Wednesday, August 22, 2018

செந்தீ நடராசன்


செந்தீ நடராசனின், “சிற்பம் தொன்மம்

புராணக் கதைகளில் புரளுகிறது!


செந்தீ நடராசனின்,  “சிற்பம் தொன்மம் நூலை சிவ அடியார் திருத்தமிழ்த் தேவனாருக்கு கோவளம் கவிஞர் ததேயுசு அன்பளிப்பாக வங்கிக் கொடுத்தார். நூல் முழுவதையும் வாசித்து முடித்தேன். அந்நூலானது கற்பனைகளையும், புராணக் கதைகளையும் மையக் கருவாகக் கொண்டு வெளிவந்துள்ளது. சிவ அடியாருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த நூல்.
28 சிலைகளைப் பற்றி நன்கு கதை சொல்ல முயன்றிருக்கிறார் செந்தீ நடராசன். அவருடைய கதைப் போக்கை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பாராட்டலாம் ஏனெனில் அதில் அவர் ஓர் அங்கம். செயமோகனின் வலைத்தளத்தில் இந்நூலைப் பாராட்டி கடலூர் பாலு எழுதியிருக்கிறார்.
சிவன், விசுணு, பிரம்மா செயல்பாடுகளை புராணக் கதைகள் வழியாக நகர்த்தியிருக்கிறார். உலகைத் தோற்றுவித்த உண்மை முதல்வன் சிவனாக இருக்கையில், முனிவர்களிடம் உண்மை முதல்வன் நானே என்கிறான் பிரம்மா. இதனால் பிரம்மாவின் தலையை வெட்ட பைரவனுக்குச் சிவன் கட்டளையிடுகிறார். ரிசி பத்தினிகள் சிவனை மனத்தால் தழுவி பிள்ளைகளைப் பெற்று கற்பிழந்தனர். திருமால் பிரம்மனால் படைக்கப்பட்டவன் என்கிற வாதத்தை முன்வைத்தபோது திருமாலும் பிரம்மனும் மாறிமாறிக் கன்னத்தில் அறைந்து கொண்டனர். காளி கோபமுற்று சரசுவதி, இலக்குமி, இந்திராணி முதலோரின் உறுப்புகளை அறுத்து விடுகிறாள். சிவன் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருந்தபோது தாரக வனத்து முனிவர்களின் பத்தினிகள் அவர் அழகில் மனம் அழிந்தனர். சிவனின் மனைவியாகப் பல பெயர்களில் தேவியர் வழக்கில் உள்ளனர். தக்கன் மகளாகப் பிறந்ததால் சிவனுக்கு இழிவு ஏற்ப்பட்டதைத் துடைக்க நெருப்பில் வீழ்ந்து மாய்ந்தாள் தாட்சயானி. இவ்வாறாக புராணக் கதைகளைத் தொடர்ந்து அடுக்குகிறார். இந்துக் கோவில்களில் காணப்படும் சிலைகளை வர்ணிப்பதற்குப் பதிலாக, புராணக் கதைகளைக் கொண்டுவந்து முடிச்சுப் போடுகிறார்.
சிலைகளை விவரிப்பது என்பது வேறு. அதனோடு புராணக் கதைகளை இணைத்து விமர்சிப்பது என்பது வேறு. இதைத்தானே ஈ.வெ. ராமசாமி நாயக்கர் செய்து கொண்டிருந்தார். செந்தீ நடராசன், புராணக் கதைகளை வைத்து சிற்பங்களின் கதைகளை நகர்த்தியிருக்கிறார். தான் ஒரு கம்யூனிசுகாரர் என்பதனை மிகத் தெளிவாக நிருபித்து இருக்கிறார்.
மாக்சிய பார்வை கொண்ட செந்தீயின் அழகியல் உணர்வு கோவில்களையோ, சிற்பங்களையோ பார்க்க எப்போதும் தடையாக இருந்ததில்லைஎன ஆ.கா. பெருமாள் செந்தீ நடராசனுக்கு சான்றிதழ் வழங்குகிறார். இதில் உள்சுயம் இல்லாமல் இல்லை. இந்நூல் சிவ அடியார்களுக்கு வாசிக்கத் தகுந்த நூல் இல்லை. சிவத்தைப் பற்றி தெரியாதவர்கள்தான் இப்படிப்பட்ட நூல்களை படைக்க இயலும். புராணக் கதைகளை தத்ரூபமாக சேர்த்து அதனை நம்பவைக்க முயலும் செந்தீயின் கம்யூனிசப் பார்வையை இலகுவாக புரிந்துகொள்ள இயலுகிறது.
வசந்தகுமார் படத்தை இணையம் வழியாக அனுப்புவாராம். அதற்கு செந்தீ, 9 நாட்களுக்குள் ஆராய்ந்து கட்டுரை எழுதுவாராம். அப்படியென்றால் கட்டுரை எப்படி இருக்கும்? ஏற்கனவே கைவசம் இருக்கிற புராணக் கதைகளைச் சொருகினால் பக்கம் பக்கமாக எழுதிவிடலாம் அல்லவா? இந்நூலில் செந்தீ யாரையும் சந்தித்து கள ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை. 27 நூல்களைப் புரட்டி எழுதியிருக்கிறார். இருப்பினும், இந்நூலில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் மூலம் சிலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இக்கருவறை தொடக்கக் காலத்தில் அம்பிகா யட்சி வழிபடப்பட்ட கருவறையாக இருந்திருக்கலாம்என சந்தேகத்தின் அடிப்படையிலே கதைகள் நகருகிறது. நூல் முழுவதும் காய் நகர்த்தல் அவ்வாறே உள்ளது. ஒரு நம்பகத் தன்மையற்ற நூல்தான் செந்தீயின், “சிற்பம் தொன்மம்”.



No comments:

Post a Comment