வேண்டும் என்பதனை தெளிவுபடுத்துகிறார். ஒழுக்கம் இல்லாத ஆசிரியர் கல்வி கற்பிப்பதற்கே தகுதியற்றவர் என்பதனை மறைமுகமாகச் சுட்டுகிறார். நல்ல ஆசிரியர் ஒருவர் வாய்த்தால் அவ்வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் நல்லவர்களாக வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். தொலைக்காட்சிப் பெட்டிகூட தொல்லைக் காட்சியாக மாறி கல்வி கற்ற பெண்களை எந்தவகையில் எல்லாம் கெடுத்துவிடுகிறது என்பதனை தொ(ல்)லைக் காட்சி கவிதை மூலம் பட்டியலிடுகிறார்.  
கவிதைகள் எளிமையான நடையில் இருப்பது மட்டுமின்றி தங்கு தடையின்றி விறுவிறுப்பாக அதனை நகர்த்தியிருக்கின்ற விதம் ஆச்சரியப்பட வைக்கிறது. சொல்ல வரும் செய்திகள் எல்லோரையும் எட்ட வேண்டும் என்பதற்காக பொறுப்புணர்ச்சியோடு செய்திகளை கவி நடையில் எளிமைப்படுத்தி தந்திருக்கிறார். ஒவ்வொரு வரிகளும் உயிர்பெற்று உணர்வு நடனம் புரிகின்றன. “அழகிய பொருட்கள் நிலையானது அல்ல; ஆனால் அழகு என்ற தத்துவம் நிரந்தரமானது என்கிற சென் மதத் தத்துவத்தின் அடிப்படையில் சூடியின் அழகியல் படைப்பு தத்துவமானது காலத்தால் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும். “தமிழா! தமிழா!” சூடியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு நூல். இலக்கிய உலகில் ஏற்றம் கண்டுவரும் இலக்கியச் சிற்பி சூடியை வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்!

கீழப்பாவூர் ஆ. சண்முகையா


கீழப்பாவூர் ஆ. சண்முகையாவின், திருமந்திரம் தமிழ் அமுதம் வெளியீட்டிற்கு வருகிறவர்கள் கற்கிற கூட்டமல்ல!

கீழப்பாவூர் ஆ. சண்முகையா எழுதிய, “திருமந்திரம் தமிழ் அமுதம் – முதல் மந்திரம் ஓர் அறிமுகம்” என்கிற நூலை வாசித்தபோது திருமந்திரத்தின் மகத்துவத்தை உணர முடிந்தது. இன்னும் ஆழமாக அறிய வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது.

இந்த உலகத்தில் அருளாளராக வாழ்ந்தவர் திருமூலர். அழுக்காறு, ஆசைகளை முற்றிலுமாகக் களைந்தவர். அப்படிப்பட்ட தனக்கு மீண்டும் ஒரு பிறப்பு அருளப்படுவது ஏனோ என கடவுளிடம் முறையிடுகிறார். அதற்கு கடவுள், “நீ வினை தீர்க்க பிறக்கவில்லை! நீ தமிழ் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே பிறப்பெடு!” எனப் பணிக்கிறார். அவ்வாறாக, தமிழ் மொழியில் இறக்கிவைக்கப்பட்ட தெய்வீக நூலை தமிழ் மொழி தெரிந்தவர்கள் வாசிக்காமல் இருப்பது பேரின்பத்தை அறிந்துகொள்ள விரும்பாததையே காண்பிக்கிறது.   

கடவுளின் அருளால் மனிதப் பிறப்பெடுத்தவர் திருமூலர், ஓராண்டு முழுவதும் ஒரு மந்திரத்தை ஓதி, அப்படியே மூவாயிரம் ஆண்டுகள் மூவாயிரம் மந்திரங்கள் ஓதியதே திருமந்திரமாக அறியப்படுகிறது. ‘மூலன் தமிழ் செய்த மூவாயிரம் தமிழ்’ என்பதால் இந்நூலுக்கு தமிழே மந்திரமாக அறியப்படுகிறது. அந்த மந்திரங்களுக்கு திருமூலரே, ‘தமிழ்’ என பெயரிட்டிருப்பது சிறப்புதலுக்கு உரியதாகிறது.

முதல் தந்திரத்தில் முதலில் இடம்பெறுவது, ‘உபதேசம்’. குழந்தைக்கு தாய், தகப்பனார் கூடவே இருந்து விளக்குவதுபோல் குரு ஒருவர் சீடருக்கு கடவுளை விளக்குவதே உபதேசம். நல்ல பாத்திரத்தில் பசும்பாலை வைக்கவில்லை என்றால் அது திரிந்துவிடும். பால், நல்ல பால்தான். பாத்திரத்தின் குற்றத்தால் பயனற்றுப் போகிறது. மனிதர்கள் நல்லவர்கள்தான். அவர்கள், மும்மல மயக்கத்தால் நிலை திரிந்து போகிறார்கள். அம்மலம் நீங்கி ஞானம்காண திருமந்திரத்தின் சிறப்பு இந்நூல் வாயிலாக முன்னிறுத்தப்படுகிறது.

உடம்பு, உயிரைப் பற்றிப்பிடித்து பிறப்பதற்குக் காரணம் வினைப் பயனே. எல்லா உயிர்களும் ஒன்றே. உடல் என்பது செய்த வினைகளின் வடிவம். உயிர் அழியாததுதான். ஆனால் அவை கடவுளாக முடியாது. உப்பின் பிறப்பிடம் நீராக இருந்தாலும் உப்பும் நீரும் ஒன்றல்ல. அதுபோல உயிர் வேறு; கடவுள் வேறு, உடலை பிறவிப் பயனுக்கேற்ப அமைக்கும் கடவுள், உயிரைப் படைப்பதில்லை. எவ்வளவுதான் அறிவியல் வளர்ச்சி வந்தாலும் ஆண்டாண்டு காலம் நிலைக்கக்கூடிய அழியாத மெய்யியல் தத்துவம் இதுதான். ஏனைய மதங்கள், விஞ்ஞானம் வளரவளர அழியக்கூடியவையே.

‘உள்ளத்தை தகுதியாக்க மூன்று வழிமுறைகள்’ என்கிற தலைப்பில், நமக்கு அதிகமாக இருக்கும் செல்வம், மற்றவர்களின் பசியைப் போக்குவதற்குப் பயன்பட வேண்டும் என்கிறார். மற்றவர்களுக்கு பகிர்ந்து  கொடுக்காமல் தான் மட்டும் சேர்த்து வைத்துக்கொண்டு வாழ்வதும் ஒருவகையில் உயிர்க் கொலைதான். என கீழப்பாவூர் ஆ. சண்முகையா கருத்தினை முன்வைக்கிறார். உண்ண உணவு கிடைத்தால் காகம் தான் மட்டும் உண்பதில்லை; கூவி அழைத்து சேர்ந்தே உண்ணும். அதனால்தான் இயேசு, ‘ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் செல்வந்தர்கள் பரலோக உலகில் நுழைய முடியாது’ என்றார். ஏனெனில் வசதியுள்ளவர்கள் பல உயிர்க் கொலைகளுக்கு காரணமாக இருக்கிறார்கள். மாடமாளிகைகளில் வாழும் போதகர்களும், துறவிகளும் உயிர்க் கொலைகளை தினமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பெண் பறவை முட்டை இடுகிறது. ஆண் பறவை துணை நிற்கிறது. குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியேறிய பிறகு தாய்ப் பறவை தனியே, ஆண் பறவைத் தனியே, குஞ்சுகள் தனியே என பிரிந்து அதனதன் பாதையில் பயணிக்கத் துவங்கி விடுகின்றன. மனிதன் மட்டுமே தன் பிள்ளை, தன் வீடு, தன் வருமானம் என சுற்றித் திரிகிறான். தான் உழைத்து வளர்த்த குஞ்சுகள் இப்படி ஆகிவிட்டனவே என்று அவைகள் வருத்தப்படுவது இல்லை. ‘ஆசையைத் துற’ என்பதற்குப் பதிலாக, ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்கிற பொய் தத்துவங்கள் மக்களை கவர்ந்து இழுக்கிறது. பாச வேரறுத்து கடவுளோடு இணைவதே சாலச்சிறந்தது என்கிற மெய்யியல் தத்துவம் மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக வேர்பிடிக்கவில்லை. அதனைக் கொண்டு சேர்க்கிற பணியினைச் செய்யத்தான் கீழப்பாவூர் ஆ. சண்முகையாவை தென்குமரி தமிழ்ச் சங்கம் அழைத்து வந்துள்ளது.

அன்னப்பறவைக்கு பாலையும் தண்ணீரையும் உணவாகக் கலந்து வைத்தாலும், அது பாலை மட்டும் பருகிவிட்டு நீரை அப்படியே விட்டுவிடும். அதுபோல தீய சிந்தனைகளையும், செயல்களையும் அப்படியே விட்டுவிட்டு கடவுளை அடைய வேண்டும். பாலுக்குள் நெய் மறைந்திருக்கிறது; விதைக்குள் செடி மறைந்திருக்கிறது. அதுபோல் மனித உயிருக்குள் கடவுள் மறைந்திருக்கிறார். மூங்கில் உரசும்போது நெருப்பு உருவாகிறது. இதையே திருமூலர், மூங்கிலுக்குள் ஒளிந்திருக்கும் நெருப்பைப்போல உயிருக்குள் உயிராக, கருவுக்குள் கருவாக கடவுள் மையம் கொண்டிருக்கிறார் என்கிறார். கடவுளைத் தேடி அலைய வேண்டியத் தேவையில்லை. உயிருக்குள் உயிராக இருக்கும் கடவுளை அறிவதே ஆன்மிகம்; திருமந்திரம்.
கீழப்பாவூர் ஆ. சண்முகையாவின், “திருமந்திரத் தமிழ் அமுதம்” மற்றும் “திருமந்திரம் தமிழ் அமுதம் – முதல் மந்திரம் ஓர் அறிமுகம்”  ஆகிய நூல்களை வெளியிட்டபோது கோட்டாறு இராசகோகிலா தமிழ் அரங்கில் முன்னூறுக்கு மேற்பட்ட நபர்கள் வருகை புரிந்திருந்தார்கள். தமிழ் அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருமந்திரத்தை ஆழமாக ஆய்வுசெய்து மிகத் தெளிவாக வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும், ‘திருக்குறள்’ கேசவ சுப்பையா மற்றும் ‘இலக்கியச் சோலை’ சிவ சுயம்பு ஆகியோரின் வகுப்புகளில் பத்திலிருந்து பதினைந்து நபர்களைத்தான் பார்க்க முடிகிறது.

கீழப்பாவூர் ஆ. சண்முகையாவின் நூல் வெளியீட்டின்போது கூடி வருகிறவர்களில் பெரும்பாலானோர் கற்றுக்கொள்ள வருகிற கூட்டமல்ல; வேடிக்கைப் பார்த்துவிட்டு இரவு உணவை உண்டு களிக்கவரும் கும்பல் என்றுதான் கருத இடம் இருக்கிறது. ‘சாப்பாடு தீர்ந்துபோச்சு. வந்தவர்களை சரியாகக் கவனிப்பதில்லை. இப்படியா கூட்டம் நடத்துவது” என்று ஒருவர் என்னிடம் கூறிச்சென்றார். அவ்வாறு சொன்னவர் எனக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர். இந்த உடலால் நாம் பெறுவது சிற்றின்பமே. பேரின்பம் என்பது இறைவனோடு இணைதல் என்கிற தத்துவம் திருமந்திரத்தை வாசித்தால்தானே தெரியும்.

கீழப்பாவூர் ஆ. சண்முகையா எழுதியிருக்கிற மேற்படி இரு நூல்களும் திருமந்திரத்தை இன்னும் ஆழமாக கற்பதற்கு தூண்டுகின்ற நூல். அது உங்கள் ஆர்வத்தைத் தூண்டுகின்ற ஒர் அறிமுக நூல். அப்பணியை அவர் கச்சிதமாகவே செய்திருக்கிறார். அந்நூலை வாசிப்பவர்களுக்குத்தான் திருமந்திரத்தை இன்னும் கற்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும். அவ்வாறு தோன்றியவர்கள்தான் கேசவ சுப்பையா மற்றும் சிவ சுயம்பு ஆகியோர் நடத்தும் திருமந்திரம் வகுப்புகளில் வந்து அமருவார்கள். அவர்களும் கட்டணமின்றி திருமந்திர வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கரு இல்லாத முட்டையும், குரு இல்லாத வித்தையும் பயனற்றவை. திருமூலருக்கு குருவாக நந்தியாகிய சிவபெருமானே இருந்து உபதேசித்தார். மாணிக்கவாசகருக்கு சிவனே உபதேசம் செய்தார். கடவுளின் செல்லப்பிள்ளையாக ஞானசம்பந்தர் வாழ்ந்தார். அவர்களுக்கு குருவாக இருந்தவர் அகில உலகை ஆளும் சிவமாகிய கடவுள். எல்லோருக்கு அப்பாக்கியம் கிடைப்பதில்லை. இருப்பினும், பாரதியாருக்கு ஒர் குள்ளசாமியும், விவேகானந்தருக்கு ஒர் இராமகிருசுணரும் குருவாக இருந்ததுபோல் நாமும் ஒருவரை குருவாக, ஆன்மிக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

குருவானவர் ஒரு சூரிய காந்தக்கல். எங்கோ தொட முடியாத உயரத்தில் இருக்கும் சூரிய ஆற்றலை, சூரிய காந்தக்கல் எடுப்பதுபோல ஆனந்த ஒளியாகத் திகழும் இறையாற்றலை குரு வழியாகப் பெற முடியும் என திருமூலர் உரைக்கிறார். மழையில் இரு பாத்திரங்கள் நன்றாக நனைகின்றன. சுட்ட மண் பாத்திரமோ அப்படியே இருக்கிறது. சுடாத மண் பாத்திரமோ கரைந்து, இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுகிறது. சுட்ட மண் பத்திரமாக மாற வேண்டுமென்றால் கடவுளின் அருள் வேண்டும். அதனை அடைவதற்கு வழிகாட்டியாக குரு வேண்டும். குமரி மாவட்டத்தைப் பொறுத்தளவில் திருமந்திரத்தை ஆத்மார்த்தமாகப் போதிப்பதன் மூலம் கேசவ சுப்பையா

திருமந்திரம், தமிழர் மத்தியில் பரவிட வேண்டும் என்பதற்காக 200 பக்கங்கள் நிறைந்த மேற்படி நூலை வெறும் 30 ரூபாய்க்கு கொடுத்து வருகிறார்கள். தமிழர்கள், திருமந்திரத்தை வாழ்வின் மந்திரமாகக் கொண்டால் தமிழர் பூமியானது தலையாய பூமியாக விளங்கும். இப்பணியை துடிப்புடன் செய்துவரும் வழக்கறிஞர் இராசகோபால் உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியவர். ஒவ்வொரு தந்திர நூல்களையும் சிறப்பாக செய்துவரும் கீழப்பாவூர் ஆ. சண்முகையாவை வாழ்த்துகிறேன். எந்தவொரு இலாப நோக்கமின்றி நேரத்தையும் பணத்தையும் அவர்கள் செலவு செய்வது இறையருளால் எழுந்த சிந்தனையின் வெளிப்பாடே. அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். அவர்கள் வெளியிடும் நூல்களை அர்த்தத்தோடு வாசியுங்கள். வாழ்வியலின் எதார்த்தத்தை உணர்ந்து கொள்ளுங்கள்!

கு. பச்சைமால்


தமிழ்ப் புலவர் கு. பச்சைமாலின்
திராவிடம் தமிழாகினும் தமிழராகாது!

வணக்கம்! தாங்கள், தமிழாலயம் அமைப்பின் இயக்குநராக இருந்து தமிழுக்காக திறம்பட செயல்பட்டு வருகிறீர்கள் என்பதை குமரி மண்ணில் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலும் பலர் அறிந்திருக்கிறார்கள். என்னைப் பிறருக்கு அறிமுகப்படுத்தும்போது, “இவர் என் இனிய நண்பர்; தமிழ் ஆர்வலர்” என்பீர்கள். அந்தவகையில் நானும் ஒரு தமிழ் அறிஞரோடு கைகோர்த்து நடந்தேன் என்கிற மகிழ்ச்சி அடியேனுக்கு உண்டு.

தங்களிடம் ஏதாவது ஒரு நூலை பெயர் சொல்லி கேட்கும்போது, ‘தம்பி! உங்களுக்கு இல்லாததா? என்று மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் வாசிக்கத் தந்திருக்கிறீர்கள். சில நூல்களை அன்பளிப்பாகவும் தந்திருக்கிறீர்கள். வயது வித்தியாசம் பாராமல் என்னோடு நட்பாக பழகியிருக்கிறீர்கள். அந்தவகையில் அடியேனுக்கு தங்களிடம் எப்பொழுதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. தங்கள் அமைப்பின் செயலாளர்களாக இருக்கும் வழக்கறிஞர் இல. தெய்வனாயகப் பெருமாள் மற்றும் நா. இனியன் தம்பி ஆகியோரும் அடியேனுக்கு நல்ல நண்பர்கள்தான்.

ஆந்திரம் நடத்திய தமிழ் இனப் படுகொலைக்கு எதிரான கண்டனக் கூட்டம் கோட்டாறு இராசகோகிலம் அரங்கில் 15.04.2015 அன்று புதன் மாலை 5.00 மணிக்கு நடைபெற இருப்பதான அறிவிப்புச் செய்தி ஒன்றினை தங்கள் அமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் இல. தெய்வனாயகப் பொருமாள் 12.04.2015 அன்று மாலை 7.30  மணிக்கு நாகர்கோவில் அலெக்சாந்தர் அச்சகச் சாலையில் வைத்து என்னைப் பார்த்தபோது கொடுத்தார். அதனைக் கொடுத்த அவர், ‘கூட்டத்திற்கு கண்டிப்பாக வந்துவிட வேண்டும் என்றார்.

அவர் கொடுத்த அறிவிப்பை வாசித்துப் பார்த்தேன். அதில், ஐந்து தீர்மானங்கள் எழுதப்பட்டிருந்தன. அந்த ஐந்து தீர்மானங்களையும் தாங்கள் கோட்டாறு இராசகோகிலம் அரங்கில் வைத்து வாசித்து தீர்மானம் நிறைவேற்றப் போவதாக இருந்தது. அதில், மூன்றாவது தீர்மானம், திராவிட கட்சிகள் தங்கள் கட்சி பெயர்களில் திராவிடம் பெயரை நீக்கிவிட்டு தமிழ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கழகம் என்றால் சூதாட்டம் என்று பொருள்படும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு ஒருமுறை சொன்னார். அது பத்திரிகைகளில் செய்தியாக வந்திருந்தது. ஒருவேளை அது உண்மையாக இருந்தால் அப்பெயரை மாற்றச் சொல்லியிருக்கலாம்.

தாங்களோ, ‘திராவிடம் என்கிற வார்த்தையை, ‘தமிழ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப் போகிறீர்கள். இதனுள் உட்புதைந்து கிடப்பதோ தமிழனைத் தவிர வேறு எவரும் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமரக்கூடாது என்பதுதான் தங்களின் எண்ணமாக இருக்கும். தமிழர் காமராசர் போன்று ஒருவர் வந்துவிடக் கூடாதா என்கிற ஆதங்கமும் தங்களுக்கு இருந்திருக்கலாம். அப்படி என்றால் வைகோ, விசயகாந்த், கருணாநிதி ஆகியோரை இனிமேல் தாங்கள் எந்தவொரு மேடையிலும் புகழ்ந்து பேச மாட்டீர்கள் என நம்புகிறேன். இனிமேல் தெலுங்கர்களின் கட்சிகளைச் சார்ந்தவர்கள் எவரும் தமிழாலயம் அமைப்புக் கூட்டத்திற்கு வரக்கூடாதென அறிவிப்பு விடுப்பீர்கள் எனவும் நம்புகிறேன்.

தமிழுக்காக, தமிழருக்காக பேசும் தாங்கள் எழுதி வைத்திருக்கிற தீர்மானத்தில் ஆங்கிலத்தை கலந்து எழுதியிருக்கிறீர்கள். அது அடியேனுக்கு வருத்தமாக இருந்தது. தாங்கள் வாசிக்க இருக்கும் முதல் தீர்மானத்தில், ஆந்திர அரசை சனாதிபதி, ‘டிசுமிசு செய்ய வேண்டும் என்கிறீர்கள். ‘டிசுமிசு என்பதற்கு தமிழ்ப் புலவராகிய தங்களுக்கு தமிழ் வார்த்தைத் தெரியாதா? உங்களுடைய இரண்டாவது தீர்மானத்தில், தேர்தல்களில் பிற மாநிலத்தவருக்கு, ‘டிக்கட் கொடுக்கக்கூடாது என்கிறீர்கள். டிக்கெட் என்பதற்கு தமிழ்ப் புலவராகிய தங்களுக்கு தமிழ் வார்த்தைத் தெரியாதா? அழைப்பிதழில் பெயர்களுக்கு முன்னால் ‘டாக்டர் எனக் குறிப்பிடுகிறீர்கள். திராவிடக் கட்சிகள், தங்கள் கட்சிப் பெயர்களில்,  ‘திராவிடம் என்ற பெயரை மாற்றித் ‘தமிழ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லும் தாங்கள் ஆங்கிலத்தை கலப்பது முறையாகுமா என்பதனையும் சற்று சிந்திக்க வேண்டுகிறேன்.

தெலுங்கர்கள், தங்கள் கட்சியின் பெயரில், ‘திராவிடம் என்கிற வார்த்தையை மாற்றித் ‘தமிழ் என்று பெயர் வைத்தால் அவர்களின் தலைமையை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுடைய நான்காவது தீர்மானத்தில், தமிழ்நாட்டில் தெலுங்கரின் அரசியல், தொழில், வணிகம் முடக்கப்பட வேண்டும் என்று சொல்வதன் பொருள் என்ன? ‘தமிழ் எனப் பெயர் மாற்றம் செய்தவர்களை ஏற்றுக் கொள்வது தங்களின் தமிழ் கொள்கை அடிப்படையிலோ அல்லது தமிழ் தேசியத்தின் அடிப்படையிலோ சரியாக இருக்கக்கூடுமா? அது எந்தவகையில் நியாயமானதாக இருக்கக்கூடும்? என்பதனை தாங்கள்தான் விளக்க வேண்டும்.

தமிழ்நாடு, இந்திய தேசத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. நமது மாநிலத்தை ஓட்டியுள்ள ஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் இனி தமிழகத்திற்கு திரும்பி வந்துவிட வேண்டும் என்று சொல்வீர்களா? 20 தமிழர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த தெலுங்கர்கள்மீது காழ்ப்புணர்ச்சி காட்டுவது எந்தவிதத்தில் நியாயமாக இருக்க முடியும்?

தமிழ் மொழியின் பிள்ளைகள்தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு எனப் பெருமைப் பாராட்டுகிறார்கள். தமிழர்கள் அப்படிப்பட்ட நிலையில் தெலுங்கர்களின் அரசியல், தொழில், வணிகம் முடக்கப்பட வேண்டுமென சொல்வது எந்தவிதத்தில் சரியானதாக இருக்கும்? ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் அன்பை விதைப்பதற்குப் பதிலாக மக்கள் மத்தியில் வம்பை விதைக்க ஆசைப்படுகிறீர்கள். தமிழ் பற்றாளராக இருக்க வேண்டும்  என்பதற்குப் பதிலாக அனைவரும் தமிழ் வெறியர்களாக இருக்க வேண்டுமென நினைகிறீர்கள். இது, மனிதரை மனிதருக்கு எதிராகத் தூண்டிவிட்டு கலரவத்தை உருவாக்கும் செயலாகும்.

‘திராவிடம் என்கிற வார்த்தைக்கே. ‘தமிழ் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தீர்மானம் போட இருக்கும் தாங்கள் அரபிப் பெயருடைய இசுலாமியர்களையும், ஆங்கிலப் பெயருடைய கிறித்தவர்களையும் அதே அரங்கில் கனல் உரைவீச்சு நிகழ்த்த அழைத்திருக்கிறீர்கள். இது எந்தவகையில் நியாயமானதாக இருக்க முடியும்?

தமிழர்கள், தமிழில் பெயர் சூட்ட வேண்டும். பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ 450/- க்குப் பதிலாக ரூ 50/- செலுத்தினால் போதுமென அன்றைக்கு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆணை பிறப்பித்தார். பலர் தங்கள் பெயர்களை தமிழில் மாற்றிக் கொண்டார்கள். தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தினார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தனது கட்சி உறுப்பனர்களின் பெயரை தமிழில் மாற்றுவதற்கு கூட்டம்போட்டு அதனை நிறைவேற்றினார். தீர்மானத்தை கொண்டுவந்த கருணாநிதி தனது மகன், ‘சுடாலின் என்கிற பெயரை தமிழில் மாற்றாமல் வியாக்கியானம் செய்தார். அதுபோல் தங்கள் அமைப்பும் மாறிவிடுமோ என்கிற ஐயப்பாடு அடியேனுக்கு எழுகிறது.

தமிழ் மொழியை காதலிக்கும் தாங்கள் அரபி, ஆங்கிலப் பெயர் உடையவர்கள் தங்கள் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமென அரங்கில் அழைப்பு விடுப்பீர்களா? அவர்கள் தங்கள் பெயர்களை மாற்ற முன்வரவில்லை என்றால் தமிழாலயம் அரங்கில் அவர்களை உரைவீச்சு நிகழ்த்த இனிமேல் அழைக்கா மாட்டேன் என அறிவிப்புச் செய்வீர்களா? உங்கள் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்துவீர்களா? உங்களால் தமிழ் வாழ வேண்டும், வளர வேண்டும் என்பது அடியேனின் அவா. அது நடப்பது உங்கள் செயல்பாட்டில்தான் உள்ளது. அதனைக் குறித்து சிந்திக்க வேண்டுகிறேன்.

யுத்தப்பிரசங்கி ஜாண் முரே


யுத்தப்பிரசங்கி யாண் முரே - நூலால் நீதியை ஒலிக்கச் செய்ய வேண்டும்!
சனவரி மார்ச் 2017, “செய்தி மலர்வாசித்தேன். இரட்சண்ய சேனை சபைகளில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் ஒரு இதழாக அவ்விதழ் வலம் வருவதனை காணமுடிந்தது. இப்படிப்பட்ட இதழ் ஒவ்வொரு சபைகளுக்கும் தேவையான ஒன்றாகும். இயேசு, இப்படிப்பட்ட தவறுகளைத்தான் சுட்டிக்காட்டினார். இதற்கு சபை போதகர்கள் பல எதிர்ப்புகளை தெரிவிப்பார்கள். அதனையும் மீறி இன்னொரு இயேசுவாக வாழ்ந்து காட்டுவதே உண்மையான கிறித்தவ வாழ்வாக அமைய முடியும். அவ்வகையில் இவ்விதழை நடத்தும் பொறுப்பாளர்களை பாராட்டுகிறேன்.
வில்லியம் பூத்தின் பெயரைச்சொல்லி பிழைப்பு நடத்திவரும் சில வியாபாரிகள் கையில் சிக்கி சீரழிந்து வருகிறது இரட்சண்ய சேனை நிர்வாகம். இந்த தவறான அணுகுமுறையால், கொள்கை முரண்பாடுகளால் சேனையின் அடிப்படை நோக்கத்திற்கும், அதன் நற்பெயருக்கும் அவமானத்தை ஏற்படுத்திவரும் சுயநலக் கூட்டத்தின் இரட்டை வேடத்தை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று மக்களுக்கும், மனித நேயம்கொண்ட சில அதிகாரிகளுக்கும், அமைப்புகளுக்கும் உறவுப் பாலத்தை ஏற்படுத்தி முத்திரை பதிப்பதுதான் இச்செய்தி மலர். தொடர்ந்துவரும் இவ்விதழ் அங்கத்தினர்களுக்கு மட்டும் உரியது என பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் அங்கத்தினராக இல்லாதவர்களுக்கு இச்செய்தி மலரைக் கொடுத்து வருகிறார்கள் என்பது சிறப்புக்குரிய செய்தி.
13.11.2016 அன்று கோட்டூர்கோணம் இரட்சண்ய சேனை சபை மக்களின் பெரும் முயற்சியால் கட்டப்பட்ட ஆலய மணிக்கூண்டு அபிசேக விழாவின்போது வருகை தந்த தென்கிழக்கு மாகாண தளபதி எட்வின் மசியை வரவேற்க மேளதாளம், வாணவேடிக்கை முழங்க குலசேகரம் பேருந்து நிலையம் சென்று ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர் இரட்சண்ய சேனை சபை மக்கள்.
கோட்டூர்கோணம் கத்தோலிக்க ஆலயம் அருகில் ஊர்வலம் வரும்போது கத்தோலிக்க பங்குப் பணியாளர் சுரேசு ராசு தலைமையில் பங்குப் பேரவையினர் நேரியல் அணிந்து எட்வின் மாசிக்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். இது பிளவுபட்டிருந்த இரு சபை மக்களின் இதயங்களை ஒன்று சேர்க்கும் ஊக்க மருந்தாக இருந்தது என்றும், பல இலட்சம் பொருட்செலவில் உயர்ந்த கோபுரம் கட்டி திறக்கப்பட்டதைவிட இருதரப்பு மக்களும் உணர்வு பூர்வமாய் கரம் கோர்த்ததே சிறப்புமிக்கது என்றும்  இன்ப இயேசுராசன் எழுதியிருக்கிறார்.
இரு பிரிவினைவாதிகள் ஒன்று சேர்வது நல்ல செய்தியாக இன்ப இயேசுராசனுக்கு தெரியலாம். அது இன்பமாகவும் அவருக்கு இருக்கலாம். இருப்பினும் இவ்விரு பிரிவினைவாதிகள் (கத்தோலிக்க சபை & இரட்சண்ய சபை) ஒருபோதும் ஒன்றாக முடியாதே என்பது இயேசு இராசனுக்குத் தெரியாததுதான் விசேசம். இவ்விரு சபைகளும் ஒன்றாக இயலாதபோது, அச்சபை மக்களும் ஒன்றாக இயலாது அல்லவா?
ஆலய மணிக்கூண்டு என்கிற பெயரில் பல லட்சம் பணம் வீண் செலவு செய்யப்பட்டுள்ளது என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. இயேசுவுக்காக வாழ்வதாகச் சொல்லும் ஒருவரை வரவேற்க மேளதாளம், வாணவேடிக்கை என பணத்தை விரயம் செய்தது ஆன்மீக சித்தாந்தத்திற்கு விரோதமானது. இயேசு இப்படிப்பட்ட ஆடம்பரங்களை விரும்பியதில்லை.
ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கத்தோலிக்க திருச்சபையில் உள்ள பணியாளர் ஒருவர் இரட்சண்ய சேனை சபையில் நடக்கும் இப்படிப்பட்ட ஆடம்பரங்களை ஊக்கப்படுத்த வந்ததாகவே பார்க்க முடிகிறது. ஆடம்பரத்திற்கு பணம் வேண்டுமென்றால் அது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும். வரி என்கிற பெயரில் மக்கள் சுரண்டப்படுகிறார்கள். இச்சுரண்டல் எல்லா ஆலயங்களிலும் நடைபெற வேண்டுமென போதகர்கள் விரும்புகிறார்கள். ஒரு மீன் சந்தையில் மீன் விலை குறைவாக இருந்தால் மக்கள் அந்த கடைகளுக்கு செல்லத் துவங்கி விடுவார்கள் அல்லது கேள்வி கேட்கத் துவங்கி விடுவார்கள். இதனைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த ஊக்குவித்தல் நடை பெற்றிருப்பதாக அடியேன் பார்க்கிறேன்.
20.11.2016 அமைப்புத் தலைவர் யுத்தப் பிரசங்கி யாண் முரே தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இரட்சண்ய சபை மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை சித்ரவதை செய்த நிகழ்வுகளையும், விடுதிக் காப்பாளரின் மனித நேயமற்ற செயல்களையும் அலசியிருக்கிறீர்கள். அச்செய்தி, நாட்குறிப்பில் தெளிவாக சொல்லப்படவில்லை. நாட்குறிப்பில் அச்செய்தி சுருக்கமாக இருந்தாலும் பொதுத்தளத்திற்கு அச்செய்தியைக் கொண்டு வரும்போது அதனை சற்று விரிவாக வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும். விடுதிக் காப்பாளரின் பெயரை சுட்டிக் காட்டியிருக்கலாம். புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கலாம்.
அநீதிகளை தடுக்கும் ஒரு கருவியானது நடக்கிற நிகழ்வுகளை சபை மக்களுக்கு தெளிவாக சொல்வதில்தான் அடங்கி இருக்கிறது. நடவடிக்கை எடுக்கத் தயங்கும் மாகாண தளபதியின் புகைப்படத்தையும், பெயரையும் வெளியிட்டிருக்கலாம். தவறு செய்பவர்களின் பெயரும், புகைப்படமும் செய்தி மலரில் வெளிவரும் என்கிற ஒரு பயத்தை உருவாக்கலாம். அதுதான் செய்தி மலருக்கான வெற்றியாக இருக்க முடியும்.
ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிதி உதவியை பிரிவு செயலாளர் தனது சுய தேவைக்கு பயன்படுத்தினார் என்கிற செய்தியிலும், ஏழைப் பெண் திருமண நிதி காணிக்கை என்ற பெயரில் கட்டாய வசூலாக ரூ 2000/- வரை வசூலிக்கப்படுகிறது என்கிற செய்தியிலும், பிறந்த குழந்தைக்கும் ரூ 500/- வழங்க காகித உறை வழங்கி வசூல் வேட்டை நடத்தப்படுகிறது என்கிற செய்தியிலும் கயவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால் போலி முகமூடிகளின் கவசம் கிழிக்கப்படாமலே நகர்ந்து செல்கிறது. அவர்களது பெயரை குறிப்பிட்டு எழுதுவதற்கான மன தைரியம் இன்னும் வரவில்லையோ என்று கருதவே தோன்றுகிறது.
“2015 வருட தென்கிழக்கிந்திய மாகாண தன்னை ஒறுத்தல் நிதி வசூல் ஒரு கண்ணோட்டம்என்கிற தலைப்பில் சபையின் மொத்த வருமான பட்டியல் ரூ 1,54,55,165/- என்கிற விவரச் செய்திகள் மூலம் சபையில் என்ன நடக்கிறது என்பதனைக் குறித்து சிந்தித்துணர சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். உங்களை மனதாரப் பாராட்டுகிறேன். அதன் செலவு விவரத்தை மக்கள் கேள்வி கேட்டுப் பெற வேண்டும். அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதுதான் சபையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவும்.
சபை உறுப்பினர்கள் கேள்வி கேட்கும்போது, அதற்குரியப் பதிலை அளிக்காமல் கொலை மிரட்டல்விடும் அளவிற்கு திருச்சபைகள் வளர்ந்துள்ளது என்பதனைப் பார்க்கும்போது திருச்சபையின் போக்கு திருந்தியவர்களின் குரலாக கேட்க முடியவில்லை. தெருப் பொறுக்கிகளின் கைகளில் திருச்சபைகள் மாட்டி விட்டதையே காண முடிகிறது. இதைத்தான் ஆசிரியர் மாத்தூர் இ. ஞானதாசு, “பலருடைய வாழ்வுக்குரிய செல்வங்கள், சிலருடைய வாழ்வுக்கு மட்டும் பயன்படுவது வேதனைஎன வாசகர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஆதங்கத்தை வெளியிடுகிறார். காவல்துறை அதிகாரிகள் சிலரும் இப்படிப்பட்ட கயவர்களிடமிருந்து கையூட்டு வாங்கிக் கொண்டு வழக்கை பதிவு செய்ய மறுப்பது சனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்குகிறது.
ஆண்டொன்றுக்கு சராசரியாக ரூ 10 கோடி வெளிநாட்டு பணம் மாகாணத்திற்கு வருகிறது. குறைந்த பட்சம் ஒரு கல்லூரிகூட கட்டவில்லையே என்கிற இன்ப இயேசுராசனின் ஆதங்கம் நியாயமானதே. தன்னை ஒறுத்தல், அறுப்பு – 2, திருமண நிதி, வீட்டுச் சங்கம், கருணை சங்கம், இளம் வீட்டுச் சங்கம், சகாயிக்கும் கரம் என்கிற பெயர்களில் இரட்சண்ய சேனை உறுப்பினர்களிடமிருந்து காணிக்கை வசூலிக்கப்படுகிறது. நீதிமன்றத்திற்கு வழக்குகள் வரும்போது நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி காணிக்கை வாங்குவதில்லை. அவர்கள் மனமுவந்து கொடுக்கும் காணிக்கைகளையே வாங்கிக் கொள்கிறோம் என்றும், அக்காணிக்கைகளை அவர்களே நிர்வகித்து வருகிறார்கள் என சொல்லுகிற வித்தை வியப்பானது.
இரட்சண்ய சேனை அமைப்பின் செயலாளர் டேவிட்சன் வர்க்கீசு 06.04.2011 அன்று நிறுவனப் பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தில் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானதும், நிர்வகித்து வருகிறதுமான ஆலயங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் எங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள் அல்ல; அவர்கள் அந்நியர்கள் என குறிப்பிட்டுள்ளார். இயேசுவை, பிலாத்து கைகழுவியதுபோல் கைகழுவும் நிகழ்வுகள் சபைகளில் நடப்பது புதிதல்ல. மக்கள்தான் இன்னும் குருட்டு நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இரட்சண்ய சேனையின் நிறுவனர் வில்லியம் பூத், “மத நம்பிக்கையில் நாம் ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தால், அடுத்த அடி சேவையாக இருக்க வேண்டும்என்கிறார். இரட்சண்ய சேனையின் தற்போதைய தலைவர் ஆன்டரே காக்சு, “நாம் ஆராதிக்கிற கிறித்தவர்களாக மட்டும் இருந்தால் அழிந்து போவோம். சேவை செய்கிற கிறித்தவம் மட்டுமே நிலைக்கும்என்கிறார். அவர்களுடைய வாக்குகள் உயிருள்ளவையாக மாறவில்லையே என்கிற ஆதங்கத்தை யுத்தப் பிரசங்கி யாண் முரே கட்டுரை வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஏன் என் தந்தையின் ஆலயத்தை வியாபாரக் கூடாரமாக ஆக்குகிறீர்கள் என்று இயேசு ஆயுத சாட்டை ஒன்றினைத் தயாரித்து அவர்களை விரட்டி அடித்து கோவிலை சுத்தம் செய்ததுபோல் இரட்சண்ய சேனை மக்கள் அவ்வேலையை அவ்வாறாக செய்ய இயலாது. இயேசு வாழ்ந்த காலம் வேறு; நீங்கள் வாழுகிற காலம் வேறு. யாருடைய சட்டையையும் யாரும் பிடித்து கேள்வி கேட்க இயலாத நிலையில் மக்கள் இருந்துகொண்டு இருக்கிறார்கள். அரசின் அடக்குமுறைகள் அடவாடித்தனமாக நடக்கிறது. பணம் கொழுத்த முதலைகளுக்கு பக்கபலமாகவே அரசு இயந்திரங்கள் உட்கார்ந்து இருக்கிறது. காவல்துறையும் நீதிக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆயுதமாக செய்தி மலர் என்கிற இதழ் பெரியளவில் மாறிவிடவும் இல்லை. இப்படிப்பட்ட விசயங்களை இன்னும் ஆழமாக, ஆதாரப்பூர்வமாக நூல் வடிவில் வெளியிடுங்கள். நூல்கள்தான் உண்மையை உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் அம்பலப்படுத்தும். அதிகபடியான தாக்கத்தை சபை மக்கள் மத்தியில் உருவாக்கும். இதழ்கள் காணாமல் போகும். ஏன் வாசிக்கப்படாமலும் போகலாம். நூல்கள் மிகப் பெரியளவில் தாக்கத்தை உருவாக்கும் என்பதால் யுத்தப்பிரசங்கி யாண் முரே, நூல் ஆயுதத்தால் நீதியை ஒலிக்கச் செய்ய முன்வர வேண்டும்.