Tuesday, August 28, 2018

பொன்னீலன்


பொன்னீலன் கண்டுபிடிப்பு - நாத்திகம் என்பது மாக்சியத்தின் ஓர் கிளை!   


"
மாக்சியம் நாத்திகமா?" என்கிற தலைப்பில் 16வது, "திணை" (சூன் 2017 – ஆகத்து 2017) இதழில் பொன்னீலன் ஒரு கட்டுரை வடித்திருந்தார். "மாக்சியம் நாத்திகமா?" என்ற தலைப்பை வாசிக்கும்போது, அவர்களுக்கு அவர்களைப்பற்றி சந்தேகம் வந்துவிட்டதோ என்கிற எண்ணம்தான் தோன்றியது. ஏனெனில் அவர் சார்ந்திருக்கும் அமைப்பில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கையாளர்கள். கோவிலுக்கு போகாமல் இருந்தாலும் கருணாநிதிபோல் மனைவிகளைக் கோவிலுக்கு அனுப்பி வைப்பவர்கள். அதனால்தான் பொன்னீலன் சொல்கிறார்: "மாக்சியர்கள் தங்களை நாத்திகர்கள் என்றே சொல்லிக் கொள்கிறார்கள். பலர் கருதிக் கொள்ளவும் செய்கிறார்கள். கருதுவது மட்டுமல்ல, நடைமுறை வாழ்வில் மதக் காரியங்களிலிருந்து விலகியும் நிற்க முயற்சிக்கிறார்கள்". தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சார்ந்தவர்கள் இப்படி கருதிக் கொள்கிறார்களா? கவிஞர். இரசூலை, சமாத்தைவிட்டு நீக்கியபோது கிளர்ந்து எழுந்த கூட்டம் நாத்திகக் கூட்டமா?
"மதம், இதயமற்ற உலகின் இதயம். ஆன்மா, இல்லாத உலகின் ஆன்மா. மக்களின் அபின் அது" என்றவர் காரல் மாக்சு. இதன்மூலம் மாக்சியமும் மதமும் ஒன்றல்ல எனத் தெரிகிறது. இதற்கு நேர் எதிர்மாறாக பொன்னீலன் என்ன சொல்ல வருகிறார், மதங்களை மக்கள் மூன்று நிலைகளில் அணுகுகிறார்கள். அவை: ஆத்திகப் பார்வை, நாத்திகப் பார்வை மற்றும் மாக்சியப் பார்வை. நாத்திகமும், மாக்கியமும் எப்பொழுது மதம் ஆனது? அதனை மக்கள் மூன்று நிலைகளில் அணுகுகிறார்கள் என்பது மாக்சியவாதிகளை திருப்திபடுத்த பொன்னீலன் எடுத்துக்கொண்ட ஒரு புதிய முயற்சி.
கம்யூனிசுகாரர்களுக்கு, கட்சிக்கு ஆள் சேர்க்க வேண்டும். திராவிட கழகங்களில் இருக்கிற கடவுள் மறுப்பாளர்கள் கம்யூனிசக் கட்சியில் சேர மாட்டார்கள். அப்படியென்றால் கடவுள் நம்பிக்கையாளர்களைத்தான் சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தாலும் அவர்கள் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு வரமாட்டார்கள். ஏ.வி. பெலார்மின் போன்று கத்தோலிக்கக் கிறித்தவராக இருந்து கம்யூனிச வேட்பாளராக தேர்தலில் போட்டியிடலாம்.
கம்யூனிசக் கட்சியை வளர்க்க பொன்னீலன் ஒரு வழியைச் சொல்கிறார். அது சீவாவும், சீனிவாசராவும் பின்பற்றிய வழியாம். அதனை பெலார்மின் வழி என்றுகூட வைத்துக் கொள்ளலாம். "வைகுண்டரையும், வள்ளலாரையும், விவேகானந்தரையும், நாராயண குருவையும், குன்றக்குடி அடிகளாரையும், சீவாவையும் மக்களின் பண்பாட்டு மொழி வழியே கொண்டுசென்று, மக்களின் பெரும்பான்மையான சனநாயக சக்தியை அணி திரட்டுவதும், அந்த அணி எதிரிகள் வெறி ஏற்றவிடாமல் பாதுகாப்பதுவே இன்றைய நம் தலையாயக் கடமை" என்கிறார். அதாவது இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக காய் நகர்த்தும் வேலையைச் செய்யச் சொல்கிறார். அதனால்தான் இப்பட்டியல் வாகனத்திலிருந்து இயேசுவையும், முகம்மதையும் இறக்கிவிட்டார்கள். அவர்களைச் சேர்த்தால் பிரச்சாரம் தவறாகப் போய்விடும் அல்லவா? புதிதாக வைகுண்டரையும், வள்ளலாரையும், விவேகானந்தரையும், நாராயண குருவையும், குன்றக்குடி அடிகளாரையும் மார்க்சியத்தில் உறுப்பினராக சேர்த்திருக்கிறார்கள்.
மாக்சியம் நாத்திகமா? என்கிற கேள்விக்கு பொன்னீலன் இரண்டு பொன்னான கருத்துக்களை முன்வைக்கிறார். அவருடைய கருத்துக்கள், கம்யூனிசக் கட்சியை வளர்க்க உதவுமென அவர் கருதுகிறார்.

முதலாவதாக, பொன்னீலன் கூற்றுப்படி மாக்சியம் என்பது, "சமூக வாழ்வை விளக்கும் சமூக விஞ்ஞானம். அதன் ஒரு கிளையே நாத்திகம்". ஆம்! நாத்திகம் என்பது மாக்சியத்தின் ஒரு கிளை. நீங்கள் எந்த மதத்திலும் இருந்து கொள்ளலாம். இது பிடித்திருப்பவர்கள் எல்லோரும் பலமாக எழும்பி கை தட்டுங்கள். இப்பொழுது உட்காந்து கொள்ளுங்கள்.
இரண்டாவதாக, பொன்னீலன் கூற்றுப்படி, "மாக்சியர்கள், ஆத்திகர்களும் அல்ல; நாத்திகர்களும் அல்ல". ஆம்! அவர்களை அன்னகர்கள் எனவும் கணக்கிட்டுக் கொள்ளலாம். இது பிடித்திருப்பவர்கள் உட்கார்ந்தபடியே கைகளை தலைகளுக்கு மேல் எழுப்பி கைதட்டுங்கள். ஆம்! இதுதான் பொன்னீலன் கண்டுபிடித்த புதிய கம்யூனிசக் கொள்கை. ஏதாவது ஒரு வழியில் வளரட்டுமே கம்யூனிசம். இல்லை, கம்யூனிச கட்சி. 

No comments:

Post a Comment