Wednesday, August 22, 2018

இரையுமன் சாகர்


இரையுமன் சாகரின், “வேளாப் பாடு” மக்களை முட்டாளாக்குகிறது!
யசுதின் திவாகரின், “நெய்தல்வெளிமூலம் வெளிவர வேண்டிய, “வேளாப் பாடுநூலானது சில சர்ச்சைகளுக்குப் பின்பாக பள்ளம்துறை வறீதையா கான்சுதந்தின், “கடல்வெளிமூலம் வெளிவந்திருக்கிறது. வெளியிலிருந்து ஒரு வெளி உருவாகியிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே. ஈ.வெ. இராமசாமி நாயக்கரின் திராவிட கழகத்திலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணாத்துரை துவங்கியது போன்றுதான் இந்நிகழ்வு நடந்தேறி இருக்கிறது. இருப்பினும் தனக்கென ஒரு பதிப்பகத்தை உருவாக்கிக் கொண்ட பள்ளம்துறை வறீதையா கான்சுதந்தைனை பாராட்டுகிறேன். கடல்வெளி பதிப்பகமானது, நெய்தல் வெளிப் பதிப்பகத்தின் கொள்கையைக் கொண்டிருக்குமா என்பது போகப்போகத்தான் அறிய இயலும். 'வெளிக்குப் போகிறேன்' என்றால் நீங்கள் அறியாதது அல்ல.
நூலை எடுத்தவுடன் நூலாசிரியரின் உரையைத் தேடினேன்; காணவில்லை. பதிப்புரையும், அறிமுகவுரையும் முகம் சுழித்துக் கொண்டிருந்தது. ஆகிருதிகளோடு பெரிய பெரிய விசயங்களை எழுதுவதுதான் இலக்கியம் என்று நிறுவ முயன்ற சூழல்களைத் தமிழகம் கடந்துவிட்டதுஎன்கிற பள்ளம்துறை வறீதையா கான்சுதந்தின் உரையின் மூலம், வேளாப் பாடுநூலானது சின்ன சின்ன விசயங்களை மட்டுமே பேசுகிறது என்பதனை கதையை வாசிக்கும் முன்பாகவே அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து விடுகிறார். அது பெரியப்பெரிய விசயங்களைப் பேசுகிறதா? அல்லது சின்னச்சின்ன விசயங்களைப் பேசுகிறதா? என்பதனை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வேளாப் பாடுவாசிக்க துவங்கும் முன்பாக அதில் பெரிதாக இலக்கியம் ஒன்றும் இல்லை என தமிழகத்தையும் துணைக்கு இழுத்துக்கொண்டு வருகிறார் பதிப்பாசிரியர் பள்ளம்துறை வறீதையா கான்சுதந்தின்.
இந்நூலின் அறிமுகவுரையை வழக்கறிஞர் டி.வி. பாலசுப்ரமணியம் நிகழ்த்தியிருக்கிறார். கதைக்குள் எதையும் அவர் கலாய்க்கவில்லை. "கதை நடக்கும் களத்திலிருந்து 40 கிலோ மீட்டருக்கு அப்பால் நான் வாழ்ந்தாலும் மொழி எனக்கு புரிதலில் எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை" என அவர் சொல்வது ஆச்சரியமாகத்தான் பார்க்க இயலுகிறது. ஏனெனில், அதே மீனவ சமூகத்தில் பிறந்து வளர்ந்த அடியேனுக்கு சில வார்த்தைகள் சிரமமாகத்தான் இருந்தது.
இரையுமன் சாகர் என்பவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு நூல், "வேளாப் பாடு". இந்நூலில், நூலாசிரியரைக் குறித்த அறிமுகம் இல்லாதது பெரும் குறையே. ஒரு எழுத்தாளரை ஊக்குவிக்கும் முறை என்பது நூலாசிரியரை அறிமுகப்படுத்துவதில் இருந்துதான் துவங்குகிறது. இந்நூலில் ஆசிரியரின் முகவரி, அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஆகியவைகளில் ஒன்றும் இடம்பெறவில்லை. பதிப்பகத்தாரின் அலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் முகவரி, அச்சுக் கோப்பு செய்தவரின் அலைபேசி எண் மற்றும் முகவரி, அச்சாக்க அலுவலகத்தின் தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் முகவரி ஆகியவை இடம் பெற்றுள்ளன. முகநூலில் நூலாசிரியரோ தனது சொந்த ஊர் தூத்தூர் என்கிறார். எழுத்தாளர் சாகர், தனது பெயருக்கு முன்னால் இரையுமன் என்கிற ஊர்ப் பெயரைச் சேர்த்திருக்கிறார். இரையுமன் என்றால் இரையுமன்துறை என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும். அவரது ஊர், அவரை அறிந்தவர்களுக்கே வெளிச்சம்.
இந்நூலில் 10 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பத்து சிறுகதைகளும் மீனவர் மத்தியில் நடந்த, நடக்கின்ற நிகழ்வுகளையே படம் பிடித்துக் காட்டி இருக்கிறது. அதுதான் இந்நூலுக்கான பெருமை. கதையின் போக்கு அவர் பேசும் கடற்கரை மொழியில் அமைந்துள்ளதால் அது அந்நூலுக்கான இன்னொரு பெருமை.
"பெரிய அலைகள் வேகமாய்த் தாவும் வீட்டுப் பூனைபோல தடுப்புச் சுவரைத்தாண்டி வீடுகளுக்குள் புகுந்தன" என்கிற வாக்கியத்தில் இருந்து எழுத்துலகில் இரையுமன் சாகரின் வர்ணனைகள் துவங்குகின்றன. "இதுபோன்ற காலங்களில் கடற்கரையில் குளம்போல கடல்நீர் கட்டிக் கிடக்கும். அந்த பொட்ட குளத்தில் நீந்திக் குளித்து விளையாடுவது தனி சுகம்!" என்கிறார். "பொட்ட குளம்" என்பதனை சிவ அடியார் திருத்தமிழ்த் தேவனாரின் புதூர்த்துறை ஊரில், "கொட்டாழம்" என்பார்கள். ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஊருக்கு ஊர் வார்த்தை வேறுபடுகிறது என்பதனை அறிய முடிகிறது.
அந்த கொம்ப ஒரு கெரவங் கெட்டவ. மொதல்ல கெட்டுனவனும் சத்துப் போனான். இப்பம் இது ரண்டாம் கெட்டு இவனும் செத்துப் போனான்என சேம்சின் இறப்பிற்கு சொல்லப்பட்ட காரணம் அவரது மனைவியின் இராசி சரியில்லை என்பதுதான். அவனுக்கியான் ஒரு நல்ல பெண்ண பாத்து கெட்டு குடுக்கபணியாஎன அடக்க வீட்டில் சொல்லப்படுகிற செய்தியானது அவளது கணவரின் மரணத்தைவிட அவளைப் பெரிதாகக் கலங்கடித்தது என்பது கதைக்கு வலு சேர்க்கிறது.
கெரவங் கெட்டவசிறு கதையானது கடலில் காணாமல்போன ஒரு மீனவனின் உண்மைக் கதையினை மையமாகக் கொண்டு நகர்த்தப்பட்டிருக்கிறது. கதையின் முடிவு ஓராயிரம் நாவுகளின் இரைச்சலானது இப்படித்தான் ஒவ்வொரு ஊர்களிலும் புகைந்து, போக்கற்ற நிலையில் போய்ச் சேரும் என்பதனை பிரதிபலிக்கிறது. "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாது நாவினால் சுட்ட வடு" என்கிற வள்ளுவன் வாக்கு இங்கு பொய்த்துப்போனது என்பதனை கதையின் முடிவு பிரதிபலிக்கிறது.
பெண்கள், மீன் கொண்டுபோக தனிப்பேருந்து கிடையாது. இங்கு பிசிசி பேருந்து ஒன்று ஓடியது. வண்டியில் ஒரு பாதி மட்டும் சாமான்கள் வைக்க, இருக்கை இல்லாத கம்பிகள் அமைத்து வைத்திருந்தனர். இருக்கை கிடைக்காதவர்கள் எல்லாம் அதில் ஏறி உட்கார்ந்து கொள்வதும் உண்டு. இப்பொழுது அந்த வண்டியும் இல்லை. அதனால் மீன் விற்கப் போகும் பெண்களின் வாழ்க்கை கடினமாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
மீனவப் பெண்கள்மீது நடத்தப்படும் நடத்துனரின் ஏச்சுக்கள் காலங்காலமாக சகித்து வரப்பட்டுள்ளது. அதற்கான கோரிக்கைகள் எதுவும் மீனவர் குறைதீர்ப்பு கூட்டத்தில் எழுப்பப்படுவதில்லை. மீன் சருவத்தை சவுட்டித் தள்ளும் நடத்துனர்மீது இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏய்... அங்க தூர தள்ளி நில்லு. ஏத்தப்பிடாதுஎன்கிற மிரட்டல்கள், "இவியளுக்கு வேற வண்டியே கிட்டல்லையோ...?" என்கிற ஏளனப் பேச்சுகள் என பேருந்துகளில் தொடரத்தான் செய்கின்றன. மீனவப் பெண்மணி, மீனைப் பேருந்தில் ஏற்றுவதற்காக நடத்துனரிடம் கெஞ்சுவதனைப் பார்க்கும்போது வேதனையின் உச்சம்தான் உருக்கமாகவே நிற்கிறது. கேரளத்தில், மீன் கொண்டுசெல்ல தனிப் பேருந்து இயக்கப்படுகிறது என்கிற எதார்த்த நிலையை, “ஆசைஎன்கிற சிறுகதை மூலம் சொல்கிறார் கதை ஆசான் இரையுமன் சாகர். கன்னியாகுமரி மாவட்டம் மீண்டும் கேரளாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு வலுவானக் காரணம்தான்.
தனது மூன்று குழந்தைகளைக் காப்பாற்ற மீன் விற்பனை செய்யும் ரோசம்மாவின் வாழ்க்கைப் போராட்டம் சிந்திக்க வைக்கிறது. சருவத்தயும் தூக்குண்டு வாறது. மீனு வேங்க களுவில்லாங்கி வீட்டுவள்ல கெடக்கணும்... வல்லிய மதுப்புல ஒயித்து பிடிச்சுண்டு வாறத.... இக்குரல் அதிகமாகவே கடற்கரையில் ஒலிக்கிறது. இதில், ஒருபுறம் வறுமையும், இன்னொருபுறம் நியாயமும் தொக்கித்தான் நிற்கிறது.
எனக்க சிறுப்பத்தில இதுக்கு தெக்க ஆறு தெருவு உண்டு என்று போத்தி சொன்னபோது நம்ப முடியவில்லை. இத்தனைத் தெருக்களைத் தின்றுபோடுகிற அளவுக்குக் கடலுக்குப் பசியெடுத்ததா?” என்கிற கதையாசிரியரின் எதார்த்தமான போக்கு கதை ஓட்டத்திற்கு அழகு சேர்க்கிறது. வரியேனுவ ஒழுங்கா கல்லயும் போடுதானுவயில்ல... வீடெல்லாம் பாழா போறு...என்கிற மரியம்மாவின் புலம்பலும், “சாரே, போட்ட கல்லு மண்ணுக்குள்ள பூந்தி போய் கெடக்குது. ஒழுங்கா கல்ல போட்டா எங்களுக்கு இந்த கதி வந்திருக்காதுஎன்கிற முத்தம்மாளின் புலம்பலும் நாகர்கோவில் நாஞ்சில் அரங்கில் நடக்கும் மீனவர் குறைதீர்ப்புக் கூட்டத்திலும் கேட்கிறது. வந்த அரசு அதிகாரிகளுக்கு பாதிரியார் இல்லத்தில் இளநீர் வெட்டிக் கொடுத்து உபசரிப்பு வழங்குவதிலும் குறை இல்லைதான். குறைகளைத் தீர்க்க கடந்த தேர்தலில் ஒரு மீனவ வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கிற முழக்கமும், அது ஓய்ந்துபோன வரலாறும் மீனவா எழுந்திரு!கதை மூலம் அற்புதமாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
"சுமை" சிறுகதை வேகமாக நகராமல் தள்ளாடினாலும் அதன் முன்புள்ள கதைகளின் கருத்துக்கள் கருத்தாய் அமைந்திருப்பதால் அத்தனையையும் வாசித்துவிட வேண்டும் என்கிற மேலான எண்ணம் உருவாகிறது. அதனால், "சுமை"கூட வசிப்பவருக்கு சுமையின்றி நகருகிறது. மார்க்கிரெட், ஆக்னசு, தெரேசா ஆகியோரின் சுயநலம் இக்கதையில் வெட்ட வெளிச்சமாகிறது. பொதுவாக மீனவர் கிராமங்களில் பெண் பிள்ளைகள்தான் தாயையும் தகப்பனையும் மதிக்கும்; கடைசிவரை கவனிக்கவும் செய்யும் என்பார்கள். அதுதான் நிதர்சனமான உண்மையும்கூட. இக்கதையில் அதனைத் தலைகீழாகவே பார்க்க முடிகிறது. தாயை வீட்டு வேலை செய்ய வைத்து, வீட்டில் ஒரு வேலைகாரியாய்... இல்லை, இல்லை, சம்பளமில்லா அடிமையாய்... இப்படித்தான் பல வீடுகளில் நடக்கிறது. அந்த தாயின் முடிவு, வாசிப்பவருக்கு தாய் நினைவை கண்முன் நிறுத்தும் உயிரோவியம். இப்படிப்பட்ட கதைகள்தான் கல்லூரிப் பாடங்களில் இடம்பெற வேண்டும். "தாய் தகப்பனை மதித்து நட" என பத்துக் கட்டளைகள் சொல்லிக் கொடுப்பதால் எந்தவித பிரயோசனமும் இல்லை.
"காரக்கொழம்பு" என்கிற வார்த்தை அடியேன் சட்டக்கல்லூரி படிக்கும்போது கேட்ட வார்த்தை. உணவகத்தில் சாப்பிடச் சென்றால் அடுத்து என்ன ஊற்ற, காரக்கொழம்பு, இரசம், மோர் என்பார்கள். ஒரு குறிப்பிட்ட சூழலில் அதனை சாப்பிட வேண்டிய நிர்பந்தம் அடியேனுக்கு உருவானது. காரக்கொழம்பு செய்யும் முறையையும் இரையுமன் சாகர் இக்கதையில் எழுதியிருக்கிறார். ருசித்துப் பார்க்க விரும்புகிறவர்கள் அதனை செய்தும் பார்க்கலாம்.
"கொதித்துக் கொண்டிருந்த காரக்குழம்பில் வீழ்ந்து ஆசுதிரேலியா ஆப்பிரிக்காக் கண்டங்கள்போல மேலே வந்து மிதந்தன முட்டைகள்" என வர்ணனைகள் அற்புதமானவை. அதன் வர்ணனனைகளைப் பார்க்கும்போது இரையுமன் சாகர் சொல்லும் காரக்கொழம்பு சற்று வித்தியாசமாக இருப்பதாகவே கருதுகிறேன். ஏனெனில் முட்டைக் காரக்கொழம்பு அடியேன் சாப்பிட்டதில்லை. "இனி இதைத்தான் தின்னப் போறீ. நாங்களும் நீங்களும் மட்டுமல்ல, ஊர்லயிருந்து யாரு வந்தாலும் இந்த காரக்கொளம்புதான். பாவப்பட்டவன், பணம் உள்ளவனணு எந்த பாகுபாடும் இருக்காது. காரக்கொழம்பு பார்க்கவோ, தின்னவோ நல்லா இல்லாம இருக்கலாம், ஆனா அது நம்ம வாழ்க்கையில முக்கியமான ஒண்ணாயிட்டது. இதத் தின்னு வாழ்க்கைய ஓட்டினவங்க இண்ணைக்கு வாழ்க்கைல அடுத்த கட்டத்துக்குப் போயிட்டாங்க. அதனால் இதப்பத்தி வருத்தப்பட வேண்டாம்" என்பது சிலர் சாலை ஓரங்களில் சிலவகை மூலிகளை வைத்து இதனை வாங்கி உண்ணுங்கள். உங்களுக்குள்ள எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்பார். அதிலும், இதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் மீனவர்களின் அர்ச்சனைப் பூக்களான கெட்ட வார்த்தைகளை கதையின் ஓட்டத்தில் காணமுடியவில்லை. இயேசுவைவிட இரையுமன் சாகர் ரொம்ப நல்லவராக இருப்பாரோ என்று நினைத்தேன். இந்த விபச்சார சந்ததியருக்கு (இந்த தேவிடியா வாரிசுகளுக்கு) யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறெதுவும் காண்பிக்கப்படாது என்றவர் இயேசு. கடைசியில் அரைகுறையாய் கெட்ட வார்த்தை ஒன்றை பதிவு செய்திருக்கிறார் இரையுமன் சாகர். "தள்ளேத் தின்ன..." அர்ச்சனைப் பூக்கள் மிகக் குறைவாக இருப்பது வாழ்வியலை அர்த்தமாக்கவில்லை.
இக்கதைகளில் அடியேன் மிகவும் இரசித்துப் படித்த ஓர் இடம் இருந்தது. "மாதா, அந்தோனியாரு, லூசியம்ம, மீதி எல்லாம் ஏசுநாதரு படம். செபம் பண்ணனும்னா ஒரு படம் போதும். ஆனா இது அப்படியல்ல. ஒவ்வொரு படமும் ஒவ்வொருத்தரோட வேண்டுதலுக்கு அடையாளமா இருக்கலாம்". வாழ்க்கையில் அவரவருக்குத் தேவையான விருப்பத் தெய்வத்தை வைத்துக் கொள்வதுகூட ஒரு திருப்தியும், மனநிறைவும்தான். இதைவிட வேறு என்ன இருந்துவிடப் போகிறது. கொள்கைகளும், சித்தாந்தங்களும் வாழ்க்கையில் அர்த்தம் கொள்வதில்லை. உங்களுக்குத் தேவையானதை நீங்கள் வைத்துக் கொள்ளும்போதுதான் நம்பிக்கையும் அர்த்தம் அடைகிறது. சிலருக்கு சில மருத்துவரிடம் போனால்தான் திருப்தி. அப்படித்தான் தெய்வமும் என்பதனை இரையுமன் சாகர் தத்துவமாக்கி இருக்கிறார்.
"வேளாப் பாடு" அற்புதமான காதல் கதை. இப்படிப்பட்ட கதைகள், பல வகைகளில் திரைப்படமாக வெளிவந்திருந்தாலும், நாவல்களாக வெளிவந்திருந்தாலும் கதைவசனம் ரொம்ப முக்கியம் அல்லவா? இக்கதையில் கதை ஓட்டம் நன்றாக இருப்பதால் கதையும் அர்த்தம் அடைகிறது. "கடைசியில அவன் மடி வளச்சுண்டு கெடக்குவான், நீ மீனு செமுக்கயாம்பே போவ?" போன்ற வசனங்கள் கதை ஓட்டத்திற்கு நன்கு அமைந்திருக்கின்றன.
கதைக்கு மேலும் வலு சேர்க்கும் பொருட்டு செய்வினை கதை ஒன்றினை அத்தோடு இணைத்துள்ளார் இரையுமன் சாகர். "வீட்டினுள் பாத்திரங்கள் நடுவில் பறந்து நின்றன. எல்லோரும் ஆச்சிரியத்தில் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்". "சாப்பாட்டுத் தட்டிலுள்ள சாதம் மனிதக் கழிவாகக் கிடந்தது". குமுதம் நிருபர் விசயகுமார் வந்ததும், காவல் ஆய்வாளர் அதனை நேரில் பார்த்து சாட்சியாக மாறியதும் கேள்விக்குறியை உருவாக்குகிறது. இது மாதா கண்ணில் இரத்தம் வடிகிறது என பொய்யும் பித்தலாட்டமும் செய்வதுபோல் உள்ளது.
இந்த செய்வினைக் கதையானது, "வேளாப் பாடு" கதைக்கு வலு சேர்க்கவில்லை. இந்த அளவிற்கு செய்வனை செய்யக்கூடிய வல்லமை படைத்த மந்திரவாதியால் காதலனை கொன்று விடவோ? அல்லது காலை முடக்கிப் போடவோ? அல்லது காதலியைப் பார்க்கமால் செய்யவோ முடியாதா? என்கிற கேள்வி எழுகிறது. கதையின் போக்கை வலு இழக்கச் செய்கிறது. இந்த மந்திரவாதக் கதையை அகற்றியிருந்தால் கதை அற்புதமாக இருந்திருக்கும். கதையின் முடிவும் பொருத்தமானதாக இருந்திருக்கும். இக்கதையானது மக்களை முட்டாளாக்கி, பல நூற்றாண்டு பின்னோக்கி இழுத்துச் செல்கிறது.
"சென்னை கடற்கரை" கதை அருமை. ஒருவேளை இதனை இரையுமன் சாகர் அனுபவித்து இருப்பாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. நீதிமன்றத்தில் குறைந்த தண்டனைக்குரிய வழக்கு இவைகள்தான். 75 வழக்கு என்பார்கள். நீதிபதி எது கேட்டாலும் சரி என்று சொல்ல வேண்டும். இல்லை என்றால் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டியதாகி விடும். அதனால் வழக்கிற்கான செலவும் அதிகம். நாளும் விரயம் ஆகும். இருசக்கர வாகனத்தைப் பிடித்து வழக்குப் போடுவது போல்தான். இதுவரை சிறுசிறு வழக்குகளுக்கு நீதிமன்றம் செல்லாதவர்களுக்கு இக்கதை ஒரு பாடமாக இருக்கும். கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டத்தில் வைக்க வேண்டிய கதைகளில் ஒன்று. அதனை வாசிப்பதால்தான் அதனை உணர முடியும் என்பதால் நூலை வாங்கி வாசியுங்கள்.
"பெர்சியா" கதையை வாசிக்கும்போது மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய, "ஆடு சீவிதம்" நாவல்தான் ஞாபகத்திற்கு வந்தது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல் மனம் பல வேளைகளில் அலைபாய்வது இயற்கை. அனுபவம்தான் பல புதிய பாடங்களைக் கற்றுத் தருகிறது.
இந்நூல், இரையுமன் சாகரின் முதல் படைப்பாக இருந்தாலும் ஒவ்வொரு கதையையும் அனுபவித்து எழுதியிருக்கிறார். கதையை வாசிக்கும்போது அந்த அனுபவம் நமக்குள்ளும் பல விசயங்களை எழுப்பிச் செல்கிறது. அவரின் எழுத்துக்கள், உண்மைகளில் வாழ்க்கையைத் தேட கற்றுக் கொடுக்கிறது. நூலை வாங்கி வாசியுங்கள். மீனவர்களின் வாழ்க்கை மணம் உங்களுக்குள்ளும் வாசம் செய்யட்டும்.



No comments:

Post a Comment