Tuesday, August 28, 2018

ஃபான்சியா தானியேல்


ஃபான்சியா தானியேலின் பேட்டியில் வசந்தத்தின் வாசனை வீசவில்லை!


09.11.2014 அன்று தினகரன் நாளிதளின் இணைப்பான, 'வசந்தம்' இதழின் அட்டைப் படத்தில் வெளியான 'காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல...' என்றத் தலைப்பானது சற்று வித்தியாசமான செய்தியை பெருமைப்பட பேசியிருந்தது. "கணவர் இந்து. அதுவும் 14 வயதிலேயே 'சிகா'வுக்குச் சென்ற இந்துத்துவவாதி. இன்றும் இந்துத்துவா அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருபவர். காதல் மனைவியோ கிறித்தவர். இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இன்றுவரை யாரும் யாருக்காகவும் மதம் மாறவில்லை. இந்த மத நல்லிணக்க வாழ்க்கைத்தான் இந்தியர்கள் அனைவருக்குமான பாடம்.
இக்கட்டுரையில், பெந்தெகோத்தே சபையைச் சார்ந்த ஃபான்சியா தானியேலும் இந்துத்துவவாதி அரவிந்தன் நீலகண்டனும் எப்படி காதலித்தார்கள் என கதை தொடர்கிறது. இவர்களின் காதலுக்கு ஃபான்சியா வீட்டில் மட்டும் எதிர்ப்பு வலுக்கிறது. இதனால் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். இக்காதலுக்கு அரவிந்தனின் தகப்பனார் உதவி செய்கிறார். திருமணத்திற்குப் பிறகு பெண் வீட்டார் சமாதானமாகி இரு வீட்டாரும் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் வந்து போவதற்கான இணக்கமான சூழ்நிலை உருவாகிறது. இவர்களுக்கு மூன்றுக் குழந்தைகள். கிறித்து பிறப்பு நாளில் குடும்பத்துடன் ஃபான்சியாவின் தகப்பனார் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.
நாங்கள் 15 ஆண்டுகளாக யாரும் யாருக்காவும் மதம் மாறாமல் வாழ்கிறோம் என பெருமைப்பட பேசும் ஃபான்சியா தானியேல், உண்மையிலேயே விவிலியத்தை ஆய்வுசெய்து, அதன் அடிப்படையில் வாழும் ஒரு கிறித்தவப் பெண்மணி அல்ல. அவரை, ஒரு பெயர்தாங்கி கிறித்தவப் பெண்மணி எனச் சொல்லலாம். அதனால்தான் அப்பெண்மணிக்கு கிறித்தவத்தை விட காதல் முக்கியமாக இருந்தது. ஒரு இந்துவோடு காதல் சாத்தியமானது என்பதனை அவள் கிறித்துப் பிறப்பு விழா கொண்டாடுவதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
இயேசுவோ அல்லது அவரது சீடர்களோ பிறந்தநாள் விழா கொண்டாடியதில்லை. பிறந்தநாள் விழாக்கள் கடவுளுக்கு விரோதமானச் செயலாகும். அதனால்தான் இயேசு என்றைக்குப் பிறந்தார் என்பதுகூட உலகில் யாருக்கும் தெரியாது. விவிலியத்தில் இருவர் மட்டுமே பிறந்தநாள் விழா கொண்டாடி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பார்வோன் மன்னன். இன்னொருவர் திருமுழுக்கு யோவானை கொலை செய்த ஏரோது மன்னன். இவர்கள் இருவருமே யகோவா கடவுளை வழிபட்டவர்கள் அல்லர். இவர்கள் இருவரின் பிறந்தநாள் விழாவிலும் மதுபானம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.
இயேசு பிறப்பு நாட்களில் குமரி மாவட்டத்தில் மதுக் கடைகளில் மது வியாபாரம் எத்தனைக் கோடியைத் தாண்டியது என்கிற கணக்கை எடுத்துப் பார்த்தால் பெயர்தாங்கி கிறித்தவர்கள் இந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்கிற பட்டியலை எடுத்துவிடலாம். அப்படிப்பட்ட பிறந்தநாள் விழாவை ஃபான்சியா தானியேல் கொண்டாடுகிறார் என்றால் அவர் ஒரு பெயர்தாங்கி கிறித்தவர் என்பது விவிலியத்தின் அடிப்படையில் புலனாகிறது. விவிலியத்தை ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் வாழும் யகோவா மறைசாட்சியினர் எவரும் இயேசு பிறப்பு விழாவை கொண்டாடுவதில்லை.
"இருவரும் அவரவர் மதத்தில்தான் இயங்கி வருகின்றனர். மட்டுமல்ல, அவரவர் மதம் சார்ந்த சடங்குகளைத்தான் இருவரும் மேற்கொண்டு வருகின்றனர்" எனத் தொடரும் பேட்டியில் ஃபான்சியா தானியேல் சொல்கிறார்: "ஞாயிறு தேவாலயத்திற்குப் போகிற பழக்கம் எங்களுக்குக் கிடையாது. வீட்டில் விவிலியம் படிப்போம்." பெந்தெகோத்தேகாரர்கள் எப்படி சத்தம்போட்டு விவிலியம் படிப்பார்கள், செபிப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்த விசயம்தான். அப்படிப்பட்ட அவர்களுக்கு இந்துக்கள் எவரும் வீடு வாடகைக்கோ, ஒத்திக்கோ கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் போடுகிற சத்தத்தில் நாம் நிம்மதியாக குடியிருக்க முடியாது. குழந்தைகள் படிக்கவும், நோயாளிகள் தூங்கவும் முடியாது.
அப்படிப்பட்ட அவர்கள், பலரை வீட்டிற்கு அழைத்து வந்து 'ஏசுவே இறங்கி வாரும்' என சத்தம் போடுவார்கள். பரிசுத்த ஆவி இறங்கி வந்துவிட்டதுபோல் கூக்குரல் எழுப்புவார்கள். இவைகளை தனது மாமனார் வீட்டில் ஃபான்சியா பின்பற்ற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. அடியேனுக்குத் தெரிந்தவரை இப்படிப்பட்ட சத்தம் எழுப்பும் சத்த மாசுகளை அவரது மாமனார் வீட்டார் யாரும் விரும்ப மாட்டார்கள். சடங்குகளைக் கடைப்பிடித்து வருவதாகச் சொல்லும் இவர் எப்படிப்பட்ட சடங்குகளை கடைப்பிடித்து வருகிறார் எனவும் பேட்டியில் சொல்லவில்லை. கிறித்தவத்தில் சடங்குகள் உண்டா என்பதற்கு, “இவர்கள் மனிதக் கட்டளைகளை கோட்பாடுகளாக கற்பிக்கின்றனர் (மாற்கு 7:7). “உங்கள் மரபுகளை நிலைநாட்ட நீங்கள் கடவுளின் கட்டளைகளை வெகுத் திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள் (மாற்கு  8 - 9) என்கிறது விவிலியம். ஆக, கிறித்தவத்தில் சடங்குகள் என்பது முற்றிலும் வியாபாரமானது.
இவர்களுடைய காதல் கதையில் இருந்து அடியேனுக்குக் கிடைக்கும் செய்தி என்னவென்றால் ஒரு வீட்டிற்குள் மனைவி கிறித்தவளாகவும், கணவன் இந்துவாகவும் வாழ முடியும்.  இது சாத்தியமானதே. அதேவேளையில் அவர்களுடைய குழந்தைகள் இரு மதத்திலும் வாழ முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஃபான்சியா தானியேல் தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் திருமுழுக்குக் கொடுத்திருந்தார் என்றால்கூட ஓரளவிற்கு பாராட்ட இடமுண்டு.  அதற்கு இந்துத்துவவாதி அரவிந்தன் நீலகண்டன் அனுமதித்தார் என்றால்,  'காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல...' என்பது பொருத்தமான செய்தியாகும். இதனைப்பற்றிய செய்தி இப்பேட்டியில் இடம்பெறவில்லை. இதன்மூலம் மத நல்லிணக்க வாழ்க்கை என்பது பலவேளைகளில் சாத்தியமற்றதுதான்.
நாகர்கோவில் அருகிலுள்ள குருசடி ஊரில் ஆனந்தி என்ற ஒரு கத்தோலிக்கப் பெண் இருந்தாள். இயேசுவின் மீதும், மரியாள் மீதும் மிகுந்த பக்தி உடையவள். காதலுக்காக கத்தோலிக்க மதத்தை விட்டுச் சென்று விட்டாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒருதடவை நான் அவளைச் சந்தித்து, "காதலுக்காக மரியாளையும் இயேசுவையும் தூக்கி வீசிவிட்டு சென்று விட்டாயே" என்றேன். அதற்கு அவள், “நான் குருசடி கோவில் திருவிழா நடக்கும் போதெல்லாம் ஊருக்கு வருவேன். அப்பொழுது கோவிலுக்குப் போவேன்என்றாள். குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுத்து விட்டாயா?’ என்றபோது அது எதற்கு?’ என்றாள். இப்படி பல உதாரணங்களை பட்டியல் போட்டுச் சொல்ல முடியும். இவர்களெல்லாம் பெயர்தாங்கி கிறிஸ்தவர்கள். இப்படிபட்ட இவர்கள், இன்றுவரை யாரும் யாருக்காகவும் மதம் மாறவில்லைஎன்பது ஏற்கத்தகுந்த்து அல்ல.
மொட்டைக் கடிதங்களில் பல விசயங்கள் உள்ளார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கும். வாசிப்பதற்கு சுவைபட இருக்கும். அந்த மொட்டை கடிதத்தில் இருக்கும் செய்திகளைவிட இதில் ஒன்றும் ஆச்சிரியமாக இருப்பதாகத் தெரியவில்லை. இவரது பேட்டியில் காதல் திரைப்படம் எடுப்பதற்கான கதை இருக்கிறது. இக்கதை ஏற்கனவே திரைப்படங்களில் வந்திருக்கிறது. இவரது பேட்டியில், அரவிந்தன் நீலகண்டன் எழுதிய நூல்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகவோ, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவோ அல்லது விவிலியத்தின் மகத்துவத்தைக் குறித்து தனது கணவரிடம் ஃபான்சியா தானியேல் பேசியதாகவோ, அதற்கு அவர் ஏதாவது மாறுபட்ட கருத்துக்களை சொன்னதாகவோ அல்லது ஏற்றுக் கொண்டதாகவோ செய்திகள் எதுவும் இல்லை. மனம்திறந்த உரையாடல் எதுவும் நடக்கவில்லை என்றே கருத முடிகிறது.
ஒரு விசயத்தை ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது. அதனைப்  ஃபான்சியா சொல்கிறார்: "அவங்க வீட்ல சைவம், நானோ அசைவ பிரியை. இதுகூட பிரச்சனையா மாறினதே இல்லை. விருப்பமானப்ப நான் வெளில போய் சாப்பிட்டு வருவேன். சொல்லப்போனா அரவிந்தனே என்னைக் கூட்டிட்டு போய் வாங்கிக் கொடுப்பார். பிறந்த வீட்டுக்கு நாங்க சேர்ந்து போறப்ப அரவிந்தனுக்காக மட்டும் தனியா சைவம் சமைப்போம்.
இவருடையப் பேட்டியில் இருந்து இரண்டு விசயங்களைப் பார்க்க வேண்டி உள்ளது. முதலாவதாக, அப்பெண்ணிற்கு மாமனார் வீட்டில் அசைவ சமையல் சமைப்பதற்கு அனுமதி கிடையாது; அதற்கான சுதந்திரமும் கிடையாது. அதனால்தான் அவள் சொல்கிறாள், "அவங்க வீட்ல சைவம், நானோ அசைவ பிரியை. இதுகூட பிரச்சனையா மாறினதே இல்லை. விருப்பமானப்ப நான் வெளில போய் சாப்பிட்டு வருவேன்." இத்தனைக்கும் ஃபான்சியாவும் அவரது கணவர் அரவிந்தனும் மாடி வீட்டிலும், அவளது மாமியார் மாமனார் கீழ் வீட்டிலும் குடியிருக்கிறார்கள். இயேசு மீன்களைப் பிடிப்பதற்கு பேதுருவிடம் வலை வீசச் சொன்னார். மீன்களை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்து உண்ணச் சொன்னார். ஏசுவைப் பின்பற்றும் அந்தப் பெண்மனியானவள் மீன்கறி சமைத்துச் சாப்பிட வீட்டில் அனுமதி இல்லாதபோது எப்படி மத நல்லிணக்கத்தை அங்கு எதிர்பார்க்க முடியும்?
இரண்டாவதாக, 'அரவிந்தன் என்னை கூட்டிட்டுப் போய் வாங்கிக் கொடுப்பார்.' இங்கு அரவிந்தனின் பெருந்தன்மையை ஒருபுறம் பாராட்ட நினைத்தாலும், அசைவ உணவை வாங்கிக் கொடுக்கும் அரவிந்தனை எந்த தராசில் வைத்து பார்ப்பது என்கிற கேள்வி எழுகிறது. அசைவம் என்பது உயிரினங்களைக் கொன்று வேக வைத்துச் சாப்பிடுவது. சைவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட அரவிந்தன், கொலை செய்யப்பட்ட உயிரினங்களை அசைவ உணவாக மனைவிக்கு வாங்கிக் கொடுக்கிறார் என்றால் அந்த கொலையின் பாவம் அரவிந்தனைத்தானே சேரும். அசைவம் சாப்பிடுவது என்பது மறுபிறப்பை முழுமையாக நம்பும் இந்துத்துவத்தைக் கொன்று சாப்பிடுவதற்கு சமம். அரவிந்தன் எப்படி தன்னை இந்துத்துவவாதி எனச் சொல்ல முடியும்? அல்லது அரவிந்தனும் பெயர்தாங்கி இந்துவா?  இதற்குப் பதிலை அரவிந்தன்தான் சொல்ல வேண்டும். அவர்களுடைய குழந்தைகள் அசைவ உணவு சாப்பிடுகிறார்களா என்பதும் பேட்டியில் பதிவு செய்யப்படவில்லை. எப்படி ஃபான்சியா தானியேல், தனது வீட்டில் மத நல்லிணக்கம் இருப்பதாகச் சொல்வது ஏற்கத் தகுந்தது அல்ல.  
இடலாக்குடி ஊரைச் சார்ந்த இசுலாமியப் பெண் நிசா என்பவரை காதலித்துத் திருமணம் செய்ததற்காக ஃபெளசிக், ஆசிக் கனி, செய்யது அலி, அப்துல்காதர் நிசாம், முகம்மது மாலிக் ஆகிய ஐந்து நபர்கள் சேர்ந்து சிடிஎம் புரத்தைச் சார்ந்த நிசாவின் கணவர் ரமேசு என்பவரை மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்தனர் என்கிற செய்தியை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் இசுலாமிய ஆண் ஒருவர் வேறொரு சமயத்தைச் சார்ந்த பெண்ணோடு அல்லது இசுலாமியப் பெண் ஒருவர் வேறொரு சமயத்தைச் சார்ந்த ஆணோடு குடும்பம் நடத்த முடியாது. அது அல்லாவுக்கு விரோதமான செயலாகும்.
அல்லாவுக்கு இணைவைக்கும் பெண்களை (வேறுமதத்தைச் சார்ந்த பெண்களை) அவர்கள் விசுவாசம் கொள்ளும்வரை (இசுலாமில் சேரும்வரை) திருமணம் செய்யாதீர்கள். இணைவைக்கும் ஒரு பெண்ணைவிட விசுவாசியான ஓர் அடிமைப்பெண் மிகச் சிறந்தவள் ஆவாள். இணைவைக்கும் ஆண்கள் (வேறுமதத்தைச் சார்ந்த ஆண்கள்) விசுவாசம் கொள்ளும்வரை (இசுலாமில் சேரும்வரை) அவனுக்கு திருமணம் செய்து கொடுக்காதீர்கள். அவன் உங்களைக் கவரக் கூடியவனாக இருப்பினும் ஒரு விசுவாசியான அடிமை மிகச் சிறந்தவனே. அவர்கள் உங்களை நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லா உங்களை சொர்க்கத்திற்கு அழைக்கிறார். (குறான் 2:221). இதன்மூலம் இசுலாமியர் ஒருவர் வேறு மதத்தைச் சார்ந்தவரை திருமணம் செய்வது பெரும்பாவம்; குற்றம். அதையும் மீறி இசுலாமியர் ஒருவர் வேறு மதத்திற்கு மாறி திருமணம் செய்தால் அவர்கள் கொலை செய்யப்படுவார். ஃபான்சியா தானியேல் இந்த வெட்டுக் குத்துச் சிக்கலில் இருந்து கொஞ்சம் தப்பிவிட்டார். அவர் பிறந்ததோ கிறித்தவக் குடும்பத்தில் . . .
ஃபான்சியா தானியேலுக்கு கிறித்தவம் என்னச் சொல்கிறது எனப் பாருங்கள்: “நம்பிக்கைக் கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கும், நெறிகேட்டோடு  என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு? கிறித்தவத்துக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? நம்பிக்கைக் கொண்டோர்க்கும் நம்பிக்கை கொண்டிராதவரோடும் என்ன தொடர்பு? கடவுளின் கோவிலுக்கும், சிலை வழிப்பாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்? வாழும் கடவுளின் கோவில் நாமே (2 கொரிந்தியர் 14 – 15). கிறித்தவத்தின்படி அரவிந்தன் நீலகண்டன் எந்த இந்துத்துவவாதியை திருமணம் செய்தததன் மூலம் ஃபான்சியா தானியேல் கிறித்தவத்தை கைகழுவிவிட்டார். அதன்பிறகும் தன்னை ஒரு கிறித்தவர் என பறைசாற்றிக் கொண்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.
“ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைவர் ஆண்; ஆணுக்குத் தலைவர் கிறித்து; கிறித்துவுக்கோ தலைவர் கடவுள் (1 கொரிந்தியர் 11:3). ஃபான்சியா தானியேலுக்கு தலைவராக இருப்பவர் ஆண் என்ற அரவிந்தன் நீலகண்டன். அரவிந்தன் நீலகண்டன் என்ற ஆணுக்கு தலைவராக கிறித்து இல்லையே. அவருக்குத் தலைவர் கிறித்துவாக இருந்தால் ஃபான்சியா தானியேல் தன்னை ஒரு கிறித்தவராக பறைசாற்றுவதில் கிறித்தவத்தின்படி நியாயம் இருக்கும். இதன்மூலம் ஃபான்சியா தானியேல் என்பவர் கிறித்தவர் இல்லை என்பது நிருபணமாகிறது. “இன்றுவரை யாரும் யாருக்காகவும் மதம் மாறவில்லை. இந்த மத நல்லிணக்க வாழ்க்கைத்தான் இந்தியர்கள் அனைவருக்குமான பாடம் என்பது அடிபட்டுப் போகிறது. ஃபான்சியா தானியேலின் பேட்டியானது அர்த்தமற்றதாகி விடுகிறது.
ஃபான்சியா தானியேலின் கணவர் அரவிந்தன் நீலகண்டன் ஒர் இந்துத்துவவாதி. அவர், ஃபான்சியா தானியேலுக்கு கொடுத்திருக்கிற சுதந்திரம் என்பது மதத் சுதந்திரமாக கருதப்படுகிறது. ஏனெனில் ஆணைப்போன்று பெண்ணிற்கும் சுதந்திரம் உண்டு என்பதனை அரவிந்தன் நீலகண்டன் அறிந்திருக்கிறார். அச்சுதந்திரத்தை அவர் மனைவிக்குக் கொடுத்திருக்கிறார். மனைவியை வெளியே அழைத்துச் சென்று அசைவ உணவு வங்கிக் கொடுப்பதிலிருந்து, கிறித்து பிறப்பு விழாவை கொண்டாட அனுமதிப்பதிலிருந்து அதனை அறிய முடிகிறது. இங்கே, குழப்பத்தில் இருப்பவர் ஃபான்சியா தானியேல் ஒருவரே. தான் ஒரு கிறித்தவள் அல்ல என்பதனை ஃபான்சியா தானியேல் அறிந்து கொண்டால் நல்லதொரு இந்துத்துவவாதியாக அவரால் வாழ முடியும். ஃபான்சியா தானியேல், இப்பொழுது கிறித்தவராகவும் இல்லை; இந்துத்துவவாதியாகவும் இல்லை. இலட்சியப் பாதையில் பயணிக்க வேண்டுமென்றால் அதற்கு அவர் நிறைய நூல்களை வாசிக்க வேண்டியதிருக்கும் . . .



No comments:

Post a Comment