Wednesday, August 22, 2018

இரசூல்


இரசூலின், “வகாபிசம் சமாத்தைவிட்டு நீக்குவதற்கு துணைபோகிறது!

தமிழ் இலக்கியத்தில் கவிதை, கட்டுரை, சிறுகதை ஆய்வு என பல பரிணாமங்களில் இயங்கியவர் தக்கலையைச் சார்ந்த கவிஞர் இரசூல். இசுலாமிய அடிப்படை வாதத்திற்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்தவர். இசுலாமிய விளிம்புநிலை மக்களுக்காக தொடர்ந்து எழுதியும், இயங்கியும் வந்தவர். மைலாஞ்சி, அரபு மாக்சியம், கெண்டை மீன் குஞ்சும் குரான் தேவதையும், பின் நவீனத்துவ வாசிப்பில் இசுலாம் பிரதிகள், இசுலாமியப் பெண்ணியம், தலித் முசுலிம், சூபி – விளிம்பின் குரல் எனப் பலப் படைப்புகளை சமூகத்திற்கு அளித்தவர்.
“ஆயிரம் நபிமார்கள் இருந்தும் ஏனில்லை வாப்பா ஒரு பெண் நபி” என்ற கவிதையை எழுதியதற்காக தக்கலை அஞ்சு வண்ணம் பீர்முகமது சமாஅத் இவரை ஊர்நீக்கம் செய்தது. குடி குறித்து இசுலாம் என்ன சொல்கிறது என்பதனை எழுதியதற்காக மீண்டும் ஒருமுறை மேற்படி சமாஅத் மூலம் ஊர் நீக்கம் செய்யப்பட்டார். அதனை எதிர்த்துத் தக்கலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் இரசூல்.
அரசு அதிகாரியும், அவரது நெருங்கிய நண்பருமான அசோகன் மூலம் அடியேனை கேள்விப்பட்ட இரசூல், ஊர் விலக்கம் சம்பந்தமாக தமிழ்நாடு மனிதவுரிமை அமைப்பிற்கு இவ்விசயத்தைக் கொண்டுசெல்ல முடியுமா என்பது குறித்து விவாதிப்பதற்காகவே அடியேனை அழைத்திருந்தார். அவரை, அவர் பணி செய்யும் அரசு அலுவலகத்தில் வைத்து முதன்முதலில் சந்தித்தேன். குடி குறித்து அவர் எழுதிய கட்டுரையை எனக்கு வாசிக்கக் கொடுத்தார். அதனை உடனடியாக வாசித்து முடித்தேன். அவரைப் பார்த்து, நீங்கள் குடிப்பீர்களா? என்று கேட்டேன். ‘இதுவரையும் நான் குடித்தது இல்லை என்றார். ‘இக்கட்டுரையில் நான் குடியை ஆதரிக்கவும் இல்லை என்றார். அப்பொழுது அடியேன், தமிழ்நாடு தவ்கீத் சமாஅத் அமைப்பில் தீவிரமாக இயங்கிய காலமது.
திருக்குர்ஆனின் ஆன்மிகமோ, "அல்லா அல்லாத பிற கடவுள்களைத் திட்டாதீர்கள்" என்கிற சிந்தனையிலிருந்து கவிஞர் இரசூலின், "வகாபிசம் - எதிர் உரையாடல்" தொடங்குகிறது.
தமிழ்நாடு தவ்கீத் சமாத்தின் சிர்க் ஒழிப்பு மாநாட்டை மிகக் கடுமையாக விமர்சித்தவர் கவிஞர் இரசூல். தவ்கீத், சாக், ஐ.எச்., கிசுபுத் தக்ரீர் போன்ற அமைப்புகள் வகாபியிசத்தைப் பின்பற்றுகிறது. இவைகளில் இருந்து இசுலாம் வேறுபடுகிறது என்று சொல்லும் கவிஞர் இரசூல், இப்படிப்பட்ட வகாபிச அமைப்புகள்தான் இசுலாமில் நிலவும் சகிப்புத்தன்மையை சீரழிக்கின்றன என்கிறார். அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.
முகம்மது நபி, பிறமதச் சிலைகளை உடைத்தார் என்பதற்கு திருக்குர்ஆனில் ஒரு வசனத்தைக்கூட காட்ட முடியாது என சவால் விடுகிறார் இரசூல். அல்லா ஆணாக இல்லாதபோது எப்படி அவரை மொழிரீதியாக ஒரு ஆணாக அடையாளப்படுத்துகிறீர்கள். இது சிர்க் இல்லையா என உரத்தக் கேள்வியினை முன்வைக்கிறார். மொழி ரீதியான சிர்க்கில் இருந்து வகாபியர்கள் தங்கள் மொழியை எப்படி மீட்டெடுப்பார்கள் என எதிர்வினை ஆற்றுகிறார்.
சூது செய்யும் பெண்ணின் சூனியத்தால் துன்பம் நிகழ்வதை தடுக்க அல்லாவிடம் பாதுகாவல் தேடச் சொல்கிறதே. சூனியம் உண்மை இல்லையா? காபாவை வலம் வருதல், கல்லை முத்தமிடுதல், மினாவில் சைத்தானின் மீது கல்லெறிதல் என்பது அரபு நாட்டுப் பண்பாட்டு வேர்கள். அதுபோல்தான் இந்திய முசுலிம்கள், இந்தியாவின் பண்பாட்டைப் பேண வேண்டும் என்கிறார்.
திருக்குர்ஆனில் முதன்முதலில் அருளப்பட்ட, "ஓதுவீராக" வசனம் தற்பொழுது திருக்குர்ஆனில் முதல் வசனமாக இல்லை. கடைசியில் அருளப்பட்ட, "சூரத்துகவ்பா" கடைசி வசனமாக இல்லை. இந்த தொகுப்புகள் வகாபிகள் மொழியில் பித் அத் தா... இல்லை என்றால் எப்படி பித்அத் இல்லை என கேள்வி எழுப்புகிறார். கதீசுகளை தொகுத்து அதனைப் பின்பற்ற அல்லா திருமுறையில் எங்கும் சொல்லவில்லையே என்கிறார். அதன்மூலம் ஐவேளை தொழுகை கேள்விக்குறி ஆகிறது. தொழுகையின் அமைப்பு முறைப் பற்றியும், எப்படி தொழுவது பற்றியும் திருக்குர் ஆனில் தகவல்கள் இல்லை. இசுலாமிய தொழிலாளி பள்ளிவாசலை தேடிச்சென்று ஐந்து வேளைத் தொழுகையை நிறைவேற்றி கொண்டிருந்தால் அது அவரின் குடும்பத்தின் உற்பத்திக்கு இழப்பை ஏற்படுத்தும் என்பதனை தெளிவாக முன்வைக்கிறார்.
இசுலாத்தை வகாபிகளின் வழியில் பின்பற்றாத முசுலிம்களுக்கும், முசுலிம் அல்லாதவர்களுக்கும் நரகம் கிடைக்கும் என்கிற விவாதம் பிறரை அவமதிக்கிறது என்கிறார். இப்படிப்பட்ட வகாபிகள் பல வேளைகளில் சலபிசம், தலிபானியம், சூதுபிசம், இக்வானிசம் என பல பெயர்களில் எழுவதை சுட்டிக் காட்டுகிறார். இவர்கள் சமூகத்திற்கு என்றும் கேடானவர்கள் என உரக்கப் பேசுகிறார்.
சொத்துரிமையில் பெண்களின்மீது மறைமுகத் தாக்குதலை இசுலாம் நிகழ்த்தியிருக்கிறது. திருமணத்தின்போது தந்தைவழி குடும்பத்தின் எந்தவித சொத்துக்கும் உரிமையற்றவளாக, ஒன்றுமற்ற ஒரு வேற்று நுகர்வுப் பண்டம்போல் பெண் மாற்றப்படுகிறாள். இது ஆண் வாரிசுகளின் நலன்களையே பேணுகிறது என்பதனை கோடிட்டுக் காட்டுகிறார்.
இசுலாம் தோன்றுவதற்கு முன்பாகவே, ‘அல்லா என்ற சொல் நடைமுறையில் இருந்தது. முகம்மது நபியின் பெயர் அப்துல்லா என்பதிலிருந்து இதனை அறியலாம் என்கிறார். அல்லா என்கிற சந்திரக் கடவுள் ஏற்கனவே இருந்தது என்பதனையும் சுட்டிக் காட்டுகிறார்.
"உங்கள் மார்க்கம் உங்களுக்கு; எங்கள் மார்க்கம் எங்களுக்கு" என்று திருக்குர்ஆன் சொல்வதனை இசுலாமியர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் இயேசு இறைமகனா? இதுதான் விவிலியம்!, விவிலியம் இறைவேதமா? போன்ற நூல்கள் இசுலாமிற்கு எதிராகவே வெளிவருகின்றன என்கின்றார். ‘தன்னுடைய மதம்தான் உயர்ந்த மதம் எனச் சொல்வதற்கு சாகிர் நாயக், சைனுல் ஆப்தின் போன்றோர்கள் முயல்வது தவறென கோட்டிட்டுக் காட்டுகிறார்.
உமறு புலவரின் இலக்கியத்தை குறை காண்பவர்கள், யூசுப்பை அடைய திட்டமிட்ட அசீசு மன்னரின் மனைவி வாசல் கதவுகளை அடைத்துவிட்டு புணர்ச்சிக்கு அழைப்பதனை எப்படி பார்ப்பீர்கள்? அதனைத் தவறு எனச் சொல்வீரா? என எதிர் கேள்வி தொடுக்கிறார்.
யூத சமயத்தில் காணக்கிடந்த களைகளை இயேசு நீக்க முற்பட்டதுபோல் இரசூலும் இசுலாமிய மார்க்கத்தில் நிலவுகிற களைகளை நீக்க முற்படுகிறார். இரசூலின் இந்நூலானது விவாதிக்கப்பட்டால் இசுலாமில் நிலவும் களைகள் நீங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகலாம். இந்நூல் இலக்கிய தளத்தில் விவாதிக்கப்பட வேண்டிய நூல்களில் ஒன்று. முசுலிம் அனைவரிடமும் சென்று சேர வேண்டிய புனித நூல்களில் ஒன்றாக இதனைக் காணலாம். இந்நூலானது இசுலாமிய இலக்கிய அரங்கில் தொடர்ந்து பேசப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.



No comments:

Post a Comment