Saturday, August 25, 2018

பாவ மன்னிப்பு

பாவ மன்னிப்பு கோரிய பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பாதிரியார்களைக் கண்டித்து, "தெற்கு எழுத்தாளர் இயக்கம்" சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 24.08.2018 காலை 11.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
திருத்தமிழ்த் தேவனார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைத் தாங்கினார். 
வழக்குரைஞர். முத்துக்குமார் - இந்திய சனநாயக மார்க்சிய கட்சி, வழக்குரைஞர். ஜெயின் - இந்திய புரட்சிகர மாக்சிய கட்சி, தியாகி. முத்துக்கருப்பன் - பன்னாட்டு தமிழுறவு மன்றம், திரு. மகிழ்ச்சி - உழைக்கும் மக்கள் போராட்டக் குழு, திரு. பிரான்சிஸ் - தமிழன் கட்டுமானத் தொழிலாளர் சங்கம், திரு. போஸ் - குமரி மாவட்ட நிலவுரிமை கூட்டமைப்பு, திரு. நீதியரசர் - பெரியார் தொழிலாளர் கழகம், திரு. இனியன்தம்பி - தமிழ்நாடு தமிழ்ச் சங்கம், திரு. ரெத்தினசாமி - மாக்சிய சிந்தனை மையம், திரு. பால்ராஜ் - கிள்ளியூர் பொறுப்பாளர், ஆம் ஆத்மி, திரு. சங்கரபாண்டியன் - பச்சைத் தமிழ் தேசியம், திரு. செராபி - சமூகப் போராளி, திரு. மரிய செல்வன் - சமூக ஆர்வலர் மற்றும் திரு. பகவதிச் செல்வம் - ஆவணப்பட இயக்குநர், ஆகியோர் கண்டனவுரை ஆற்றினர்.
மலங்கரை ஆர்த்தடாக்சு தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் சோனி வர்க்கீசு என்பவர் திருவல்லாவைச் சேர்ந்த 16 வயது பெண்ணை 1999-இல் இருந்து திருமணம் செய்வதாகக் கூறி, ஏமாற்றி அவளோடு உறவு வைத்துள்ளார். அவளுடைய திருமணத்திற்குப் பின்பாகவும் அவளை பாலியல் வன்முறை செய்துள்ளார். இந்நிலையில், அவள் தனது இரண்டாம் மகளின் திருமுழுக்கு சமயத்தில் அதனை எண்ணி மன வேதனையில் இருந்துள்ளார். அதனால் அங்கிருந்த ஜாப் மேத்யு என்கிற பாதிரியார் ஒருவரிடம் இது சம்பந்தமாக 2009-இல் பாவமன்னிப்பு கோரியுள்ளார்.
அந்தப் பெண் கூறியதை அவளுக்குத் தெரியாமலே பதிவு செய்த பாதிரியார் அதை அவளுடைய கணவருக்கு அனுப்பி விடுவதாகக்கூறி, அவளை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அந்த நிகழ்வை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் காணொலி எடுத்த அவளுடைய நிர்வாணப் படங்களை அதே தேவாலயத்தைச் சேர்ந்த மற்ற பாதிரியார்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர்களும் அந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் அந்த காணொலி டெல்லியைச் சேர்ந்த ஒரு பாதிரியாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
டில்லி பாதிரியார் கொச்சியிலுள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து அந்தப் பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். அறையைக் காலி செய்யும்போது பாதிரியார் பணம் கொடுக்காமல் அந்தப் பெண்ணை பணம் கட்ட சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் தனது பற்று அட்டை மூலம் பணத்தைக் கட்டியுள்ளார். பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி அவளுடைய கணவனின் அலைபேசி எண்ணிற்கு சென்றுள்ளது. அது சம்பந்தமாக விசாரித்தபோது உண்மையைச் சொல்லி அவள் அவளுடைய கணவரிடம் கதறி அழுதுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவளுடைய கணவர், ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம், பாதிரியார்களில் ஐந்து நபர்களை ஆறு மாத காலம் இடைநீக்கம் செய்துள்ளது. தற்பொழுது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் புகார் அளித்த அவளுடைய கணவர் குற்றவாளிகளால் மிரட்டப்பட்டுள்ளார். இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு முடித்த இளவல்களை (MINOR CHILDREN) துறவறத்திற்கு அழைத்துச் செல்வது தடை செய்யப்பட வேண்டும். 21 வயதுக்கு மேற்பட்ட நபர்களை மட்டுமே கிறித்தவ இறையியல் கல்லூரியில் சேர அனுமதிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு இல்லற வாழ்க்கையை தேர்வு செய்வதா அல்லது துறவற வாழ்க்கையை தேர்வு செய்வதா என்பதனை அறியும் பக்குவம் இருக்கும்.
“நம் பாவங்களை நாம் ஒப்புக் கொள்வோம் என்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் தூய்மைபடுத்துவார்” என 1 யோவான் 1:9 வசனம் குறிப்பிடுகிறது. பாவத்தை கடவுளிடம்தான் ஒப்புக் கொடுக்க வேண்டுமே தவிர, அதற்கு புரோக்கர்கள் தேவையில்லை. பெண்களின் பாதுகாப்பைக் கருதி, இப்படிப்பட்ட புரோக்கர் முறையை தடை செய்ய வேண்டும்.
இந்திய அரசியல் சட்ட சாசனம் வழங்கியிருக்கிற ஆண் பெண் சமத்துவ உரிமையை நிலைநாட்டும் வகையில், ஆலயத்தில் பெண்களை போதிக்கும் பணிக்கு நியமிக்க வேண்டும்.



No comments:

Post a Comment