Tuesday, August 28, 2018

குமரி மைந்தன்


குமரி மைந்தனின், “குமரி மாவட்டக் கலவரத்தில் சங்கப் பரிவாரங்களின் பங்கு” கள ஆய்வுகள் மூலம் எழுதப்பட்டதல்ல!
1982 மண்டைக்காடு கலவரத்தை முன்வைத்து குமரி மைந்தன் என்பவரால் 1983-ஆம் ஆண்டு எழுதப்பட்ட, “குமரி மாவட்டக் கலவரத்தில் சங்கப் பரிவாரங்களின் பங்கு என்ற நூலொன்று 2015-இல் அச்சாக்கம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இந்நூலை பொருளியல் இயலாமை காரணமாக அச்சு ஏறவில்லை என்று நூலாசிரியர் குறிப்பிடுவதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இந்நூல் 59 பக்கங்களை மட்டுமே கொண்டது. இத்தனைக்கும் குமரி மைந்தன் 1960 முதல் 1984 வரை 24 ஆண்டுகள் தமிழகப் பொதுப் பணித்துறையில் பிரிவு அரசு அலுவலகராக பணி நிறைவுபெற்று சொந்த தொழிலில் ஈடுபடுவர்.

மன்னர் மார்த்தாண்ட வர்மன், நம்பூதிரிகளைப் பழிவாங்க நினைத்து அவரது பெண்களை பரவர்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்தார். அவர்கள் வழி வந்தவர்களே முக்குவர்கள் என்கிறார் நூலாசிரியர். பெரிய வரலாற்றுப் பிழை ஒன்றினை குமரி மைந்தன் முன்வைத்திருக்கிறார். இதன்மூலம், முக்குவர்களைப் பற்றி நூலாசிரியருக்கு எதுவும் தெரியாது என்பதும், மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு எதுவும் அவர் மேற்கொள்ளவில்லை என்பதும் புலனாகிறது. இருப்பினும் இந்நூலில் நிறைய செய்திகள் இருக்கிறது. ஆங்காங்கே அவரது கருத்துக்களையும் முன்வைத்துள்ளார். அவைகளும் வாசித்து உள்வாங்கப்பட வேண்டியவையே.

குமரி மாவட்டத்திலுள்ள முக்குவர்கள், கிறித்தவ சமயத்திற்கு மாறியபின்னர் தங்கள் வரலாறை வருங்கால இளையத் தலைமுறைக்கு கொண்டு செல்லவில்லை. இவர்களிடம் தொக்கி நிற்பது தினந்தோறும் திருப்பலி நேரத்தில் பிரசங்கிக்கப்படுகிற யூதர்களின் வரலாறு. முக்குவர் வரலாறு குறித்த நூல்கள் சிங்கள மொழியில் இலங்கையில் உள்ள சைவ சமய முக்குவர்களிடமும், மலையாள மொழியில் இந்து சமய முக்குவர்களிடமும் காணப்படுகின்றன. இந்நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. குமரி மண்ணில் வறீதையா கான்சுதந்தின் என்பவரால் தொகுக்கப்பட்டு தமிழில், “முக்குவர் வரலாறு என்கிற பெயரில் ஒரு நூல் வெளிவந்தது. அதில் தேடினால் முக்குவர்களின் வரலாறையே காணோம். ‘கிணற்றைக் காணவில்லை என நடிகர் வடிவேல் சொல்வது போன்றுதான். குமரி மண்ணில் இப்படித்தான் முக்குவர் வரலாறு எழுதப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும்போது இந்நூலாசிரியர் குமரி மைந்தனைப் பற்றி குறை சொல்வதற்கு எதுவுமில்லை.

இந்நூலை எழுதிய நூலாசிரியருக்கு குமரி மாவட்ட மீனவர்களில் முக்குவர் சாதிதான் பெரும்பான்மையினர் என்பதும் தெரியவில்லை. அதனால்தான் இந்நூலில், “குமரிக் கடற்கரையில் வாழ்வோரில் பரவரே மிகுதி என்கிறார். அவரிடம் இதுகுறித்து அலைபேசியில் அடியேன் பேசியபோது, எனக்கு அதனைப்பற்றி சரியாகத் தெரியவில்லை என்பதனை ஒப்புக்கொண்டார். பள்ளம்துறை ஊரில் முக்குவர்கள் வாழ்கிறார்கள் என்பதும் தெரியாது என்றார். குமரி மாவட்ட மீனவர்கள் என்றால் பரவர் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன் என்றார். முக்குவர், பரவர் சாதிக்குள் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது என்பதனை அடியேனிடம் கேட்டு அறிந்து கொண்டார். முக்குவர்களுடனான திருமணமானது நம்பூதிரிப் பெண்கள் அல்ல; எட்டுவீட்டு பிள்ளைமாராகிய நாயர் பெண்கள் என்றபோது எமது அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்கிறேன் என்றார். 

இலங்கையில் திரமிலர் என்கிற மீனவ சாதி திமிலர் என அழைக்கப்படுவதாகவும், அப்பர் ஈராசு பாதிரியார், ‘திரைமிலர்’ சொல்லுக்கு ‘கடவுளின் குழந்தைகள்’ என்று பொருள் விளக்கம் கொடுத்திருப்பதாகவும், இதிலிருந்துதான் திராவிடர் என்ற சொல் வந்ததென்று கூறுகிறார். கடல் வணிகத்தில் சிறந்திருந்த தமிழர்களின் தெய்வம் திருமகள் என்கிறார். மீனவர்களின் வரலாற்றை யாரும் சரியாக ஆராயவில்லை. அண்மைக்காலம் வரை மிகப் புறக்கணிக்கப்பட்ட மக்கள் மீனவர்கள் என்கிற கருத்தை முன்வைக்கிறார். அதனால்தான் மீனவர்களைப் பற்றிய அவரது ஆய்விலும் வரலாற்றுப் பிழை ஏற்பட்டுள்ளது.
நாடார்களைப் பிற சாதியினர் சாணார்கள் என்று குறிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு அழைக்கப்படுவதை நாடார்கள் இழிவாகக் கருதுகிறார்கள். சாணார், நாடார் என்னும் இரு சொற்களும் ஒரே சாதியினரை குறிக்கும் சொற்கள். சாணார் என்பது பனையேறும் மக்களின் பெயர். குமரி, நெல்லை மாவட்டங்களில் ஊர்த் தலைவர்கள் நாடான்கள் எனப்பட்டனர். முதலூடி, முதப்பத்துக்காரன், முதப்பத்து நாடான், ஊர் நாடான் என்பவை எல்லாம் ஊர் நாட்டாண்மைக்காரன் என்று பொருள்படும். சாணார் என்ற சொல்லுக்கு சான்றோர் என்ற சொல்லை மூலமாகக் கூறிப் பெருமைப்படும் நாடார்கள் தங்களை அப்பெயரால் அழைக்கப்படுவதை விரும்புவதில்லை. அதற்குக் காரணம் வாழ்நிலையில் மேம்பாடு அடைவோருக்கு பழையப் பெயர் இழிவாகத் தோன்றும் என்கிறார். இதிலும் அவருடைய ஆய்வு சரியாக இருப்பதுபோல் தெரியவில்லை.

தோள்சீலைப் போராட்டம், முதலில் கருத்துப் போராட்டமாகவும், அடுத்தததாக கிறித்தவர்கள் தனித்தும், மூன்றாவதாக தோள்சீலைப் போராட்டத்தில் இந்து நாடார்கள் இறங்கியபோது அதனைக் கிறித்தவ நாடார்கள் எதித்ததால்தான் கிறித்தவ ஆலயங்கள் தீ வைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். அதற்கு வலுசேர்க்கும் விதத்தில் மதம் மாறாத சாணார்களை எதிர்த்து கிறித்தவர்கள் நின்றதால்தான் புதிய நெறியை வைகுண்டர் துவங்கினார் என்கிற கருத்தை முன்வைக்கிறார். வைகுண்டர், தன்னை கடவுளின் தூதன் என்றுகூறி போராட்ட நெறியைக் கடைபிடிக்காமல் தானே கடவுளின் தோற்றுரவு, கலியை அழிக்கவே தான் தோன்றியதாகவும் குறிப்பிட்டார். அதனால்தான் மீண்டும் ஒருமுறை 1890 காலகட்டத்தில் குமரி மண்ணில் மதமாற்றம் நடைபெற்றது என்கிற வாதத்தை முன்வைக்கிறார்.

புழுக்கை சாணார்கள், சாணார்களின் கொடுமை தாங்க முடியாமல் முகம்மதியர்களாக மதம் மாறினார் என்கிறார். மேலும், கிறித்தவப் பெண்கள் ஆண்களுடன் நெருங்கிப் பழகுவதற்கு தடையில்லை என்றும், கல்வியிலும் பதவியிலும் உள்ள இந்து நாடார் இளைஞர்கள்  கிறித்தவப் பெண்களை மணக்க விரும்பி மதம் மாறுவது இன்றும் தொடர்கிறது என்கிறார். இதனால் இந்து நாடார்களுக்கு கிடைக்கத்தக்க தகுதியுள்ள மணமகன்களை கிறித்தவப் பெண்கள் பறித்துக் கொள்கிறார்கள் என்று தாணுலிங்க நாடார் சொன்ன செய்தியையும் வாசிக்கத் தருகிறார்.
1945 திசம்பரில் நத்தானியேல் தலைமையில் திருவிதாங்கூர் தமிழகக் காங்கிரசு என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவானதையும், 1946 சூனில் அது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற பெயர் பெற்றதை தெளிவாக முன்வைக்கிறார். டி. டேனியல் என்பவரால் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்திருக்கும், “திருவாங்கூர் தமிழர் உரிமைப் போராட்டம் நூலை ஒட்டி இந்நூலில் இப்பதிவு அமைந்திருப்பதில் குமரி மைந்தனை பாராட்டத்தான் வேண்டும்.

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கியவர் என்ற உரிமையைக் கொண்டாடிய பி.எச். மணி, விடுபட்டுப்போன தமிழர் பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்தபோதும், கேரள (இந்தியத் தேசியக்) காங்கிரசுடன் கூட்டுவைத்த தாணுலிங்க நடாருடன் உறவு வைத்ததால் மக்களிடமிருந்து அயற்பட்டுப்போனார். அதனால்தான் அவரை நம்பிய மா.பொ.சி.யின் பணிகளும் மக்களின் கவனத்திற்கு வரவில்லை என்கிறார். அவர் அணி மாறியதன் விளைவாக அவரின் செல்வாக்கு சரிந்தது என்றும், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் திரும்பியபின்பும் அவருக்கு பழைய மதிப்பு கிடைக்கவில்லை என்றும், அதனால்தான் அவர் நாளடைவில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார் என்கிறார்.

போர்த்துக்கீசியர் தமிழகத்தில் நிலைகொள்ளாமல் சென்றதற்கு, கத்தோலிக்க பாதிரியார்கள் மீனவர்களது வளர்ச்சியை முழுமனதுடன் விரும்பவில்லை என்றும், இவர்கள் வாழும் பகுதிகளில் மாதா கோயில்கள் வளர்ந்த அளவுக்கு இவர்களது வாழ்க்கை வளரவில்லை என்கிறார். உண்மையான செய்திதான். மண்டைக்காட்டு அம்மன் கோவிலுக்கு மதம் மாறாத மீனவர்களும் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் மீன் சமைத்துண்டு அம்மையை வழிபாடு செய்வது இங்குள்ள சிறப்பு. இங்கு மதம் மாறாத மீனவர்கள் என்று குமரி மைந்தன் குறிப்பிடுவது அன்றைய காலகட்டத்தில் கிறித்தவ சமயத்தில் மாறாமல் இருந்த இந்து முக்குவர்களாகும். இன்றைக்கு பெரும்பாலான முக்குவர்கள் கிறித்தவ சமயம் தழுவிவிட்டார்கள். அதுபோல் கேரளாவிலுள்ள இந்து முக்குவர்கள் மண்டைக்காட்டு அம்மன் கோவிலுக்கு வருடந்தோறும் வருகைப் புரிவார்கள். குமரி மாவட்டத்திலுள்ள முக்குவர்கள் மதம் மாறிவிட்டதால், இந்து முக்குவர்கள் இவர்களுடன் எந்தவித உறவோ அல்லது தொடர்போ இப்பொழுது வைத்துக் கொள்வதில்லை.

மண்டைக்காடு கலவரத்தைக் குறித்துப் பேசும்போது, இந்து நாடார்களின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் சீர்திருத்த சபைகளைச் சார்ந்த கிறித்தவ நாடார்கள், கிறித்தவ வழக்கறிஞர் சங்கம் போன்ற அமைப்புகளை நிறுவியதாகக் குறிப்பிடுகிறார். நாகர்கோவிலில் கிறித்தவ வழக்கறிஞர் சங்கமும், இந்து வழக்கறிஞர் சங்கமும் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை கிறித்தவ வழக்கறிஞர் சங்கமானது கிறித்து பிறப்பு விழாவை முன்னிட்டு கூடுவதும், இந்து வழக்கறிஞர் சங்கமானது தீபாவளியை முன்னிட்டுக் கூடுவதும் நடைமுறையில்தான் உள்ளது. அன்றைக்கு, கிறித்தவர்கள் என்கிற போர்வையில் மீனவர்களையும், பிற சாதியினரையும் ஒன்று திரட்டினர் என்கிற பதிவை குமரி மைந்தன் முன்வைக்கிறார். இது முற்றிலும் உண்மையானதுதான்.

அன்றைய காலகட்டத்தில்தான், சந்தோசம் பொங்குதே, சந்தோசம் பொங்குதே, சந்தோசம் என்னில் பொங்குதே, இயேசு என்னை இரட்சித்தார், முற்றும் என்னை மாற்றினார், சந்தோசம் என்னில் பொங்குதே போன்ற பாடல்கள் எழும்பின. அப்படிப்பட்ட இவர்கள் அமேரிக்கா, கனடா, மேற்கு செர்மனி போன்ற நாடுகளிலிருந்து நன்கொடை பெற்றனர். இருபுறத்திலும் மக்கள் தாங்கள் விரும்பாமலே, தங்களை அறியாமலே அணி திரட்டப்பட்டனர் என்கிற செய்தியை பதிவு செய்கிறார். வெளிநாட்டு நன்கொடை என்பது இன்றும் வந்து கொண்டுதான் இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

லூர்தம்மாள் சைமன் காலகட்டத்தில் அவருடைய உதவியால் மீனவர்கள் வணிகக் கப்பல்களிலும், கப்பற்படையிலும் வேலை வாய்ப்பைப் பெற்றார்கள் என்பதில் அடியேனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இரண்டு நபர்களுடைய பெயர்களையாவது குறிப்பிட்டிருந்தால், விசாரித்து இருக்கலாம். அதன்மூலம் அவர்கள் அருகிலுள்ள நாடார்களின் வயல்களையும், தோப்புகளையும் விலைக்கு வாங்கினர். அவைகளை நாடார்களே பராமரித்து வந்தனர். இருப்பினும், அது நாடார்களிடையே அழுக்காற்றை உருவாக்கியது என்கிறார். மீனவர்களில் சிலர், நிலம் வாங்கியிருக்கலாம். அது ஒரு முக்கிய பகையாக இருந்தது என்பதனை முதன்முதலாக குமரி மைந்தன் வாயிலாக அறிய வருகிறேன்.

மீனவ சமூக மாணவிகளை நாடார் இளைஞர்கள் கேலி செய்தது ஆத்திரம் வளர காரணமாகியது. இதுவும் மண்டைக்காடு கலவரத்திற்கு ஒரு காரணம் என குமரி மைந்தன் குறிப்பிடுகிறார். ஒருவேளை கேலி செய்திருந்தாலும் அது ஒரு மதப் பிரச்சனையாக மண்டைக்காட்டில் நடந்தது என்பது ஏற்கத்தகுந்ததல்ல. இதுவரையும் இப்படிப்பட்ட ஒரு செய்தியை எந்த பதிவுலும் அடியேன் பார்த்ததில்லை.

1982 பிப்ரவரி 12, 13 தேதிகளில் இந்து மத ஒற்றுமை எழுச்சி மாநாடு ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. சாமித்தோப்பு பதியை வைகுண்ட நெறியுடன் நடத்திவரும் அறங்காவலர் குடும்பத்தைச் சார்ந்த பால பிராசாபதி இளைஞரை இம்மாநாட்டை நடத்தியோர் மயக்கி வயப்படுத்தி விட்டனர். பின்னாளில்தான் பிறரின் கருவியாகிவிட்டதை உணர்ந்த பாலபிரசாபதி அடிகளார் இந்தக் கும்பலிலிருந்து விலகிவிட்டார் என்கிறார். இந்த கூட்டத்திலிருந்து பாலபிரசாபதி விலகி சமாதானப் புறாவாக வலம் வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் அவர் கொஞ்ச வருட காலமாகவே கிறித்தவர்கள் மத்தியில் மதிப்புக்குரியவராக வலம் வந்தார். பெரும்பாலான கிறித்தவ மேடைகளில் அமரும் வாய்ப்பினைப் பெற்றார். அவரை மயக்கி மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார்களா என்பதை அவர்தான் அறிவிக்க வேண்டும்.

மண்டைக்காடு கலவரத்திற்கு காரணமாக பல கதைகளைச் சொல்லும் நூலாசிரியர் குமரி மைந்தன், பள்ளம் துறையிலுள்ள ஒரு நண்பர் சொன்னதாகவும், மண்டைக்காடு மாதா கோயில் பொறுப்பிலிருந்த சாமியார்தான் மண்டைக்காடு கலவரத்திற்கு காரணம் என்றும், முன்பு அவர் பள்ளம்துறை பங்கில் பொறுப்பில் இருந்தபோது புதிய ஒரு கோவிலைக் கட்டி ஊரை இரண்டாகப் பிரித்து ஊர் மக்களுக்குள் பகை மூட்டியதாக ஒரு கதையை முன்வைக்கிறார். பின்பு அந்த பாதிரியார் ஆத்ரேலியா சென்றுவிட்டதாகவும் சொல்கிறார். ஆராயப்பட வேண்டிய செய்தி.

மண்டைக்காடு கலவரத்தில் ஆறு மீனவர்ளை காவல்துறையினர் சுட்டுக் கொன்றபோது அதனைப் பெரிதுபடுத்த கோட்டாறு கத்தோலிக்க ஆயர் ஆரோக்கியசாமி ஊர்வலம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். அதனை அரசு தடை செய்தது. இருப்பினும் ஆயரின் இந்தச் செய்கைக்குக் காரணம் இருக்கிறது. சிறிதுகாலம் முன்புவரையில் கத்தோலிக்கப் பாதிரியார்கள் கடற்கரையில் கொடிக்கட்டி வாழ்ந்தனர். மக்கள் கல்வியறிவு பெறப்பெற மக்கள்மீது அவர்களின் பிடி சிறிது சிறிதாகத் தளர்ந்தது. இந்நிலையில் விசைப்படகுகளின் போட்டியாலும் இறால் மீன் பிடிப்பினாலும் ஏழை மீனவர்கள் பலரது வருமானம் குறைந்தது. எனவே பிடிபட்ட மீனில் கோவிலுக்குத் தரும் தெரிப்பு பங்கு பற்றிய கேள்விகள் எழுந்தன. அத்துடன் உரோமிலுள்ள மதத் தலைமையகத்திலிருந்து, ‘குமுக நீதிக்கான பாடுபடுதல் என்ற திட்டம் பாதிரியார்கள் மூலம் செயல்படுத்தப்பட்டது. விசைப்படகுகளை எதிர்த்து கட்டுமர மீனவர்களை அணிதிரட்டும் பணி இதன்மூலம் நடைபெற்றது. இவ்வாறு திரட்டப்பட்ட அணியினர், மதகுருக்கள் உண்மையில் பணக்கார மீனவர்களுக்கே சார்பாக இருப்பதைக் கண்டு அவர்களை எதிர்க்கும் நிலை தோன்றியது. இந்த கூட்டத்திலிருந்து மதத்தைக் காப்பாற்ற மண்டைக்காடு நிகழ்ச்சி அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதனை ஆயர் நன்கு பயன்படுத்திக் கொண்டார் என குமரி மைந்தன் குறிப்பிடுகிறார்.

இடிந்தகரை கத்தோலிக்கர்கள், இந்து சமயம் மாறி கத்தோலிக்கக் கோவிலுக்கு முன்பாகவே கணபதி கோவில் ஒன்றினைக் கட்டிய வரலாறு மேற்படி சம்பவத்தோடு ஆராயத்தக்கதே என்றாலும், கோட்டாறு ஆயரைப் பார்க்க எம்.சி.ஆர் வந்தபோது, எதற்காக என்னைப் பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களைப் போய் பார்க்கச் சொல்லுங்கள் என அப்போதைய ஆயர் ஆரோக்கியசாமி சொன்னதாக கொடிக்கால் சேக் அப்துல்லா கருத்தரங்கு ஒன்றில் குறிப்பிட்டார். அதேவேளையில் ஓகிப் புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை சந்திக்காமல் ஆயர்களையும், பாதிரியார்களையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி க. பழனிச்சாமி சந்தித்துச் சென்றதையும்  உற்று நோக்க வேண்டியதாக உள்ளது.

அகத்தீசுவரம் வட்டத்தில் கிறித்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. மோதல் ஏற்பட்டால், அப்பகுதியிலுள்ள கிறித்தவ நாடார்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் அமைதி காத்தனர் என குமரி மைந்தன் குறிப்பிடுகிறார். கிறித்தவ நாடார்கள் பல இடங்களில் அமைதி காத்தனர் என்பது உண்மையே. நூலின் தொடக்கத்தில் இது ஒரு மதக் கலவரம்தான் என உறுதியாகச் சொல்லும் குமரி மைந்தன், “கலவரம் உண்மையிலேயே மதத்தன்மை பெற்றிருந்தால், அதாவது இந்து நாடார்களுக்கும் கிறித்தவ நாடார்களுக்கும் மோதல் ஏற்பட்டிருந்தால் கலவரத்தை அடக்குவது மிகவும் கடினமாக இருந்திருக்கும். இழப்புகளும் மிகப் பெரிதாக இருந்திருக்கும். உண்மையான மத வடிவத்தைக் கலவரம் எடுக்கவில்லை என்கிறார். இதன்மூலம் கலவரத்திற்கு சொந்தக்காரர்கள் இக்கலவரத்திலிருந்து விலகிக் கொண்டார்கள் என்பதனை அறிய முடிகிறது. யார் இந்த கலவரத்திற்கு சொந்தக்காரர்கள் என்பதற்கு எச்.பி. குட்டியின், “மண்டைக்காடு கலவர கால நினைவலைகள் நூலானது தெளிவாகவே விளக்குகிறது.

இக்கலவரத்தில் சிறு எண்ணிக்கைக்கொண்ட மீனவர்கள் பெரும் வெள்ளமெனப் பாய்ந்த நாடார்களை கலங்கடித்து விட்டனர். இது வரலாற்றில் அடிக்கடி நிகழும் ஒன்று என்பதனை படிப்பினையாக முன்வைக்கிறார்.

மார்ச் 13 அன்று இந்து நாடார்கள் பெருந்திரளாக பெரியகாடு ஊருக்கு ஆயுதங்களுடன் சென்றதையும், மீனவர்கள் எதிர்த்துத் தாக்கியதால், அங்கிருந்த சிறுதொகை மீனவர்களுக்கு பயந்து புறமுதுகுக் காட்டி ஓடியது. அதில் இருவர் வீடு திரும்பவே இல்லை. இதில், ஈத்தாமொழி பணக்கார நாடார்கள் கோழைத்தனத்தையும் வஞ்சகத்தையும் மிகத் தெளிவாகக் காட்டினார்கள். ஈத்தாமொழி கலவரத்தின்போது இவர்கள் அவர்களுடைய நாகர்கோவில் வீடுகளில் பதுங்கிக் கொண்டனர். அங்கிருந்த மக்களுக்கு உதவி செய்யவோ வழிகாட்டவோ ஆட்கள் இல்லை என்கிறார்.

இந்நூலை வாசித்தளவில்,. இந்து நாடார்களும், கிறித்தவ நாடார்களும் நாடார்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது குமரி மைந்தனின் போக்ககாக இருக்கிறது. இந்து சமயத்தையும் இந்து நாடார்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது தாணுலிங்க நாடாரின் எண்ணமாக இருந்திருக்கிறது. இதைக்குறித்து குமரி மைந்தன், “நாடார் சாதி மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி அவர்களை மோதவிட்டு அழிக்கும் வேலைக்கு தாணுலிங்கர் தலைமை தாங்குகிறார் என்றால் அவரது அரச மரபு மனப்பான்மை எவ்வளவு வலிமையாகச் செயற்பட்டு அவரை மேற்சாதியினருக்கு அடிமையாக்கி விட்டிருக்கிறது என்கிறார்.

‘கிறித்தவ நாடார்கள், எப்படி நாடார்கள் ஆவார்கள்? என்கிற ஒரு கேள்வி ஏற்கனவே இந்து நாடார்களால் எழுப்பப்பட்டு வருகிறது. மண்டைக்காடு மதக்கலவரம் என்பது முழுக்க முழுக்க கிறித்தவ நாடார்களால் உருவாக்கப்பட்ட கலவரமாக இருக்கும்போது அதனை தாணுலிங்க நாடார் எப்படி எதிர்கொள்வார் என்கிற கேள்வி எழுகிறது. தாணுலிங்க நாடாரின் வாழ்க்கை வரலாறை வாசித்திருந்தால் குமரி மைந்தனின் போக்கு மாறியிருக்கலாம். தாணுலிங்க நாடார், அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட்டதே அவர் இந்து நாடார்களுக்காக குரல் கொடுத்ததுதான். நேசமணிக்க்கும் தாணுலிங்க நாடாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை வசித்தாலே அது தெளிவாகிவிடும். இந்நூலிற்கு, “மண்டைக்காடு கலவரத்தில் கிறித்தவ நாடார்கள் மற்றும் மீனவர்களின் பங்கு என பெயர் வைத்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.  இந்நூல் வாசிக்கப்பட வேண்டிய நூல்களில் ஒன்று. மண்டைக்காடு கலவரத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு பல அரியத் தகவல்கள் இந்நூலில் உள்ளன. 



No comments:

Post a Comment