Wednesday, August 22, 2018

அருள் சினேகம்


அருள் சினேகமின், “கடல் முற்றம் தவறான வழிகாட்டுதல்களை முன்மொழிகிறது!

அருள் சினேகம் என்கிற பழைய எழுத்தாளர் ஒரு கதை சொல்லியாக நெய்தல் வெளியின் மூலம் இப்போது அறிமுகமாகிறார்என இரையுமன்துறை அருள் சினேகம் எழுதிய, “கடல் முற்றம்நூல் வழியாக பள்ளம்துறை வறீதையா கான்சுதந்தின் அறிமுகப்படுத்துகிறார். அருள் சினேகம் எப்பொழுது பழைய எழுத்தாளர் ஆனார்? இப்பொழுதுதானே முதல்முறையாக ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. அவரை எப்பொழுது, ‘நெய்தல்வெளிஅறிமுகப்படுத்தியது? ‘கடல்வெளிதானே அறிமுகப் படுத்தி இருக்கிறது.
84 பக்கங்கள் உடைய, ‘கடல் முற்றம்நூலில் 53 பக்கங்கள் கதை சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘வலம் வரும் கஞ்சிக் கலயம் என்கிற பெயரில் வளவளவென 18 பக்கத்திற்கு அணிந்துரையாக அளந்திருக்கிறார் பள்ளம்துறை வறீதையா கான்சுதந்தின். அதனை எழுதுவதற்கு, அவருடைய நூலை அவரே வாசித்து எழுதியிருக்கிறார். அதற்கு அடிக்குறிப்பும் கொடுத்திருக்கிறார். புதுமுயற்சி! வாழ்த்துவோம்! இந்நூலில் நூலாசிரியரின் முகவரி, அலைபேசி எண் கொடுக்கப்படவில்லை என்பது ஒரு பெரிய குறைபாடே. இந்நூலாசிரியர், இரையுமன்துறை மீனவர் கிராமத்தைச் சார்ந்தவர் என்பதனை அறிய முடிகிறது.
அட்டையை அலங்கரிக்கும் ஓவியத்தைக்கூட அவர் பூந்துறை ஓவியர் டாம்தேவை நேரில் சந்தித்துப் பெற்று வந்திருக்கிறார்என பள்ளம்துறை வறீதையா கான்சுதந்தின் குறித்து அருள் சினேகம் அருள் பாவிக்கிறார். அடியேன் இரசித்த நெய்தல் நில அட்டைப் படங்களிலே அழகு இல்லாத அட்டைப் படமாக, இரசிக்க இயலாத அட்டைப் படமாக இந்நூலில் காணும் அட்டையைத்தான் பார்க்கிறேன். அதற்கு மேலும் அதனை இதர வாசகர்களின் வாசனைக்கு விட்டுவிடுகிறேன்.
சிவ அடியாராகிய திருத்தமிழ்த் தேவனாருக்கு அருள் சினேகன் என்பவர் அறிமுகம் இல்லாத வராயினும் அவருடைய நூலை வாசித்ததன் மூலம் அந்நூல் அடியாருக்குள் வாசம் செய்வதால் அவர் அறிமுகமானவராகவே ஆகிவிட்டார். அவருடைய கதைகளில் சில, எந்தவொரு செய்தியையும் சமூகத்திற்கு பாடமாக சொல்லாமல் மறைந்துவிடுகிறது. எதிர்மறையான கருத்துக்களையும் முன்வைக்கிறது. பேருந்து வந்துபோவது போல்தான் அவருடைய கதைகள் அமைந்து இருக்கின்றன. ஒருசில கதைகளைத் தவிர...
லம்மாலே! குளோறிமேரி சீட்டுப்பணம் குடுத்திலேணு வந்து ஒருவாடு நாக்கு வளிச்சுண்டு போச்சு. கடைலேணு வந்த உடனே புசுபம் அம்மயிட்ட பராதிய சொன்னா”. அவர் சார்ந்த மண்ணின் மொழியானது அருள் சினேகத்திடமிருந்து இப்படித்தான் வம்புபோல் புறப்படுகிறது. தொடக்கமே அவரின் மொழி வாசனை பச்சை நரம்புபோல் புடைக்கிறது. ‘நாக்கு வளிச்சுண்டு போச்சு என்பது நாக்கு நன்றாக பேசுவதற்கு. இங்கு நாக்கு வளிச்சுண்டு போச்சு என்பது நாக்கால் வசவு பேசிட்டு போச்சு என்பதுதான். மொழியின் தோரணை உரையாடலின் போக்கில் மாறுபடுகிறது. அதுதான் தமிழ் மொழிக்கான அழகு. அதன் அழகினை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் சிறுகதையாசிரியர் அருள் சினேகம்.
பல இடங்களில், கத்தோலிக்கத் திருச்சபையை அருள் சினேகம் சாடியிருக்கிறார். அதனால்தான் அவருடைய சாட்டம் ஆவேசம் அடைகிறது. என் தந்தையின் இல்லத்தை வியாபாரக்கூடம் ஆக்குவதா என இயேசு சாட்டையை எடுத்து விளாசியதுபோல கடற்கரை சமூகம் கெட்டுப் போனதற்கும், நசுங்கிப் போனதற்கும் கத்தோலிக்க சபையே காரணம் என்பதனை கதைகளின் மூலம் அருள் சினேகம் ஆணித்தரமாக முன்வைக்கிறார். அதனால் அவருடைய கதைகள் எழுச்சி பெறுகிறது. குறைகளை சுட்டிக் காட்டுபவரும், தட்டிக் கேட்பவருமே சீர்திருத்தவாதியாக மாற இயலும். ஊருல ஒரு நல்ல காரியமணு சொன்னா கோவிலுக்கு அள்ளிக் குடுக்குவா. ஆனா பாவங்களுக்கு ஒரு சல்லிக்காசு குடுக்கமாட்டாஎன மக்களின் மனப் போக்குகளையும் அவர் படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை.
பங்கு சாமியும் குளோரிமேரி சொன்னா என்ன காரியமும் நடத்திக் குடுக்குவாரு. நல்ல செல்வாக்கு”. ஊரில் சீட்டு வைத்து நடத்துகிற குளோரிமேரி சொன்னா எந்தவொரு காரியத்தையும் பங்கில் இருக்கிற பாதிரியார் செய்து கொடுப்பார் என்றால் பங்கு சாமியார்களின் நடத்தை இங்கு கேள்விக்கு உள்ளாகிறது. தனது மகள்களை திருமணம் செய்து கொடுக்க ஊரில் சீட்டு போடுவதும், அதனால் இழப்பு ஏற்படும்போது வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பதும் மெல்சி கதாப்பாத்திரம் மூலம் அறியத் தருகிறார்.ஊம சேசய்யன்மூலம் இன்னொரு உருவத்தை கண்முன் நிறுத்துகிறார் அருள் சினேகம்.
குளோரிமேரி ஓடி தலைமறைவாகிறபோது, சீட்டு போட்டிருந்த மக்கள் சென்று குளோரிமேரி வீட்டை பூட்டுபோட்டு பூட்டுவதும், இப்படி 27 பூட்டுக்கள் தலைவாசலில் தொங்கியது என்பது இயற்கையாக ஓடிக் கொண்டிருந்த நல்ல கதை ஓட்டத்திலிருந்து கற்பனை ஓட்டத்திற்கு நகரச் செய்கிறது. பூட்டுக்களின் எண்ணிக்கையைத் தவிர்த்து இருக்கலாம். கடலோரங்களில் ஊமை குசும்பன்களை கேள்விப்பட்டிருக்கிறேன். இக்கதை வழியாக ஊமை சேசையனை இப்பொழுதுதான் பார்க்கிறேன். இக்கதாபாத்திரத்தில் வரும் சேசையன் போன்று திருமணச் சந்தை வியாபாரத்தில் முடிவெடுக்கும் நிலைக்கு ஆண்கள் வர வேண்டும். அப்பொழுதுதான் வரதட்சணை என்கிற தொற்றுநோயை விட்டுத் தொலைக்க பலரால் முடியும்.
வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்என சட்டம் இருந்தும், அதனை மதிக்காமல் இருப்பதால் முக்குவர் சமூகத்தில் பெண்கள் படும் வேதனையை மீன்காரி புளோரா கதைமூலம் முன் வைக்கிறார் அருள் சினேகம். இண்ணத்த காலத்தில ஒரு கொமுரு இறங்குததணு சொன்னா விளையாட்டா. கொறஞ்சது 20 பவுனுக்க நகையாவது போடணும். ரொக்கம் ரண்டு லச்சமாவது குடுக்கணும். பின்ன கலியாண செலவு. இப்படி ஏளெட்டு லச்சமாவது வேணும்”. ஒரு தாய் தனது மகள்களை திருமணம் செய்து கொடுக்க படும் பாடு சொல்லி மாளாதது. பணமும் கொடுத்து, பெண்ணையும் கொடுத்து திருமணம் செய்துவைக்க வேண்டிய ஒரு இழிசெயல் முக்குவர் சமூகத்தில் குடியிருப்பது வேரறுக்கப்பட வேண்டுமென்பதே இக்கதையின் நோக்கமாக இருக்கிறது.
வாகனம் மோதியதால் புளோரா நடக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலையில் திருமணமாகாத அவளுடைய மூத்த மகள் லிசியானவள் குடும்ப பாரத்தை ஏற்று மீன்சுமந்து விற்க புறப்படுகிறாள். தனது இரண்டு தங்கைகளையும் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்கிற ஒரு பொறுப்பையும், குடும்பத்தை நடத்த வேண்டிய அக்கறையையும் அவள் தலையில் சுமந்து கொள்கிறாள். பொதுவாக குடும்ப பாரத்தை ஏற்று நடத்த விதவைப் பெண்கள்தான் மீன் வியாபாரத்திற்கு வருவார்கள். இங்கு வாலிபப் பெண் ஒருத்தி மீன் விற்பனைக்கு வருகிறாள். கேரளாவில் இது நடைமுறையில் உள்ள விசயமே என்கிற கருத்தை கதைக்கு வலு சேர்க்கிறார் கதாசிரியர்.
குமரி மாவட்டத்திலுள்ள ஒரு வாலிபப் பெண் மீன் விற்பனை செய்ய செல்வதனை இந்த சமூகம் என்ன நினைக்கும் என்பதற்கு, “வொளச்சு சாப்பிடுதத எந்த எரப்பாளி நக்கிதின்னி வடுவப்பயலும் கொற சொன்னானெங்கி அந்த வாரியேனிச்ச கவட்டகால ரண்டையும் இணிஞ்சுடுடுவேன்என்கிற ஆவேசம் நியாயமானதே. வடுக கலப்படம் இல்லாத ஒரே சமூகம் மீனவர் சமூகம்தான். அதனால்தான் மீனவர்களின் பேச்சு வழக்கில், ‘வடுக வார்த்தை அதிகமாவே உச்சரிக்கப்படுவதனை காண முடிகிறது. அதைத்தான் கதாசிரியரின் உரையாடலிலும் வாசிக்க முடிகிறது.
புளோராவ முப்பது பவுனுக்க நகையும் போட்டுகொடுத்து சூசை திருமணம் செய்வதும், மஞ்சுவை இந்து சமயத்தைச் சார்ந்த ஐயப்பனுக்கு பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து வைப்பதும் கால ஓட்டத்தில் இந்த மாற்றம் ஏற்கத்தகுந்ததே. ஒருகாலகட்டத்தில் வரதட்சணை அதிகமாக இருந்ததால்தான் திண்டுக்கல், கோயம்பத்தூர், சேலம், மதுரை ஆகிய இடங்களில் வேறு சாதியினருக்கு முக்குவப் பெண்களை திருமணம் செய்து கொடுத்தனர். இப்பொழுது அது சற்று குறைந்திருக்கிறது.
அருகாமையிலே பெண்களை திருமணம் செய்து கொடுக்கும்போதுதான் அவர்களுடைய பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும், உதவி செய்யவும் இயலும். இப்படிப்பட்ட வாழ்க்கை ஓட்டம்தான் கடலோர கிராமங்களில் தேவையாக இருக்கிறது. கதையின் முடிவானது முத்தமிழ் சித்தரும் நடிகருமான டி. இராசேந்தரின் கதையம்சம்போல் அமைந்து இருக்கிறது. வில்லன் இல்லா புளோராவின் கதையின் முடிவை டி. இராசேந்தர் பாணியில் அமைத்திருப்பதில் திருப்தி அடைய இயலவில்லை.
காலையில கஞ்சியும் குடிச்சுண்டு தூறப்போன பயன் ஒத்தேல கடலுல எறங்கி குளிச்சிருக்கி. புள்ள கரயோடி குளிச்சு குளிச்சுண்டு கெடந்தானே. ஒரு சேலுல கிக்குகொண்டான். சேலு நேர உண்ணக்கு எடுத்து பயல இளுத்து கொண்டுபோவுட்டதுஎன சேலுகுறித்த கதைப்போக்கு அருமை. கட்டுமரத்தை வைத்து சேலு சொல்லும் கதைத் தொனிகள் நிறைந்திருக்கும் நிலையில் எட்டு வயது பையனை வைத்து கதையாசிரியர் சேலு பேசுவதால் அச்சேலு கதை சுவை அடைகிறது; மெருகேறுகிறது. பாஞ்சு போயி பயல கூட்டுண்டு வாறதுக்கு வம்பும் மாரல்லாம் மடிச்சு கறங்கி கறங்கி நிண்ணாவனுஎன்கிற செய்தி சேலுவை வலுவடைய செய்கிறது.
காலையில எட்டுமணி வாக்கில தொடங்கின சம்பவம். இப்பம் மணி பந்திரண்டு ஆவப்போறு. உச்ச நெருங்க நெருங்க கடலடி அடிச்சு பெளக்குது. ஆளுவளெல்லாம் ஒயிக்க நிண்ணு காட்டிச்சே அல்லாம ஆரும் கடலுல இறங்கிச்சில்லஎன்கிற கதாசிரியரின் கதைப்போக்கு நன்றாக இருந்தாலும், சேல கண்டு பயந்து முக்குவர்கள் யாரும் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முன்வரவில்லை என்பது நெருடலாகத்தான் பார்க்க வேண்டியதாய் உள்ளது. முக்குவர்களின் வீரம் இங்கு கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.
“அம்மக்க ஒப்பாரியும் கரச்சயும் லூயிசுக்க காதுல உளுந்தது. சத்தா சாவட்டணு கரையப் பாத்து நீந்த முடிவு பண்ணிட்டான். மாயிரியா எளும்பி வாறத நல்லா பாத்தான்... லூயிசு வெட்டுல குளிச்சு தறையை அப்பி படிச்சுண்டு கெடந்தான். களந்து கறங்கின அலை அவனை எடுத்து கறக்கி சுருட்டி மேலே கொண்டு வந்து.... கரையப் பாத்து தள்ளிவுட்டது என்பதில் எட்டு வயது லூயிசின் துணிச்சல் இங்கு பாராட்டுதலுக்குரியது. செவிடனுக்கு தேச்சியம் வந்து பயலுக்க பூளையில ரண்டடி கொடுத்ததும், லூயிசு மணியையும் ஆட்டிண்டு ஆறப்பாத்து ஓடிப்போனான் என்கிற செய்தியும் கதையின் முடிவை கச்சிதம் ஆக்குகிறது.
‘தோழர் அருளானந்தம் கதை குறித்து அருள் சினேகன் சொல்லும் பாடம் சற்று வித்தியாசமானது. அருளானந்தன் ஒரு கம்யூனிசவாதி. ஊரிலுள்ள மக்களுக்கு நிவாரணம், உதவிகள் பெற்றுக் கொடுப்பதில் கடுமையாக உழைப்பவர். தனக்கென கால் சென்ட் நிலம்கூட சேர்த்து வைக்காதவர். திருமணம் செய்து கொள்ளாதவர். ஒருநாள் அருளாந்தம் மரித்துப்போய் விட்டார். அடக்கம் செய்ய ஓர் இடம் வேண்டும். யார் கொடுப்பது என்பதுதான் இக்கதையில் எழும் கேள்வி.
இவர், கோயிலுக்கு போகமாட்டார். பூசை புனசுகாரங்களில் கலந்துகொள்ள மாட்டார். புனிதர்களை வழிபடக்கூடாது என்று கூறுவார். மதங்களைக் கடந்து மனிதநேய மாண்புகளை உயர்த்திப் பிடிக்க வேண்டுமென வலியுறுத்துவார்”. அப்படிப்பட்ட கம்யூனிசுகாரர் ஒருவர் மரித்தால் அவருக்கு கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று கோருவது நியாயமானதாகத் தெரியவில்லை. பெந்தேகோசுதே கோவிலுக்கு போகிறவர் ஒருவர் மரித்துப்போனால் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் இடம் கேட்பது எப்படி நியாயமானதாக இல்லையோ அப்படித்தான் இதுவும்.
கத்தோலிக்க சபைக்கும் பெந்தேகோசுதே சபைக்கும் பெரியளவில் வித்தியாசம் இருப்பதுபோல், கத்தோலிக்க சபைக்கும் கம்யூனிச சபைக்கும் பெரியளவில் வித்தியாசம் இருக்கிறது. கம்யூனிசுகாரர்களால் குறும்பனையில் நடந்த கொலையைப் பற்றி நீங்கள் அறியாதது அல்ல. மதம் என்றால் அபி எனப் பேசும் கம்யூனிசுகாரர் ஒருவரை எப்படி கத்தோலிக்க பூசை வைத்து அடக்கம் செய்ய இயலும்? எங்கள் மூதாதையர் உழைத்த உழைப்புதான் இந்த கோயிலும் நிலமும் நிர்வாகமும் என்றால் அது ஏற்கத்தகுந்ததே. அந்த கோயிலும், நிலமும், நிர்வாகமும் எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டதோ அதனைப் பின்பற்றினால்தான் அதன்மேல் உள்ள உரிமையைக் கேட்க முடியும்.
இக்கதையில் எழுப்பப்படும் கேள்விகள் பெரும்பாலும் பொருத்தமற்றவையே. அதே வேளையில், மீனவர்களின் பணமெல்லாம் திருவிழாக்களை விமர்சையாக கொண்டாடுவதற்கு பாழ்பட்டுப் போனதே தவிர வேலை வாய்ப்பைப் பெருக்கவோ, மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் கட்டவோ, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகளுக்கு பயன்படவே இல்லை என்கிற ஆதங்கம் ஏற்புடையதே.
அவர்களின் கால்களைக் கட்டிப்போட்டிருந்த மத விலங்குகளை உடைத்தெறிந்துவிட்டு இந்து இடுகாடு நோக்கி அவர்களின் கால்கள் நடைபோட்டதுஎன்கிற கதையின் ஓட்டம் உயிரோட்டம் அடைகிறது. கடைசியில் ஒரு கம்யூனிச தோழருக்கு இந்து இடுகாட்டில் இடம் கிடைத்திருக்கிறது என்றால் இதைவிட இந்துவத்திற்கு பெருமை சேர்க்க வேறு என்ன இருக்க இயலும்?
பாதிரியார் குடும்பங்கள் முன்னேறுகிற செய்தியை, “பாதர் டாமிகதாபாத்திரம் மூலம் அருள் சினேகம் முன்வைக்கிறார். கோமாசு, சாமி ஆனபெறவு அந்த குடும்பத்த கைல புடிச்ச முடியுதா? மட்டுபாவு வீடென்ன, வள்ளமும் வலையுமென்ன, மூணு தங்கச்சிமாரையும் வலிய வலிய எடத்துவளுல கெட்டுக்குடுத்தான். நீ சாமியாவி நம்ம குடும்பத்துக்கு வல்ல பிரயோசனமும் உண்டா?’ என்று பெர்ணாந்து கேட்கிற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.
முதலாவதாக, “என் பின்னே வாருங்கள். நான் மனிதர்களைப் படிக்கக் கற்றுத் தருகிறேன் என்ற இயேசு. உடனே அவர்கள் தங்களது வலைகளை அங்கேயே அப்படியே விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினர். அதாவது மீன்பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டு அவர்கள் போதிக்கும் பணிக்கு வந்தார்கள். அவ்வாறு வந்தவர்கள் எவரும் அவர்களது மனைவிகளை விவகாரத்து செய்துவிட்டு போதிக்கும் பணிக்கு வரவில்லை. விபசாரத்திற்காக அன்றி வேறு எந்த காரணத்திற்காகவும் விவகாரத்து செய்யக்கூடாது என்பதுதான் இயேசுவின் போதனை. அதனால்தான் அவர்கள் பல வேளைகளில் அவர்களது வீடுகளுக்கு சென்று வருவதனை விவிலியத்தில் காணமுடிகிறது. அப்பொழுது அவர்களுடைய மனைவி செலவுக்கு பணம் கேட்டிருப்பாள். கொடுத்திருப்பார்கள் அல்லவா?
இரண்டாவதாக, “தாய் தகப்பனை மதித்து நடஎன்பது பத்துக் கட்டளைகளில் ஒரு கட்டளை. இயேசு 12 வயதினிலே எருசலேம் ஆலயத்தில் போதனை செய்தார். அதன்பின்பாக அவருடைய பாதுகாப்பாளர் யோசேப்போடு தொழில் செய்ததையும் அறிகிறோம். சிறுவயதிலே தனது குடும்பத்திற்காக சம்பாதித்தவர் இயேசு. இங்குள்ள குருக்களோ குடும்பத்திற்கு எதுவும் சம்பாதித்துக் கொடுப்பதில்லை. மாதம் ரூ 10,000/- பங்கில் சம்பளம் வாங்குகிறார்கள். நன்றித் திருப்பலி என்கிற பெயரில் ஒருவர் பெயரை உச்சரிக்க ரூ 200/- வாங்குகிறார்கள். ஒரு பூசையில் 10 நபர்கள் பெயர் உச்சரிக்கப்பட்டால் ரூ 2000/- கிடைத்துவிடுகிறது. திருவிழா பூசைகளிலும், திருமண பூசைகளிலும் சம்பாதிக்கிறார்கள். தொண்டு நிறுவனங்கள் பெயரில் சம்பாதிக்கிறார்கள். இப்படி அவர்களின் வருமானம் உச்சத்தில் இருக்கிறது. இப்படியெல்லாம் சம்பாதிக்கக் கூடாது என்று யாரும் அவர்களை நிர்பந்திப்பதில்லை. அவர்களுக்கும் பொருளாதாரம் தேவை என்பதனை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதில், யாராவது குடும்பத்திற்கு பணம் கொடுக்கவில்லை என்றால் அவர் பணத்தை தவறான வழியில் செலவு செய்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்.
டாமி, பூசைக்கு காசு வாங்கமாட்டேன் என்றால் அது தவறான காரியம். காசு வாங்க மாட்டேன் என்றால் அது ஒட்டுமொத்த திருச்சபையும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. டாமி என்கிற தனிமனிதர் முடிவு எடுத்தால், அது இதர பாதிரியார்களுக்கும் கெட்டப் பெயரைத்தான் உருவாக்கும். இங்கு டாமியின் சுயநலத்தைத்தான் பார்க்க முடிகிறது. இவருக்கு அருள் சினேகம் வக்காலத்து வாங்குவது ஏற்புடையதாக இல்லை. காசை வாங்கி ஏதாவது ஏழை ஒருவருக்கு கொடுத்திருக்கலாம். அதுவும் ஆன்மிகப் பணிதானே. டாமி, பணி செய்த இடத்தில் ஏழைகளே இல்லையா என்கிற கேள்வி எழுகிறது அல்லது அவர் ஏழைக் குடும்பங்களைப் பார்த்ததே இல்லையா?
கரமடி தொழில் கேவலமானது அல்ல. அதேவேளையில், பாதிரியார் டாமி என்பவர் கரமடி வளைக்கப் போவது கேவலமான காரியம்தான். அதனை அருள் சினேகம் பாராட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. இயேசு, மீன்பிடிக்கப் போகவில்லை. இங்கே வலை வீசுங்கள், மீன் கிடைக்கும் என்றார். மக்களை தன் பக்கம் இழுத்தார். தன் சித்தாந்தத்தில் ஈர்க்கச் செய்தார். பாதிரியார் டாமி, என்ன சித்தாந்தத்தை முன்வைக்க வருகிறார்? இங்கு வேலையோ அதிகம், ஆட்களோ குறைவு என்ற வசனம் நிறைவு பெற்றுவிட்டதா?
சாமியாருக்கு ஆடம்பர பங்களா தேவையில்லைதான். இருப்பினும், கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் இந்து துறவிபோல் வாழ முடியாது. ஏனெனில், கத்தோலிக்கப் பாதிரியார் மக்களோடு வாழ்பவர். அவருக்கு சமைத்துக்கொடுக்க ஆள் வேண்டும். அவர் அமைதியாக தியானம் செய்ய அறை வேண்டும். அவரை சந்திக்க வருபவர்கள் தங்குவதற்கு வசதி வேண்டும். ஊரார் வந்து பேசி செல்வதற்கான தளம் வேண்டும். அவருடைய நூல்களை பாதுகாப்பதற்கு வசதி வாய்ப்புகள் வேண்டும். "நீயொரு துறவி என்பதால் கோயில் வராந்தாவில் படு" என்று சொல்ல முடியாது.
இக்கதாப்பாத்திரத்தில் வரும் பாதிரியார் டாமி, துறவற சபையைச் சார்ந்தவர் அல்ல. மேற்றிராணியாக உயர்ந்த டானி, இனிமேல் பூசைக்கு எந்த பாதிரியாரும் பணம் வாங்கக்கூடாது. ஆடம்பர பங்களாவைவிட்டு வெளியேற வேண்டுமெனச் சொல்வாரா? இக்கதை நடைமுறைக்கு சாத்தியமில்லை. டாமியின் செயல்கள் முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்த செயல்களே. இப்படிப்பட்ட டாமிகளை வரவேற்க வேண்டி, சிவப்பு கம்பளத்தை அருள் சினேகம் போன்ற கம்யூனிசுகார்கள் விரிப்பதில் சூது இருக்கிறது. அதேவேளையில், பல இலட்சம் ரூபாய்களைக் கொட்டி ஆடம்பர பங்களாக்கள் அமைக்க வேண்டிய தேவையில்லை.
"புறம்போக்கு நிலத்தில் வீடு இல்லாதவர்கள் வீடு கட்டிக் கொள்ளலாம்". இது 10 வருடத்திற்கு முன்புள்ள பாதிரியாரின் அறிவிப்பு. கும்பாரிகள் அருளப்பனும், மிக்கேலும் அருகருகில் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டிக் கொண்டார்கள். அவ்விடத்தில் வந்ததிலிருந்து  அருளப்பனுக்கு அறவே மீன்பாடு இல்லை. மிக்கேலுக்கு நல்ல வருமானம். இதனால் கும்பாரிகளின் மனைவிமார் மேரிக்கும், லூர்துக்கும் சண்டை. அதனை இன்னும் அதிகமாக தீ மூட்டி வைத்தான் குடுகுடுப்புக்காரன். "கீளா பக்க கண்ணாடி பட்டு குடும்பம் கொலையுது...". இந்நிலையில் இருவரின் மனைவிகளை கணவன்மார்கள் சமாதனப்படுத்துகிறார்கள்.
அருளப்பனிடம் மிக்கேல், இனிமேல் உங்க ஏத்தனவும் எங்க ஏத்தனவும் கூட்டு. எல்லாம் பாதிக்கு பாதி" என்கிறார். இந்நிலையில், "துறைமுக விரிவாக்கப் பணிக்காக கீளாபக்கம் பெறம்போக்குல குடியேறுனவங்க உடனே காலி செய்து குடுக்கணுமாம். அவங்களுக்கு வீடு வைக்க கருங்கலுக்கு வடக்க இடம் ஒதுக்கியாச்சாம்" என ஞாயிறு பூசையில் சாமியார் அறிவிப்பு. இதுதான், "கடல் முற்றம்" கதை.
கடற்கரையில் இருக்கிற பெரும்பாலான வீடுகள் புறம்போக்கு நிலத்தில்தான் இருக்கின்றன. அப்படியொரு நினைப்பு மக்களுக்கு உண்டு அல்லது பெரும்பாலான வீடுகள் ஊர் நிலத்தில் இருக்கின்றன என்கிற ஒரு நினைப்பும் மக்களிடம் உண்டு. இது ஊர் நிலம் என்பதற்கு பட்டா உண்டா என்று கேட்டால் அதற்கு பட்டா கிடையாது என்பார்கள். ஏன், பெரும்பாலான கோவில்களுக்கே பட்டா கிடையாது.
எத்தனை வரிசை வீடுகளை கடல் இழுத்துச் சென்றாலும் ஏன் பல வீடுகளுக்கு இன்னும் பட்டா இல்லை என்பதனை என்றைக்காவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? பெரியவிளையில் பல கோடி ரூபாயில் தற்பொழுது கட்டப்பட்டு வரும் கோவிலுக்கும் பட்டா கிடையாது. பாதிரியார்களின் குரலில் ஒலிக்கும் கோவில் ஒலி பெருக்கிகள் மக்களை இன்னும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அரசின் பிரதிநிதியாக, அரசின் சால்ராவாக பங்குப் பாதிரியார் ஒவ்வொரு ஊரிலும் செயல்படுவதால் வந்த வினைப்பயன்.
"சாமி இந்த கடலும், இந்த கடப்புறத்தில வாழக்கூடிய முக்குவமாரும் இருக்குத வரை நீங்க பேடிக்காதீங்க. இருவது கோடி என்ன இருவதாயிரம் கோடி ஆனாலும் நாங்க சம்பாதிச்சு தருவோம். நீங்க திருவிழாவ செழுப்பா நடத்துங்க" என்பதுதான் பங்கு பாதிரியாருக்கு மீனவ மக்கள் கொடுக்கும் வாக்குறுதி என்பதனை கதாசிரியர் அருள் சினேகம் பதிவு செய்கிறார். இது ஒரு நேர்த்தியான, உண்மையான பதிவு. பாதிரியார்களுக்கு தாங்கள் இருக்கும் பங்கில் கோலாகலமாக ஊர் திருவிழாவை கொண்டாட வேண்டும். விளம்பரங்களில் அவர்களது புகைப்படங்கள் பெரிய அளவில் இடம்பெற வேண்டும் என்கிற ஆசை உண்டு.
திருவிழா நடத்துவதற்கு வசதியாக மடியில் வேளா பாய வேண்டும் அல்லவா? அதற்கு மந்திரவாதம் செய்ய காணியை பார்க்கப் போகிறார்கள். அவன் சொன்னபடி, சொன்ன நேரத்தில் சரியாகக் கணக்கிட்டு அவன் கொடுத்த பொடியையும், எலுமிச்சம் பழத்தையும் செபிச்சு கடலில் வீசி எறிகிறார்கள். கல்வலை கையில் வந்தாச்சு. மீன் எடுத்து மொய்த்திக் குடுக்குமுணு எல்லோரும் ஆவலோட பார்த்தார்கள். வெறும் மடி. மந்திரவாதம் பொய்த்துப் போனது. தெய்வமும் செத்துப் போனது. அருள் சினேகனின் இப்படிப்பட்ட சில படைப்புகள் ஆத்மார்த்தமாக உண்மைக்கு அரண் சேர்க்கிறது. அவரின் இலக்கியப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment