Tuesday, August 28, 2018

கேப்டன் எஸ்.பி. குட்டி


எச்.பி. குட்டியின், “மண்டைக்காடு கலவர கால நினைவலைகள் இயேசுவை பிசாசாக சித்தரிக்கிறது!
கேப்டன் எச்.பி. குட்டி எழுதிய, “மண்டைக்காடு கலவர கால நினைவலைகள் நூலானது சற்று வித்தியாசமானது. அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டுத் தந்துள்ளார். மண்டைக்காடு கலவரம் குறித்து 2016 வரை உண்மைப் பதிவுகள் எதுவும் வெளிவரவில்லை என்று சொல்லும் அவர், “பலரும் பலவிதமான சொந்தக் கருத்துக்களை அனுமானங்களின் அடிப்படையில் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்... கண் முன்னால் நடந்த மண்டைக்காட்டுக் கலவரத்தின் உண்மை முகத்தை உள்ளது உள்ளபடி, நேரடி சாட்சியாக இருந்த நான் சிலவற்றை சொல்ல முயன்றிருக்கிறேன் என நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இருப்பினும், அவரது நூலுக்குள் நுழையும்போதே ஒருதலைபட்சமாக ஒரு செய்தியை முன்வைக்கிறார். அப்படித்தான் அவர் நூலினைத் துவங்க முடியும்.

1982-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயத்தை உடைக்கவும், தீ வைத்துக் கொழுத்தவும், கேரளாவிலிருந்து வந்திருந்த பெண் பக்தர்களின் ஆடையைக் களைந்து மானபங்கப்படுத்தவும் முயன்ற ஒரு கொடுங்கும்பலைக் கலைந்து செல்ல காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது. இதில் 6 மீனவ கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை எச்.பி. குட்டி நேரடியாகப் பார்க்கவில்லை. இருப்பினும், அப்படித்தான் அவரால் கதையை நகர்த்த முடியும் என்பதால் அதன்படி நகர்த்தியிருக்கிறார். முரட்டுக் கும்பல் ஒன்று கோவில் வரை முன்னேறியது என்று சொல்லும் எச்.பி. குட்டி, சுட்டுக்கொல்லப்பட்ட ஆறு மீனவர்களின் உடல்கள் எங்கே கிடந்தது என்பதனைப் பார்த்தாலே காவல்துறையின் திட்டமிட்ட சதியை அறிந்து கொள்ள முடியும். நூலின் முடிவில், “கிறித்தவ மதமாற்றி பாதிரிகள் உருவாக்கியதுதான் மண்டைக்காட்டுக் கலவரம் என்கிறார். இச்சம்பவங்களைக் குறித்து அவர் ஆழமாக எதுவும் சொல்லாமல் ஒற்றை வரிகளில் நகர்ந்து செல்கிறார். இருப்பினும், இந்நூலானது மண்டைக்காடு கலவரத்தைவிட மதமாற்ற நிகழ்வுகளையே பக்கம் பக்கமாக அலசுகிறது.

1951-ஆம் வருடம், ஐந்தாம் வகுப்பை முடித்து ஆறாம் வகுப்பைத் தொடர புத்தளம் லண்டன் மிசன் மேல்நிலைப் பள்ளிக்கு எச்.பி. குட்டி சென்றுள்ளார். அன்றுதான் அப்பள்ளியில் அவர் சேர்ந்த முதல்நாள். மதியம் மணியடித்ததும் மாணவர்கள் அனைவரும் அவரவர் கொண்டுவந்த உணவுப் பாத்திரங்களை வேகமாக எடுத்துவிட்டு சாப்பிடுவதற்கான இடத்தைப் பிடிக்கத் துவங்கியுள்ளனர். அப்பொழுது ஒரேயொரு அறையில் மட்டும் சாப்பிடுவதற்கு இடம் கிடந்துள்ளது. எச்.பி. குட்டி அங்கு சென்று உட்காந்திருக்கிறார். அங்கிருந்த மாணவர்கள் எச்.பி. குட்டியை உட்கார விடாமல் விரட்டி இருக்கிறார்கள். உள்ளே நடப்பதை வாசல் வழியாகப் பார்த்த பிறசாதி மாணவர்கள், வெளியே வராதே, அங்கேயே இரு என கத்தியுள்ளனர். கடைசியில் வெளியேயும் வருவதற்கு முடியாமல், உள்ளேயும் இருக்க முடியாமல் கதவோரத்தில் இருந்து பயத்தோடு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்திருக்கிறார்.

புல்லுவிளை ஊரில் குடியிருந்த எச்.பி. குட்டி, கீரைகளை சுசீந்திரத்தில் விற்பதற்காக கொண்டு சென்றுள்ளார். பெண்கள் ஆர்வத்தோடு ஓடிவந்து கீரையை எடுத்துள்ளனர். கொஞ்சம் பொறுங்க, கீரையை நான் எடுத்துத் தருகிறேன் எனக் கூறியிருக்கிறார். அதற்கு அங்குள்ள பெண்கள், அபச்சாரம், அபச்சாரம் கீரையைப் பெட்டியில் போட்டுவிட்டு நீ அந்தப் பக்கம் போய் நில்லு என கத்தியிருக்கிறார்கள். அவர்கள் கீரையை எடுத்துவிட்டுச் சென்றபிறகு எச்.பி. குட்டி, பெட்டியைப் போய் பார்த்திருக்கிறார். மொத்தம் எட்டு காசுகளே கிடந்துள்ளன. எதிர்பார்த்த காசுகள் கிடைக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை. கீரையை பயிர் செய்தது, புடுங்கியது, எடுத்துக் கொண்டு வந்தது எல்லாமே இந்தக் கைதான். இப்போது இந்த கை தொட்டுவிடக்கூடாது என்றார்களே என்கிற வேதனை எச்.பி. குட்டியை வாட்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட இளமைகால அனுபவங்கள், சாதி ரீதியாகவே ஒரு தாக்கத்தை எச்.பி. குட்டிக்குள் ஏற்படுத்தி இருக்கிறது. அதைவிட மேலாக மத மாற்ற நிகழ்வுகள் அவருக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வரிப் பாக்கியைக் கட்டவில்லை என்றால் செத்துப் போனவருக்கான ஈமச் சடங்குகளை ஊரார் செய்வதில்லை என்கிற சம்பவங்களை அவர் கோடிட்டுக் காட்டுகிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பக்கத்தில் இருக்கிற கிறித்தவர்கள் உடனடியாக களத்தில் இறங்கி விடுகிற செய்தியையும் பதிவு செய்திருக்கிறார். 

1805-இல் மைலாடி மகராசன் என்பவர் கால்நடையாக சிதம்பரம் நடராசனை வணங்கி வர புறப்பட்டார். ஆறு மாதங்கள் ஆகியும் திரும்பி வராததால் அவரை இறந்து போனவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டார்கள். அவர் திரும்பி வந்தபோது அவரை சாதி பிராமணப் பூசாரிகள் தெருவுக்குள்ளோ, கோவிலுக்குள்ளோ அனுமதிக்கவில்லை.

தனக்கு நேர்ந்த அவமானத்தையும், கொடுமையையும் நினைத்து வருந்திய மகராசன் சில காலம் தஞ்சாவூரில் இருந்த அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். ஒருநாள் சிதம்பரம் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றபோது ஒரு ஆங்கிலப் பாதிரியார் கிறித்தவம் குறித்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார். எல்லோரும் அங்கிருந்து சென்ற பிறகும் காவி கட்டிய மகராசன் மட்டும் அங்கேயே நின்றிருக்கிறார். அந்த ஆங்கிலேயரை சந்தித்து, மைலாடிக்கு வர வேண்டுமென்ற கோரிக்கையும் வைத்திருக்கிறார். இவ்வாறாக ஆங்கிலப் போதகர்களை அழைத்து வந்து பள்ளிக்கூடங்களையும் தேவாலயங்களையும் ஆரம்பித்திருக்கிறார். மைலாடி மகாராசனை பற்றிய ஒருவரிச் செய்திகளை பல நூல்களில் வாசித்திருக்கிறேன். அவருக்குப் பின்னால் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதனை எச்.பி. குட்டியின் இந்நூல் வாயிலாக அறிய வருகிறேன்.  

கிறித்தவ மதத்திற்கு மதம் மாறிப் போனப் பெண்களுக்கு மேலாடை போட்டுக் கொள்ளும் உரிமையை ஆங்கிலப் போதகர்கள் 1828-இல் வாங்கிக் கொடுத்தனர். அதேசமயம் இந்துவாக இருக்கும் பெண்கள் மேலாடை அணிவதனை இந்து மன்னர் அனுமதிக்கவில்லை. மதம் மாறிப்போனால் நாமும் மேலாடை அணிந்து கொள்ளலாம் என்பதால் பலர் மதம் மாறிப் போயினர். மதம் மாறிப் போனவர்களுக்கு ஆங்கிலப் போதகர்கள் கல்வி வசதியையும், தொழில் வசதியையும்  ஏற்படுத்திக் கொடுத்தனர். எங்களை கோவிலுக்குள் விட மாட்டேன் என்கிறான். அதனால் நாங்கள் கிறித்தவ ஆலயத்திற்குப் போகிறோம் என மதம்மாறிப் போனவர்களும் உண்டு.

மதமாற்றம் குறித்து எச்.பி. குட்டி, “இந்திய சுதந்திரத்திற்கு முன்னால் இந்துக்களிடமிருந்த சாதிக் கொடுமையினாலும், தீண்டாமையினாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்துக்கள் மதம் மாறிச் சென்றபோது அதில் சிறிது நியாயம் இருந்தது என்பதனை ஒத்துக்கொள்கிறார். அதேவேளையில், “சுதந்திரத்திற்குப் பிறகு ஆலய நுழைவுக்கு அனுமதி வந்தபிறகு, சட்டப்படி சாதிக் கொடுமை ஒழிக்கப்பட்ட பிறகு, கிறித்தவர்கள் இந்துக்களின் அறியாமையை முழுக்க முழுக்க பயன்படுத்தி, பயமுறுத்தி, ஆசைகாட்டி, பொருள் கொடுத்து மதம் மாற்றும் உத்தியை கடைப்பிடித்தனர் என்கிறார்.

திருத்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் பட்டியல் வகுப்பினர் (வன்கொடுமை தடுப்பு) திருத்தச் சட்டம் 2015-இன்கீழ் பதிவு செய்யப்பட்ட பின்பும் முடித்து வைக்கப்படாமல் உத்தரபிரதேசத்தில் 28,031 வழக்குகளும், சத்தீசுகாரில் 2,287 வழக்குகளும், தில்லியில் 171 வழக்குகளும் நிலுவையில் இருப்பது கவலை அளிக்கிறது என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் கவலை தெரிவித்துள்ளார் என்கிற செய்தி 30 ஆகத்து 2017 தினமணிப் பத்திரிகையில் வெளியானது. “சட்டப்படி சாதி ஒழிக்கப்பட்ட பிறகு என்கிற வாதத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?  சாதிப் பிரச்சனைகள் சமூகத்தில் இருப்பதால்தான் மீண்டும் மீண்டுமாக சட்டத்திற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதனை எச்.பி. குட்டி அறிந்திருக்கவில்லையா என்கிற கேள்வி எழுகிறது.

“பழங்குடியினர் மற்றும் பட்டியல் வகுப்பினர் (வன்கொடுமை தடுப்பு) திருத்தச் சட்டம் 2015 ஏன் உருவாக்கப்பட்டது? இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதானே 1956-இல் சட்ட மேதை அம்பேத்கார் மதம் மாறினார். அம்பேத்கார் மதம் மாறக் காரணம் என்ன? “தலித், பிற்படுத்தப்பட்டவர் மற்றும் அதன் தலைவர்களை அவமதிப்பதையும் சாதி மற்றும் மத அடிப்படையில் இவர்களை அணுகுவதையும் பாசக மற்று ஆர்.எச்.எச். அமைப்பினர் நிறுத்திக் கொள்ளாவிடில் நானும், எனது கோடிக்கணக்கான ஆதரவாளர்களும் புத்த மதத்திற்கு மாறுவோம் என மாயாவதி அறிவிக்கையிட்ட செய்தி தமிழ் ‘தி இந்து பத்திரிகையில் திசம்பர் 12, 2017 அன்று வெளியானது. ஆர்.எச்.எச். சாதியை ஒழித்துவிடும் என்பதெல்லாம் ஒரு ஏமாற்று வேலைதான். அதேவேளையில் சுதந்திரத்திற்குப் பின்பாக, “கிறித்தவர்கள், இந்துக்களின் அறியாமையை முழுக்க முழுக்க பயன்படுத்தி, பயமுறுத்தி, ஆசைகாட்டி, பொருள் கொடுத்து மதம் மாற்றும் உத்தியை கடைப்பிடித்தனர் என்கிற செய்தியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  

மதமாற்றம் என்பது எச்.பி. குட்டியின் வீட்டையும் விட்டு வைக்கவில்லை. அதனைக் குறித்து அவரே இந்நூல் வாயிலாகப் பேசுகிறார். எனது பெற்றோருக்கு நாங்கள் எழு பிள்ளைகள். ஆண்கள் நான்கு. பெண்கள் மூன்று. 1960 காலகட்டத்தில் எனது வீட்டிற்கு ஆசீர்வாதம் என்ற பெயருடைய எங்களது தூரத்து உறவினர் ஒருவர் அடிக்கடி வருவார். காலையில் வந்தால் மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு மாலையில்தான் வீட்டிற்குப் போவார். பகல் முழுவதும் அப்பாவோடு பேசிக் கொண்டிருப்பார். அவர் ஒரு கிறித்தவர். கையேடு ஒரு விவிலியத்தையும் கொண்டு வந்திருப்பார். எனது அப்பாவுக்கோ இராமாயணம், மகாபாரதத்தைக் கேட்டதோடு சரி. அதற்குமேல் இந்து சமயத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஏனெனில் யாரும் இந்து சமயத்தைப் பற்றி சொல்லிக் கொடுப்பதில்லை. பெருங்காயம் வைத்த டப்பாவைப்போல இந்து சமயம் என்கிற வாசனையைத் தவிர இந்து சமயத்தைப் பற்றி கிராமத்து இந்துக்களுக்கு எதுவும் தெரியாது.

ஆசீர்வாதம் என்கிற மதம் மாற்றியிடம் என் அப்பா மாட்டிக் கொண்டார். விவிலியத்தைப் படிக்கத் துவங்கினார். விவிலியத்தைப் படிப்பதற்குப் பதிலாக பகவத்கீதையைப் படிக்கக் கூடாதா என நான் கேட்டேன். உடனே பக்கத்தில் இருந்த ஆசீர்வாதம், “அது தெரியாதா, சொக்காரன் மாருக்கிடையில் சண்டையை மூட்டிவிட்டு மகாபாரதப் போரில் அத்தனை பேரையும் போட்டுத் தள்ளினானே சிறிகிருசுணன், அவன் சொன்னதுதானே பகவத்கீதை என்று போட்டுக் கொடுத்தார். அப்பாவுக்கு இந்த விசயம் தெரியாததல்ல, ஆனாலும் கிருசுணன், அண்ணன் தம்பிக்குள்ள சண்டையை மூட்டிவிட்டவன் என்பதை மிகுந்த அழுத்தம் கொடுத்துச் சொன்னார். இந்து மதத்ததில் படிப்பதற்கு இந்த விவிலியம் மாதிரி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என அப்பாவும் அவருக்கு ஒத்துப் பாடினார் என்கிறார்.

1964-இல் எச்.பி. குட்டி செய்யாறில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் கிறித்தவர்களாக மாறிவிட்டோம். நீ உன்னிடமுள்ள பிசாசு பற்றிய புத்தகங்களையும், பிசாசு புகைப்படங்களையும் எடுத்து எறிந்துவிடு. முக்கியமாக கிறித்தவர்களிடமிருந்து உனக்கு நல்ல நல்ல சம்பந்தங்கள் எல்லாம் வருகின்றன. நீ ஊருக்கு வரும்போது பேசி முடிக்கலாம் என அம்மா சொன்னதாக அவருடைய மூத்த அக்கா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இது ஒரு பேரடியாக இருந்தாலும், எச்.பி. குட்டியின் அப்பா மரித்தபோது அவரின் ஈமச்சடங்கை இந்து முறைப்படி நடத்துவதா அல்லது கிறித்தவ முறைப்படி நடத்துவதா என்கிற ஒரு சர்ச்சையே எழுந்திருக்கிறது.

என்ன இருந்தாலும் நீ அய்யாவுக்கு இப்படியொரு துரோகத்தை செய்திருக்கக்கூடாது. எங்களோடு சேர்ந்து நீ மதம் மாறித்தான் வரவில்லை. அதற்காக அப்பாவை கடைசியில் மோட்சத்திற்கு போகவிடாமல் தடுத்துவிட்டாயே என்கிற குற்றச்சாட்டை தாய் வைத்தபோது எச்.பி. குட்டி கலங்கிதான் போயிருக்கிறார். இதனை யார் சொன்னார்கள் எனக் கேட்டபோது, “நம்ம ஊர் பாதிரிதான். அவர் மிகவும் நல்லவர். அவர்தான் சொன்னார். இத்தனை நாளும் இருட்டில் சாத்தானின் ஆட்சியில் இருந்த உங்கள் கணவர் கடைசி காலத்தில் இயேசுவின் அரசாட்சியில் நுழைந்து வெளிச்சத்தில் வாழ்ந்திருந்தார். அவர் காலமான பிறகு மோட்ச உலகிற்கு புறப்படும் நேரத்தில் உங்கள் பொறியியல் படித்த மகன் வந்து பிசாசு மந்திரம் சொல்லி அவர் மோட்சத்திற்குப் போகவிடாமல் தடுத்துவிட்டானே என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். என்ன இருந்தாலும் நீ அப்படியொரு செயலை அய்யாவுக்கு எதிராக செய்யலாமா? அவர் இந்நேரம் மோட்சம் போகாமல் எங்கே நின்று அல்லாடுகிராரோ? என்று அந்த தாய் கண்கலங்கி இருக்கிறார். மதமாற்ற நிகழ்வுகள் எவ்வளவு தூரம் உணர்ச்சிப்பூர்வமாக வேலை செய்கிறது என்பதனை இதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. “தகப்பனுக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன் என்ற இயேசுவின் நோக்கத்தை இவ்விடத்தில் எச்.பி. சுட்டிக்காட்டுவது பாராட்டுதலுக்கு உரியது.

எச்.பி. குட்டியின் மூத்த அண்ணனும், இரண்டாவது அக்காவும் மதம் மாறவில்லை என்பதனை மகிழ்ச்சிக்குரிய செய்தியாக அடியேன் பார்க்கிறேன். இந்த இடத்தில் அரசியல்வாதி வைகோ நிலையையும் பார்க்கிறேன். வைகோ கிறித்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என நாலுமாவடி மோகன் சி. லாசர் சொன்னதிற்கு,  “என்னுடைய சகோதரி கிறித்தவ மதத்தில் நம்பிக்கைக் கொண்டவர். மகள் மற்றும் மருமகன் கிறித்தவ மதத்தில்தான் இருக்கிறார்கள். நான் கிறித்தவ மதத்தில் சேரவில்லை என்றார். அவர்கள் மதம் மாறியது குறித்த எந்தவொரு கவலையும் வைகோவுக்கு இல்லை. இங்கு எச்.பி. குட்டி வருத்தப்படுகிறார். வைகோவுக்கு அரசியல் தேவைப்படுகிறது. எச்.பி. குட்டிக்கு அரசியல் தேவைப்படவில்லை என்பதும் கவனத்திற்கு உரியது. இதுதான் இருவருக்குமான வித்தியாசம்.

“ஏய்! பாவிகளே மனம் திரும்புங்கள்! இருட்டிலே இருந்து வெளிச்சத்திற்கு வாருங்கள். பிசாசுகளை கும்பிடுவதை நிறுத்துங்கள். இயேசு கிறித்துதான் மெய்யான தேவன் என அம்மன் கோவில்களில் நின்றுகொண்டு அவர்கள் நடத்திய சமயப் பிரச்சாரம் உச்சகட்டம் என சொல்லும் எச்.பி. குட்டி, கிறித்தவர்களுடைய பலவீனம் என்ன என்பதற்கு, “அவர்கள் வணங்குகிற இயேசு கிறித்துவையே விவிலியத்தின் வசனங்கள் பிசாசாக அலைந்து திரிந்தவர் என்று ஆதாரப்பூர்வமாக சொல்கின்றன என்கிறார். ஒருவர் மரித்தபிறகு வந்தால் அவரை பிசாசு என்போம். இயேசு மரித்து பூமியில் சில காலம் உலாவியதாக விவிலியம் சொல்வதால் அவர் பிசாசு என்கிற கருத்தை எச்.பி. குட்டி முன்வைக்கிறார். இப்பிரச்சாரத்தின் மூலம் அவரால் இந்துக்கள் மத்தியில் ஓரளவிற்கு விழிப்புணர்வு கொடுக்கவும் முடிந்திருக்கிறது.

நீங்களே சொல்லுங்கள், யாரெல்லாம் இறந்தபிறகு பேயாக அலைவார்கள்? தூக்குப் போட்டு செத்தவன் பேயாக வருவான். விபத்தில் செத்தவன் பேயாக வருவான். மருந்தடித்துச் செத்தவன் பேயாக வருவான். ஆசை நிறைவேறாமல் அதை மனதில் வைத்துக்கொண்டே செத்தவன் பேயாக வருவான். சிலுவையில் அறையப்பட்டு செத்துப் போனாலும் பேயாக வருவான்.

நீங்கள் கும்பிடும் சாமி யாராவது சிலுவையில் அறையப்பட்டு கதறக்கதற கொல்லப்பட்டார்களா? கடவுளே என்னை ஏன் கைவிட்டாய் என்று அழுது புலம்பி, உரக்க சத்தமிட்டோ நமது சாமி யாராவது செத்துப் போனார்களா? அப்படியென்றால் நம்மைப் பார்த்து, பேயைக் கும்பிடுகிறோம் என்று கிறித்தவர்கள் ஏன் சொல்கிறார்கள்?

இயேசு, என் தேவனே, என் தேவனே, என்னை ஏன் கைவிட்டாய் என்று பலமாக அலறியபடி உயிரை விட்டார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக சொல்லப்பட்ட அவர் தோட்டக்காரன் வேடத்தில் மகதலேனா மரியாளுக்குக் காட்சி கொடுத்தார். எம்மாவு என்ற ஊருக்குச் சென்று கொண்டிருந்த சிலரோடு பகல் முழுவதும் பயணம் செய்த அவர் அன்று இரவுதான் கூடவந்த மக்களுக்குக் காட்சி கொடுத்தார். பூட்டிய அறையினுள் ஒழிந்திருந்த அவருடைய சீடர்களுக்கு (கதவு சாவி துவாரம்) வழியாக ஆவியாக உள்ளே சென்று காட்சி கொடுத்தார். இவ்விதமாக அங்குமிங்குமாக சிலருக்குக் காட்சி கொடுத்துவிட்டு பிறகு 40 நாட்கள் கழித்து ஒலீவ மலையில் ஏறி காணாமல் போனார். இப்போது சொல்லுங்கள், நான் சொல்லிய செய்தி எல்லாம், மிகச் சரியாக ஒரு ஆவிக்குப் பொருந்துகிறதா இல்லையா? ஆவியை கடவுளாகக் கும்பிடுகிறவர்கள் கிறித்தவர்கள்.

இப்படிப்பட்ட செய்தியை ஒவ்வொரு இந்து ஊர்களுக்கும் சென்று எச்.பி. குட்டி பேசியிருக்கிறார். பொட்டல்குளம், இருளப்பபுரம் ஆகிய இடங்களில் பேசியபோது கிறித்தவர்கள் எச்.பி. குட்டியை தாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். தன்னுடைய இந்து சமயம் அழிந்துவிடக் கூடாதே என்கிற ஒரு ஆழமான உணர்வு அவருக்குள் நெருப்பாய் எரிந்திருக்கிறது என்பதனை நூல் வாயிலாக அறிய முடிகிறது. ஆண்டாண்டு காலமாக இவர்கள் நற்செய்தி பெருவிழா என்ற பெயரில் ஆதராமே இல்லாமல் வாய்க்கு வந்தபடி திட்டியதற்கு எச்.பி. குட்டி பதில் சொல்ல விழைந்திருக்கிறார். இன்னும், “எத்தனை நாளைக்குத்தான் இந்துக்கள் செம்மறி ஆடுகளாக இருந்துகொண்டு கிறித்தவ மதம் மாற்றிகளை இரத்தம் குடிக்க அனுமதிக்க வேண்டும்? என்கிற நியாயமானதொரு கேள்வி எச்.பி. குட்டியிடமிருந்து எழுந்திருக்கிறது. 

இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிட்டால், அங்கு வசிக்கிற இந்துக்களை கோவில் கட்ட அனுமதிப்பதில்லை. இந்துக் கோவிலைக் கட்டியவன் கிறித்தவ சமயம் மாறிவிட்டால், கோவில் எனது பட்டா நிலத்தில் இருக்கிறது என்று சொல்லி அதனை இடித்து விடுவது போன்ற வரலாற்றுச் சம்பவங்களையும் இந்நூலில் எச்.பி. கோடிட்டுக் காட்டுகிறார். மாவட்டத்தில் கிறித்தவர்களுக்கு எதிராக இந்துக்கள் கொடுத்த புகார்களைத் திரட்டி அவைகளை இந்து ஒற்றுமை மாநாட்டின்போது நூலாக விநியோகிக்கப்பட்டது என்கிற செய்தியையும் பதிவு செய்திருக்கிறார்.

23.09.2015 ஆணைக்கட்டி ஆசரமத்தில் இருந்த சுவாமி தயானந்த சரசுவதி, எச்.பி. குட்டியை ஆசமத்திற்கு அழைத்திருக்கிறார். வரும்போது மதமாற்றத்தைத் தடுக்க ஒரு வரைவுத் திட்டம் தயார் செய்து கொண்டுவா. அதனை நிறைவேற்ற எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். கோயம்பத்தூர் அர்சுன் சம்பத், “உங்களுக்கு நன்றாகவே கீதை சொல்ல வருகிறது. நீங்கள் மட்டும் சாமியைக் கொஞ்சம் அனுசரித்துப் போனால் நீங்கள் செய்ய விரும்பும் சேவையை நல்ல முறையில் இவர்களை வைத்தே செய்து கொள்ளலாம் என வழியில் அறிவுரை வழங்கிவிட்டு சென்றிருக்கிறார். அன்றிரவே வரைவுத் திட்டத்தை சுவாமியிடம் ஒப்படைத்து இருக்கிறார். அதனை மேலோட்டமாகப் பார்த்த அவர், “ஆண்டுக்கு 12 பூசாரிகள் பயிற்சி முகாம்கள்தானே. எல்லா செலவையும் நான் கொடுத்து விடுகிறேன் என நம்பிக்கைக் கொடுத்திருக்கிறார்.

காலையில் எச்.பி. குட்டி,  சுவாமி தயானந்த சரசுவதியை சந்தித்தபோது “உனக்கு நான் உதவி செய்ய முடியாது. நீ சாதிப் பிராமணர்களை திட்டியிருக்கிறாய் எனக் கூறியுள்ளார். அதற்கு எச்.பி. குட்டி, “ஐயா, குமரி மாவட்டத்தில் இன்று மதமாற்றம் அதிகமாகவே இருக்கிறது என்றால் அதற்குண்டான காரணங்களை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் உண்மையில் நடந்தவற்றில் சிலதை என் முன்னுரையில் சொல்லியிருக்கிறேன் எனக் கூறியுள்ளார். அதற்கு அவர், “இவையெல்லாம் எனக்கும் தெரியும். நாயக்கன் (பெரியார்) இதையெல்லாம் முன்னாலேயே சொல்லிவிட்டான். நீ ஒன்றும் இன்று வந்து புதிதாக சொல்ல வேண்டாம். நீ போகலாம் என்று கடிந்திருக்கிறார்.

எப்படி மதமாற்றம் நிகழ்ந்தது என்பதனை சொல்லும்போது சில சாதிக்காரர்களின் நெஞ்சம் பதைபதைக்கத்தான் செய்யும். “இவர்களுக்கு, இந்துக்கள் மதம் மாறிப் போவதை தடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தைவிட, கடந்த காலங்களில் தாங்கள் செய்த குற்றங்கள் வெளிப்பட்டு விடக்கூடாதே என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது என்கிற எச்.பி. குட்டியின் பதிவானது நடுநிலையான ஒரு பதிவாக வெளிப்பட்டிருப்பதனைக் காண்கிறேன். அதேவேளையில், “ஆர்.எச்.எச். உருவாக்க நினைக்கும் சாதியற்ற உண்மையான இந்துவாக இன்றும்கூட மாறிவிடவில்லை என்று எச்.பி. குட்டி முன்வைக்கும் செய்தியானது சிவ அடியார் திருத்தமிழ்த் தேவனாருக்குள் பல கேள்விகளை எழுப்பத்தான் செய்கிறது.

“இவர்களுக்கு மற்றவர்கள் எல்லாம் சாதியை இழந்துவிட வேண்டும். சாதிப் பிராமணர்கள் மட்டும் அப்படியே சாதிப் பிடிப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருக்கிறது என சாதி ஒழிப்பு குறித்து எச்.பி. குட்டி முன்வைக்கும் வாதம் ஏற்புடையதாக இல்லை. இந்து மதம் சாதியை இழந்துவிடப் போகிறதா? சாதியை ஆர்.எச்.எச். அமைப்பானது ஒழித்துவிட போகிறதா? அவ்வாறு ஒழுத்துவிடப் போகிறது என்று யாராவது சொன்னால், அது காற்றை கையில் பிடிக்க முயற்சி செய்வது போன்றுதான்.
எச்.பி. குட்டி, இராணுவத்தில் பணி செய்தவர் என்பதால் பகவத்கீதை அவருக்கு ஏற்புடையதாகி இருக்கிறது. அதனை அவரே சொல்கிறார், “சீனா, இந்தியா மீது படையெடுத்ததால் கோபப்பட்டு இராணுவத்தில் சேர்ந்தேன். இராணுவத்தில் சேர்ந்து இன்னொருவனை கொலை செய்ய வேண்டுமென்றால் அதற்கு பகவத்கீதை உறுதுணையாக இருக்கும். அதேவேளையில், பகவத்கீதை உயிரோடு இருப்பதுவரை சாதி கட்டமைப்புகள் இருக்கும். சாதியும், வர்ணாசுரமும் வேறுவேறு என சொல்லிவிட்டு இலகுவாகக் கடந்துவிட முடியாது. அதுவும் ஏற்றத் தாழ்வுகளை முன்வைக்கும் அடுக்குகள்தான்.

இந்து சமயம் அழிந்து கொண்டிருப்பதற்குக் காரணமே பகவத்கீதையை தூக்கிப் பிடிப்பதுதான் என்பது சிவ அடியார் திருத்தமிழ்த்தேவனாரின் ஆணித்தரமான கருத்து. பகவத்கீதை இந்துக்களின் புனித நூல் என்று சொல்கிறபோது இந்து சமயத்திற்கு உள்ளிருந்தே எதிர்ப்புகள் கிளம்புகின்றன. இந்தியையும் சமசுகிருதத்தையும் தூக்கிப் பிடிப்பதன் மூலம் எப்படி மொழிப் பிரிவினையை ஏற்படுத்துகிறோமோ அப்படித்தான் இந்து சமயத்திற்குள்ளும் பிரிவினைகள் நடக்கிறது. இந்து சமயம் என்பது பல சமயங்களின் கூட்டு சமயம். அதனுள் இருக்கும் ஒவ்வொரு சமயத்திற்கும் தனித்தனி தத்துவங்கள் இருக்கிறது. இந்து சமய நூல்கள் ஓராயிரத்திற்கு மேற்பட்டவை.

பகவத்கீதைதான் இந்துக்களின் புனித நூல் என்பதனை ஒட்டுமொத்த இந்துக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திருமந்திரமும், திருவாசகமும், சிவஞானபோதமும் அடியேனை இந்து சமயத்திற்கு அழைத்து வந்தது. இந்து சமயத்திற்கு அழைத்து வந்தது என்பதனைவிட சைவ சமயத்திற்கு அழைத்து வந்தது என்பதுதான் பொருத்தமானதாக இருக்கம். நானொரு சிவ அடியார் என்பதில்தான் அடியேனின் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. குமரி மாவட்டத்தில் மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தியது பகவத் கீதை அல்ல; அய்யா வைகுண்டரின் அகிலத் திரட்டு என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

மதமாற்றம் தடுக்கப்பட வேண்டும். மதமாற்றத் தடுப்புச் சட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் நிறைவேற்றப்பட வேண்டும். மதம் மாறுகிறவர்கள், ஏன் மதம் மாறுகிறேன் என்கிற வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்துவிட்டு மதம் மாற வேண்டும். தகப்பனார் மதம் மாறினார் என்றால் வீட்டில் உள்ள மனைவி, பிள்ளைகள் என அனைவரையும் மதமாற்றம் செய்ய நிர்பந்திப்பது முறியடிக்கப்பட வேண்டும். பி.எச். குட்டி சொல்வதுபோன்று, “கிறித்தவர்கள், இந்துக்களின் அறியாமையை முழுக்க முழுக்க பயன்படுத்தி, பயமுறுத்தி, ஆசைகாட்டி, பொருள் கொடுத்து மதம் மாற்றும் உத்தியை கடைப்பிடித்தனர் என்பது இனிமேல் நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இந்து சமய நூல்களை சமைத்து வாழ்பவர்களின் முக்கியக் கடமையாகும். இந்நூலில் பி.எச். குட்டியின் பலகால உழைப்பும், அனுபவமும் நிறைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு இந்துக்களும் வாசிக்க வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று. 



No comments:

Post a Comment