Wednesday, August 22, 2018

வே. இராமசாமி


த. ஆதித்தனின், “பெரும்புலவர் வே. இராமசாமி -  வாழ்வும் தொண்டும்” பொய் வரலாறை ஆவணப்படுத்துகிறது!

புலவர் வே. இராமசுவாமியின் கவிதை நூல்களை வாசித்தும், அவரிடம் பேட்டி எடுத்தும், “பெரும்புலவர் வே. இராமசாமி வாழ்வும் தொண்டும்என்கிற நூலை முனைவர் த. ஆதித்தன் எழுதியுள்ளார். அதனை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையும், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து கலைஞன் பதிப்பகம் வழியாக வெளியிட்டுள்ளது. இந்நூலை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை புலவர் வே. இராமசுவாமி அடியேனுக்கு நல்கியிருந்தார். அவரை உளமார வாழ்த்துகிறேன்.
ஒரு பொய் சொல்லியாவது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பார்கள். அவ்வகையில் இந்நூலில் ஆன்மீக மணமும், இலக்கிய மணமும் நூல் முழுவதும் வீசினாலும் ஒரு பொய்யை புலவர் வே. இராமசுவாமி இறக்கி வைத்திருப்பதைக் கண்டபோது அடியேனுக்கு வருத்தம் எதுவும் எழவில்லை. இருப்பினும், திருவள்ளுவர் நெய்தல் நிலத்தவரே! என்ற நூலைப் படைத்த பள்ளம்துறை தொ. சூசைமிக்கேலும், திருவள்ளுவர் குறத்தியறையில் பிறந்தார் என்பதனை முன்வைத்த புலவர் கேசவ சுப்பையாவும் என்ன நினைப்பார்களோ என்கிற எண்ணம்தான் ஓடியது.
இருபதாம் நூற்றாண்டு தொல்லியல் அறிஞர்களின் ஆராய்ச்சியின் பயனாக அதங்கோட்டில் அதங்கோட்டாசானும், காப்பிக்காட்டில் தொல்காப்பியனும், திருநயினார் குறிச்சியில் திருவள்ளுவரும், தோவாளை வட்டத்தில் ஒளவையாரும் பிறந்த வளர்ந்த செய்திகளை அறிய முடிகிறதுஎன்று புலவர் வே. இராமசாமி இந்நூல் வழியாக கூறும் கூற்று நையப்புடைக்கிறது. தொல்லியல் ஆராய்சியாளர்கள் என்றைக்கு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டார்கள்? அதனை பெரும்புலவர் வே. இராமசுவாமி எப்பொழுது வாசித்தார்? மிகக் கச்சிதமாக ஒரு வரலாற்றுப் பொய்யை புலவர் ஒருவர் இறக்கி வைப்பது தமிழுக்கு அழகல்ல.
புலவர் வே. இராமசுவாமியின் வாழ்க்கை வரலாறை அலசும் இந்நூல் அவரது படைப்புகளை வாசிக்கத் தூண்டுகிறது. புலவர் வே. இராமசுவாமி இதுவரை பத்து நூல்களை படைத்துள்ளார். அவை: (1) முன்னுதித்த நங்கை அம்மன் அருட்சிறப்பும் வரலாறும், (2) சுசீந்திரம் அருள்மிகு முன்னுதித்த நங்கை, ‘அம்மன் அருள் அந்தாதி’. (3) வடிவீசுவரம் அருள்மிகு இடர்தீர்த்த பெருமாள் திருவிரட்டை மணிமாலை அருட்பாவும், (4) சுசீந்திரம் அருள்மிகு சிறி துவாரகைக் கிருசுணன் மும்ணிக்கோவை அருள்மாலை கோயில் தல வரலாறு, (5) திருப்பதிச்சாரம் அருள்மிகு திருமுருகன் நான்மணி மாலை, திருவாழ்மார்பன் திருப்பதிகமும் தலபுராணமும், (6)  நாஞ்சில் நாட்டு திருமுருகன் நன்மணி மாலை, (7) சுசீந்திரம் அருள்மிகு சிறி ஆஞ்சநேயர் அருள்பதிகம், (8) சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய மும்மூர்த்தி அந்தாதி, (9) சுசிந்திரம் அருள்மிகு தாணுமாலய மும்மூர்த்தி அந்தாதி மற்றும் (10) பொலிவுறும் புதுமைகள். இவை அனைத்தும் மரபுக் கவிதைகளால் ஆனவை. அனைத்தும் ஆன்மீக நூல்களாகும். ஆன்மீக மணம் கமழும் சுவைமிக்க நூல்கள்.
தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்றவர் நபி முகம்மது. மாதா, பிதா, குரு, தெய்வம் என மாதாவுக்கு முன்னுரிமை கொடுத்தது நம் பாரதப் பண்பாடு. தாயின் காலடிக்குப் பிறகு வரலாற்றில் இராமன் என்கிற ஒரு ஆணின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது என்பதனை உலகிற்குச் சொன்னவர் அனுமார். சொர்க்கமே இராமனின் திருவடி என்றவன் தாளினை வாழ்த்துவோமே!என்று சொல்லி அனுமாரை வாழ்த்த வேண்டும் என்கிற ஆவலை புலவர் வே. இராமசுவாமி இந்நூல் வாயிலாக வெளிப்படுத்துகிறார். இவ்வாறாக அவருடைய ஒவ்வொரு கவிதை அடிகளும் அர்த்தம் மிகுந்ததாகத் தொனிக்கிறது.
யதார்த்த வாழ்க்கையில் பட்டுழலும் நாம், மயக்கம் நீக்கி மாமலக் கட்டவிழ்ந்து உய்வித்திட வேண்டும் என்கிறார் புலவர் வே. இராமசுவாமி. மயக்கம் அறுத்து மாமலம் நீக்கி உய்ந்திடச் செய்யும் உயர்நலத் தவளே”. சுசிந்திரம் கோவிலைப் பற்றி பாடுகிறபோது, “கொண்டல் கருக்கல் மழை பொழிந்து கழனி சிறக்கப் பாய்ந்திடுமே! வண்டு பாடும் மகரயாழின் வானோர் போற்றும் சுசீந்திரமே!என்கிறார்.
ஆசிரியராக வேலை பார்த்து பணி நிறைவு பெற்ற புலவர் வே. இராமசுவாமி, கோட்டாறு ஊரைச் சார்ந்தவர்.செந்தமிழ் அருள்நெறிப் பேரவைமூலம் ஆன்மீகத் தொண்டும், இலக்கியத் தொண்டும் ஆற்றி வருகிறார். அவரால் குமரி மண் பெருமை பெறுகிறது. அவருடைய நூலை முழுமையாக வாசித்தபோது அடியேனின் உள்ளம் மகிழ்வு கொண்டது. அவருடைய அமைப்பால் பலர் பயன் பெறுகிறார்கள் என்பது பெருமைக்குரிய விசயமாகும். அவருடைய இலக்கியப் பணியும், ஆன்மீகப் பணியும் சிறந்தோங்க வாழ்த்துகிறேன்.


No comments:

Post a Comment