Wednesday, August 22, 2018

எல். எப்ரேன்


எல். எப்ரேனின், “மாதுளை முத்துக்கள் அயலான் நேசிப்பை வேரறுக்குகிறது! 

காலங்காலமாக கதை சொல்வதும், கதை கேட்பதும் எல்லா மக்களிடமும் இருந்து வந்திருக்கிறது. கதை சொல்பவர் கற்பனை வளத்தாலும், அனுபவத் திறனாலும் கதை சொல்லும் பழக்கத்தை கொண்டிருப்பர். ‘ஒரு ஊரில ஒரு இராசா இருந்தார் என்கிற சுவையோடு கதை தொடங்கும் பாங்கு இருந்திருக்கிறது. பாட்டி, தாத்தா கதை சொல்லும் பாங்குகள் தமிழ் மரபோடு இருந்து வந்துள்ளது. அச்சு இயந்திரங்கள் வந்தபோது அவை நூல்களாக வெளிவந்திருக்கின்றன. அரிச்சந்திரன் கதைமீது ஈடுபாடு கொண்டதால் காந்தியடிகள் உண்மையைப் பேசுபவராக வாழ்நாள் முழுவதும் விளங்கினார் என்பதனை வரலாற்றில் படிக்கிறோம். 
சரித்திரக் கதைகள், குடும்பக் கதைகள், மர்மக் கதைகள், பேய்க் கதைகள், தெய்வீகக் கதைகள், சித்திரக் கதைகள், விஞ்ஞானக் கதைகள், புராணக் கதைகள் என அனைத்துக் கதைகளையும் மிஞ்சி வாழ்வியலில் பூத்து கிடப்பது நீதிக் கதைகள். ஈசாப்பின் நீதிக் கதைகள், விக்கிரமாதித்தனும் வேதாளமும், பஞ்சதந்திரக் கதைகள் ஆகியவை குழந்தைகளுக்கான அற்புதமான நீதிக் கதைகள். இவை பெரிய அளவிலான கற்பனைகளுக்கு இடம் கொடுப்பதில்லை. இதில் முக்கிய இடத்தைப் பெற்ற பஞ்சதந்திர கதைகள் மாணவர்களின் சிந்தனை ஆற்றலைச் சிறப்பாக்குகிறது. கற்பனை ஆற்றலை வளர்க்கிறது.  முல்லா நசுருதீன் கதைகளும், தெனாலி இராமன் கதைகளும், பீர்பால் கதைகளும் சாதுர்யமான நகைச்சுவையை தளமாகக் கொண்டுள்ளன. இதில் முல்லா கதைகள் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
குழந்தைகளுக்கான நீதிக்கதைகள், குழந்தைகளை மட்டுமின்றி பெரியோரையும் ஈர்த்து விடுகிறது. அது அவர்களின் பால்யகால நினைவுகளுக்கு அழைத்துச் செல்வது மட்டுமின்றி உள்ளார்ந்த வாழ்வியலுக்கும் அழைத்துச் செல்கிறது. அந்த வரிசையில், எல். எப்ரேன் எழுதியுள்ள 10  நீதிக் கதைகளும் வாசகரை வெகுவாக ஈர்க்கின்றன; ஆழமாக சிந்திக்க வைக்கின்றன. அதுதான் ஒரு எழுத்தாளருக்குரிய பெருமையாக இருக்க முடியும்.
பேயனூர் நாட்டில் மன்னராக இருப்பவரால் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. இதனால் அந்நாட்டில் புரட்சி வெடிக்கிறது. மன்னர், நாட்டை விட்டு விரட்டப்படுகிறார். அவர் புறக்கணிக்கப்பட்டவர் என்பதனை அறியாத இன்னொரு நாட்டினர் அவரின் உருவத்தைப் பார்த்து, அவரை கடவுள் அனுப்பியிருப்பார் என நம்பி திறமையில்லாத அவரை தங்களுக்கு தலைவராக்கிக் கொண்டனர்.
பேயனூரில் உள்ள மக்களின் சுயநலம், ஆசையின் விபரீதம் காரணமாக அவர்களுக்குள்ளும் ஒருவரை மன்னராக தேர்வு செய்ய இயலவில்லை. இருப்பினும், அதேவழியைப் பின்பற்றி பலர் மன்னராக வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அறிவுபூர்வமாக சிந்திக்காததால் மரணத்தைத் தழுவ நேரிடுகிறது. இப்படிப்பட்டவர்களால் நாட்டை பாதுகாக்கவும் முடியாது. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லவும் முடியாது என்பதனை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். இக்கதைக்கு காட்டில் வாழும் விலங்குகளை வைத்து அவர் கதை சொல்லியிருக்கும் விதம் கச்சிதமாக அமைந்திருக்கிறது.
மலையும் மலை சார்ந்த பகுதியும் மலைவாழ் மக்களுக்குச் சொந்தமானது. மலைவாழ் மக்களின் வாழ்க்கையானது மலைகளையும் காடுகளையும் நம்பியே இருக்கின்றது. அதிலிருந்து கிடைக்கும் கிழங்கு, தேன் போன்ற இயற்கை உணவுகளை அவர்கள் உண்டு வாழ்ந்து வருகின்றனர். அவ்விடத்தில் கனிம வளங்கள் கொட்டிக் கிடப்பதனை அறிந்த அரசியல்வாதிகள் நிலங்களை வளைத்துப்போடத் துவங்குகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களும் காடுகளை வேட்டையாடத் துவங்கின. மலைவாழ் மக்களை அங்கிருந்து விரட்ட முயலுகின்றனர்.
இதுசம்பந்தமாக அரசுக்கு ஓர் புகார் மனுவை வில்சென்பாட் அனுப்புகிறார். அதனை அறிந்த அரசியல்வாதிகள் அவரையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொல்கின்றனர். பணம், பணக்காரர்களின் கண்களை மறைத்துவிடுவது மட்டுமின்றி ஏழைகளை வஞ்சித்தும் விடுகிறது என்பதனை ‘தங்க மீன் மூலம் எல். எப்ரேன் நேர்த்தியாக படம்பிடித்துக் காட்டுகிறார். மனிதனை மனிதன் வதைத்து வாழ்வதும், அழித்து வாழ்வதும் மிகவும் அருவருப்பானவை என்பதனை நீதியாக முன்வைக்கிறார்.
இந்த நாட்டில் நிலவும் பயங்கரவாதத்தை கடவுள் தடுக்கவில்லை. இந்த நாட்டில் நிலவும் சாதி, மதச் சிக்கல்களிலிருந்து மக்களை கடவுள் விடுவிக்கவில்லை. நாட்டில் வறுமை இன்னும் ஒழியவில்லை. ஏழைகளுக்கு நீதி கிடைக்கவில்லை. பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடவுள் ஏழைகளுக்கு உதவுவார். தீயவர்களை தண்டிப்பார் என்கிற சிந்தனைப் போக்கு இன்னும் சமூகத்தில் நிலவி வருகிறது. அதற்குக் காரணம் ஒரு சக்தியுள்ள கடவுள் தேவை என்பதனை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவ்வகையில், “இறைவரம் பெற்ற முனிவர் என்கிற கதை மூலம் சோளிங்க முனிவரை கதாசிரியர் எல். எப்ரேன் அறிமுகப்படுத்துகிறார்.
இறைவரம் பெற்ற சோளிங்க முனிவர், ஏழைகளுக்கு பல அற்புதங்களைச் செய்கிறார்.  இறுதியாக நாகலிங்கம் என்கிற ரவுடியை அவர் திருத்த முயலுகிறார். அவன் திருந்துவதுபோல் இல்லை. இதனால் அவனை நாயாக மாற்றி, சங்கிலியால் கட்டிப் போடுகிறார். நல்ல குணம் இருப்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதும், தீய குணம் உள்ளவர்களை கடவுள் தண்டிப்பார் என்பதும் கதையின் மையக்கருவாக முன்வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட இறை நம்பிக்கை சார்ந்த கதைகள் மூலம்தான் நீதியை நிலைநாட்ட முடியும் என்பதனை கதாசிரியர் அறிந்திருக்கிறார்; உணர்ந்திருக்கிறார். அவ்வகையில் அவர் பாராட்டப்பட வேண்டியவரே.
எழுதுவதிலும், வாசிப்பதிலும் மிகவும் பின்தங்கிய ஒரு மாணவனின் கதையே, ‘புதிய சிந்தனை. பேசாமல் நீ வீட்டிலேயே இருந்து ஆடு மாடு மேய்க்கிற வழியைப் பாரு அல்லது உன் பெற்றோர்கூட வயலுக்குச் சென்று கூலிவேலை செய்து பிழைக்கிற வழியைப் பாரு. நீ பள்ளிக்கு வராதே எனச் சொல்லும் வகுப்பாசிரியர் சின்னத்தம்பியின் கோபமானது பலவேளைகளில் பள்ளிக்கூடங்களில் எதிரொலிப்பதுதான். இவ்வளவு கீழ்த்தரமான விமர்சனங்களை எல்லாம் தாண்டிய மாணவன் ஒருவன், தன் செயல்களால் உயர்நிலைப் பள்ளிக்கூடமாக இருந்த அப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்றுகிறான். இப்படிப்பட்ட ஒரு கதைப் போக்கு, புதிய சிந்தனை எத்தனை ஆசிரியர்களுக்கு வரும் என்பது ஆச்சரியத்திற்கு உரிய விசயமே.  எல். எப்ரேன் முன்வைக்கும் புதிய சிந்தனை பாராட்டுதலுக்கு உரியதே. இக்கதையை வாசிக்கும் பலருக்கு அது ஒரு பாடமாக அமையலாம்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு சதவீதம் வெற்றியை காண்பிப்பதற்காக படிக்காத மாணவர்களை தேர்வு எழுத விடாமல் வெளியே அனுப்பி பள்ளியின் கெளரவத்தை காப்பாற்றத் துடிக்கும் சுயநல விரும்பிகள் மத்தியில் கார்மல் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராகப் பணியாற்றும் எல். எப்ரேன், மாறுபட்ட விதத்தில் கதை சொல்வது மட்டுமின்றி, “திறமையற்றவர்கள் இவ்வுலகில் எவருமில்லை எனச் சொல்வது வாழ்வின் எதார்த்தத்தை புரிந்துகொள்ள வைக்கிறது. அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகளாகத்தான் இருப்பார்கள்.
எப்பொழுதும் நல்லதைப் நினையுங்கள். நல்லதை பேசுங்கள். நல்லதைச் செய்யுங்கள். எதையும் நல்ல சிந்தனையோடு எதிர் கொள்ளுங்கள். நல்லதை நினைத்தால் நீடித்த வாழ்வு கிடைக்கும் என்று சொல்லாத அறிஞர்களும், ஞானிகளும் இல்லாமல் இருக்க முடியாது. ஆபாச படங்களையும், விபரீத புகைப்படங்களையும் முகநூல்களிலும், புலனங்களிலும் பகிர்வதனை விட்டுவிட்டு நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்கிறபோது நல்லவை பிறக்கும். நல்லவர்கள் சமூகத்தில் உருவாகுவார்கள். அவ்வகையில், ‘உங்களால் முடிந்தவரை நன்மையை மட்டுமே செய்து வாழுங்கள் என்பதனை ‘திருமகளின் செல்லக்கிளி என்கிற கதையின்மூலம் நூலாசிரியர் எல். எப்ரேன் முன்வைக்கிறார்.
கோபம் இருக்கும் இடத்தில் குணமும் இருக்கும் என்பது தவறானது. கோபம் இல்லாத நிலை உருவாக வேண்டுமென்றால் நல்லவைகளைப் பகிர்தல், பேசுதல், செய்தல் மூலம்தான் சாத்தியம் என்பது கதாசிரியரின் ஆழமான நம்பிக்கை. அதுதான் உண்மையாகவும் இருக்க முடியும். “அடிக்கிற கை தான் அணைக்கும் என்பது ஆணாதிக்க சிந்தனையின் உச்சகட்டம். அடிப்பது என்பது மனிதவுரிமை மீறல் என தெரிகிற போதுதான் அதன் வேதனையை அடித்தவர் உணர முடியும். மாணவர்களை அடிப்பது மனிதவுரிமை மீறல், அது மிருகத்தனமான செயல் என்பதனை இன்று உணர்ந்திருக்கிறோம். எல். எப்ரேனின் நேர்மறையான சிந்தனைப் போக்கு சமூகத்தை மாற்றும் அற்புதமான கருவி. இந்நூல் வாசிப்பவர்களின் மனங்களை அறுவடை செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  
ஒருவருக்கு செய்யும் சிறிய உதவிகள் பெரும் உதவிகளாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதனை உணர்த்தும் கதைதான், “சிறு உதவி – பெரும் பரிசு. பேருந்துகளில் பயணிக்கிறபோது கைக்குழந்தையோடு ஒரு பெண் பேருந்தில் ஏறினால் இருக்கையில் இருப்பவர்கள் தூங்குவதுபோல் நடிப்பார்கள் அல்லது அதனைக் கண்டும் காணாததுபோல் இருந்து விடுவார்கள். முதியோர்கள் வந்தாலும் எழுந்து இடம் கொடுக்க மாட்டார்கள்.  இக்கதையில் முன்பின் தெரியாத ஒரு நபருக்கு ராகுல் எழுந்து இடம் கொடுக்கிறார். அவ்வுதவி அவனுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. உடல் நலம் சரியில்லாத அவனுடைய தாய் மற்றும் அவனுடைய இரு தங்கைகளையும் தாங்குகிற பலத்தைக் கொடுக்கிறது.
“காலத்தினால் செய்த நன்றி சிறிதுஎனினும், ஞாலத்தின் மாணப் பெரிது (குறள் - 102). தக்க காலத்தில் செய்யப்பட்ட உதவி, அளவில் சிறிதெனினும் அது இவ்வுலகத்தை காட்டிலும் மிகப்பெரிது என்பது திருவள்ளுவரின் வாக்கு. மனிதர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும்போதுதான் வாழ்க்கை அர்த்தம் உடையதாக மாறுகிறது. செய்த உதவியை உயிருள்ளவரை மறக்கக்கூடாது என்பதனை அருணாச்சலம் தன் வாழ்வில் பிரதிபலிக்கிறார். அதனை நேர்த்தியாக கதை வாயிலாக தருகிறார் கதாசிரியர் எல். எப்ரேன்.
ஒரு கிராமத்தில் உள்ள நபரை இன்னொரு கிராமத்தைச் சார்ந்த நபர் ஒருவர் அடித்து விட்டதாகக்கூறி, இரு கிராமத்திலுள்ள தலைவர்கள் முன்னிலையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  தற்செயலாக அவ்விடத்திற்கு வந்த பூமிநாதன் என்பவர் அங்கு நடப்பதனை கவனிக்கத் துவங்குகிறார். அப்பொழுது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கலவரம் உருவாகும் சூழல் ஏற்படுகிறது. அதனைப்பார்த்த பூமிநாதன், ஒரு பைத்தியக்காரனை இன்னொரு பைத்தியக்காரன் அடித்துவிட்டான் என்பதற்காகவா இவ்வளவு பெரிய வாக்குவாதம். அந்த இரண்டு நபர்களுக்காக உங்களில் எத்தனைபேர் கொலைகாரர்கள் ஆகப் போகிறீர்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுகிறார். கொஞ்ச நேரத்தில் அங்கிருந்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவரவர் வீடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். இது உண்மையாகவே குமரி மாவட்ட கடலோரத்தில் இரண்டு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை கல்லெறிந்து கொல்ல வேண்டுமென மறைநூலில் மோசே சொல்லியிருக்கிறார். இவளை கையும் களவுமாகப் பிடித்திருக்கிறோம். இதனைக் குறித்து நீர் என்ன சொல்கிறீர் என இயேசுவிடம் கேட்டதையே,  ‘காவியத் தலைவன் கதையானது ஞாபகப்படுத்துகிறது. அதற்கு இயேசு, ‘உங்களில் பாவம் செய்யாதவன் இவள்மீது முதல் கல்லை எறியட்டும் என்றார். கொஞ்ச நேரத்தில் அங்கிருந்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவ்விடத்திலிருந்து நகர்ந்து விடுகின்றனர். தக்க சமயத்தில் உண்மையை உணர்த்தி கலவரத்தை தடுப்பவர்களே காவியத் தலைவர்கள் என்பதனை மேற்படி காவியத் தலைவன் கதை வாயிலாக அறியத் தருகிறார். இப்படிப்பட்ட காவியத் தலைவர்கள் மறைந்தாலும் வாழும் மக்களின் மனங்களில் வாழ்வார்கள் என்பதனை உணரவைக்கிறார். நூலாசிரியர் எல். எப்ரேனை எவ்வளவு முறை பாராட்டினாலும் அது தகும்.
குதிரை கனவில் வந்தால், வழக்கில் வெற்றி கிடைக்கும். குதிரை மீது சவாரி செய்வதுபோல் கனவு வந்தால், வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். புலி, சிங்கம் ஆகியவற்றை வேட்டையாடி வெற்றி பெறுவதுபோல் கனவு வந்தால், எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். நரி கனவில் வந்தால், ஊரைவிட்டு சென்று வேறு ஊரில் பிழைப்பு தேட வேண்டியது வரும். முயல் கனவில் வந்தால், உறவினர்களை சந்திப்பீர்கள். பசுக்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வதுபோல் கனவு வந்தால், நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். காளை மாடு துரத்துவதுபோல் கனவு வந்தால், வீண் பிரச்சனைகள் வந்து சேரும். ஆடுகள் கனவில் வந்தால், புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பாம்பு கனவில் வந்தால், கடன் தொல்லைகள் ஏற்படும். நாய் கனவில் வந்தால், வீண் பழிகள் வந்து சேரும். குரங்கு கனவில் வந்தால், வீண் வாதங்கள் உருவாகும். யானை கனவில் வந்தால், செல்வம் பெருகும். மயில் கனவில் வந்தால், குடும்பத்தில் அன்பு மிகுதியாகும். சிறு குழுந்தை கனவில் வந்தால், நோய்கள் நீங்கும். நண்பன் இறந்ததாகக் கனவு வந்தால், ஆயுள் கூடும். மீன் கனவில் வந்தால், கவலைகள் இல்லாமல் போகும். பூனை கனவில் வந்தால், தொழிலில் இழப்பு ஏற்படும். காக்கை கத்துவதுபோல் கனவு வந்தால், திருட்டு நடக்கும். முத்தமிடுவதுபோல் கனவு வந்தால், செல்வாக்கு சரியும். தெய்வங்களை கனவில் கண்டால், புதையல் கிடைக்கும். ஆசிரியர் பாடம் நடத்துவதுபோல் கனவு வந்தால், நினைத்ததெல்லாம் நடக்கும். இவ்வாறு தூங்கும்போது வரும் கனவுகளால் என்னென்ன பலன் கிடைக்கிறது என்பதனை சோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள்.
‘கனவே கலையாதே கதையில்  பிச்சை எடுக்கும் இராமையா ஒரு கனவு காண்கிறார். அவருக்கு தனது மகள் ராணியை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதே ஆசை. இந்நிலையில் இராமையாவின் மகளை ஒருவர் திருமணம் செய்ய முன்வருகிறார். மருமகன் மூலம் அவருக்கு நல்ல பலன் கிடைக்கிறது. வசதி வாய்ப்புகள் கிடைக்கிறது. அதனால் அவர் பிச்சை எடுப்பதனை நிறுத்திவிடுகிறார். உழைக்காமல் பலனை அனுபவிக்கிறார். கனவு கலைந்து கண்விழித்தபோது அவையெல்லாம் உண்மையல்ல என்பதனை உணர்கிறார்.
இக்கதையில் சாத்தான், குட்டிச் சாத்தான் ஆகியோரைக் கொண்டு கதை நகர்த்திய விதம் அருமை. நூலின் உள்ளே சென்று வாசித்தால்தான் வாசகருக்கு அதன் கதைப் பாணியை சுவைக்க முடியும். ஒவ்வொரு நாளும் மனிதன் கனவுகளிலே வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்பவர்கள் உண்டு. கனவு மட்டும்தான் அவன் வாழ்வில் இருக்கிற ஒரேயொரு நிம்மதி. அதனால் அவனை கனவு காண விடுங்கள் எனச் சொல்பவர்களும் உண்டு. இருப்பினும் இந்த நீதிக் கதை மூலம் எல். எப்ரேன் வாழ்க்கை தத்துவத்தை புலப்படுத்துகிறார். “உழைப்பு ஒன்றுதான் மனிதரை உயர்த்தும். மனிதரின் உயர்வு அவர்களின் உழைப்பினால் மட்டுமே உறுதி செய்யப்பட வேண்டும். மாயத் தோற்றங்களை நம்பி மனிதன் ஏமாந்துவிடக் கூடாது என்கிற உயரிய சிந்தனையை மையக் கருத்தாக முன்வைக்கிறார். ஆம்! கனவுகள் மூலம் வாழ்க்கை வீணடிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது உண்மையே. அறிவுபூர்வமாக சிந்திப்பது ஒன்றே ஆறறிவு மனிதருக்கு அழகு சேர்ப்பதாக இருக்கும்.
குழந்தைகளுக்கு இடையே நடக்கும் சண்டைகளை மையக் கருத்தாகக் கொண்டு அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் கதைதான், “வாழ்க்கைக் கூடு. இப்படிப்பட்ட பாசமானது எல்லா குடும்பங்களிலும் குடியிருப்பதை காணலாம். அவர்கள் வளர்ந்த பிறகு அண்ணன் தம்பி, அக்கா தங்கை என்கிற பாசவுணர்வு இல்லாமல் போவது வேடிக்கை. அதைத்தான் பல குடும்பங்களில் இன்று பார்க்க முடிகிறது.
பெற்றோர்கள் மரித்த பிறகும், அரண்மனை வாழ்க்கை கிடைத்த பிறகும் அக்குழந்தைகளின் சிந்தனையெல்லாம் அப்பா அம்மா வாழ்ந்த முல்லையூரில் உள்ள  அவர்களது எளிய குடிசை வீடு மீதுதான் இருந்தது என்கிறபோது அவர்களின் மனம் முல்லைப்பூக்கள் பூத்துக் குலுங்கும் முல்லையூராகவே காட்சியளிக்கிறது. வாழ்க்கை வாழ்வதற்கு. வாழ்வில் வரும் துன்பங்கள் அனைத்தும் மனிதனை பக்குவப்படுத்துபவை என்பது இக்கதையில் நீதியாகவே அமைந்திருக்கிறது. 
நேர்மறையான கதைகளை முன்வைத்த கதாசிரியர் எல். எப்ரேன், பறக்கும் சவப்பெட்டிகள் என்கிற இந்நூலின் இறுதிக் கதையில் எதிர்மறையான கதையம்சத்தை காட்சிபடுத்துகிறார். தீவிரவாதிகள், உத்திரபிரதேச மாநிலம், கத்துவாலா பகுதியை கைப்பற்றுகிறார்கள். அவர்களை பறக்கும் சவப்பெட்டிகள் மூலம் கதாநாயகன் கொலை செய்கிறான் என்பதுதான் இக்கதையின் முக்கிய அம்சம்.
‘பறக்கும் சவப்பெட்டி என்கிற கதையில் மனிதனை மனிதன் அழித்து வாழ்வது எப்பண்பிலும் சேராது எனச் சொல்லும் எல். எப்ரேனின் கருத்துகள் பாராட்டுதலுக்கு உரியவை. அதேவேளையில், இக்கதையில் தீவிரவாதிகளை கொலை செய்வதனை ஊக்கப்படுத்துவதுபோல் கதையை முடித்திருப்பது நெருடலாகவே உள்ளது. ‘அயலானை நேசிக்கக் கற்றுக்கொள் என்கிற வாக்கானது சிதைந்து கிடக்கிறது. இன்னொரு மனிதரை முடிந்தவரை திருத்தி வாழவைக்க முயற்சி செய்ய வேண்டும் என்கிற எல். எப்ரேனின் சிந்தனை போக்கானது தீவிரவாதிகள் விசயத்தில் சிறப்பாக அமையவில்லை. ‘தூக்குத் தண்டனையை தூக்கில் ஏற்ற வேண்டும் என மனிதவுரிமைப் போராளிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இக்கதை  ஏற்புடையதாக அமையவில்லை.
மாணவர்களுக்கு பிடித்தமான விசயங்களில் ஒன்று கதை கேட்டல். சிறந்த கதைகள் மாணவர்களின் மூளையை சுறுசுறுப்பு ஆக்குகிறது. கற்பனைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. அந்த வகையில் எல். எப்ரேன் படைத்துள்ள கதைகள் அனைத்தும் மாணவர்களை உற்சாகமடையச் செய்யும். “மனம் கொத்திப் பறவை கவிதைநூல் மூலம் கவிஞராக வலம்வந்த எல். எப்ரேன், “மாதுளை முத்துக்கள் சிறுகதைத் தொகுப்பு மூலம் சிறுகதையாசிரியராகவும் வலம் வருகிறார். அவர் கதை சொல்லும் பாங்கு வாசகரை நிச்சயமாக ஈர்க்கும். கதை நகர்த்தல் அற்புதமாக அவருக்கு கைகூடி இருக்கிறது. அடியேன் பிறந்த புதூர்த்துறை ஊரிலே சிறுகதையாசிரியர் எல். எப்ரேனும் பிறந்தவர் என்பதால் அவரை நினைத்து மென்மேலும் பெருமைப்படுகிறேன். அவர் இன்னும் பல படைப்புகளை படைத்து, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க வாழ்த்துகிறேன்!

No comments:

Post a Comment