Tuesday, August 28, 2018

குமாரசெல்வா


குமாரசெல்வாவின் ஆவேசப் பேட்டி
பீத்துப் பெருமையாய் வலம் வருகிறது!
“எழுத்துத்தான் எனக்கான அரசியல் என்ற தலைப்பில் வெளியான குமார செல்வாவின் பேட்டியை சூன் 2016, ‘மாதவம் இதழில் வாசித்தேன்.
“வாழ்க்கை என்மீது திணிக்கப்பட்டதாக இருக்கலாம். எழுத்து என்மீது திணிக்கப்பட்டதல்ல என்கிறார் குமாரசெல்வா. வாழ்க்கையை ஒருவர் தேர்வு செய்ய முடியும். அதேவேளையில் எழுத்தினை ஒருவர் சாதி, மதம், மொழி, இனம் அரசியல் சார்ந்துதான் படைக்க முடியும். அதற்குக் காரணம் குழந்தைகளாய் இருக்கும்போதே அவ்வாறுதான் ஒருவர் ஊட்டி வளர்க்கப்படுகிறார். “இங்கு மாணவர்களை சிந்தனை அடிப்படையில் ஆசிரியர்கள் சுரண்டுவது சிறார் பருவத்திலேயே தொடங்கிவிட்டது என குமார செல்வாவே அவரது பேட்டியில் ஒத்துக்கொள்கிறார்.
ஒருவர் நான் இந்துத்துவப் பின்னணியிலிருந்து வந்தவன், காக்கிக் குழாயும், வெள்ளைச் சட்டையும் அணிந்து பயிற்சிப் பெற்றிருக்கிறேன் என்று சொன்னால் அவரது எழுத்துக்கள் எப்படி இருக்கும்? “நான் மார்க்சிய பின்னணியிலிருந்து வந்தவன். கட்டிச் சிவப்பு, இளஞ் சிவப்பு இரண்டிலும் இருந்திருக்கிறேன் என்று சொல்லும் குமார செல்வாவின் எழுத்து எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு குறுகிய வட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற அவர், “எழுத்து என்மீது திணிக்கப்பட்டதல்ல. அது பரிபூரண சுதந்திரமிக்கது என்று சொல்வது வியப்பிற்கும், நகைப்பிற்கும் உரியதாகவே இருக்கிறது.
“குடும்பம் போன்ற அமைப்பில் ஒரு பெண்ணுக்குக் கிடைக்காத சுதந்திரம் கள்ளக் காதலில் கிட்டுகிறது. படைப்பும் அதுபோலத்தான் என்கிறார் குமாரசெல்வா. கள்ளக் காதலில் என்ன சுதந்திரம் இருக்கிறது? கட்டிப் பிடிப்பதற்கும், தழுவிக் கொள்வதற்குமா சுதந்திரம்? அந்த சுதந்திரம் மனைவியிடம் இல்லையா? எனக்குத் தெரிந்து, எந்தவொரு கணவரும் தனது மனைவியிடம் என்னைக் கட்டிப் பிடிக்காதே. தழுவிக் கொள்ளாதே. முத்தம் கொடுக்காதே என தடை போட்டிருப்பதாகக் கேள்விப்பட்டதில்லை. அப்படியொரு புகாரானது காவல் நிலையத்தில் பதிவானதாகவும் தெரியவில்லை. இயேசு ஒருவர்தான் மரணத்திற்குப் பின்பாக, தனது மனைவி மகதேலேனா மரியாவிடம், “என்னை இப்படி பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை (யோவான் 20:17) என்று சொன்னதாக விவிலியத்தில் ஒரு குறிப்பு உள்ளது.
கள்ளக் காதலியுடன் நீங்கள் பயணிக்கும்போது உங்களுக்குள் ஒரு பயவுணர்வு உருவாகும். யாரும் பார்த்து விடுவார்களோ என்கிற அச்ச உணர்வு தோற்றமாகும். மேலும், கள்ளக் காதலியிடம் நீங்கள் நினைத்த நேரத்தில் புகுந்து விளையாட முடியாது. அப்படி இருக்கையில் அது எப்படி சுதந்திரம் ஆகும்? மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு வாசனை அதிகம் இருப்பதாக நீங்கள் உணரலாம். அது சுதந்திரம் ஆகாது. சுதந்திரக் காற்றை மனைவியிடம் மட்டும்தான் அனுபவிக்க முடியும். அதனை அனுபவிக்கத் தெரியவில்லை என்றால் குறை உங்களிடம் இருப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
“ஒரு கொள்கைக்காகவோ, கோட்பாட்டுக்காகவோ படைக்கப்படும் இலக்கியம் தாலி கட்டி குடும்பம் நடத்துவது மாதிரி. அங்கு சுதந்திரமாகப் பேச முடியாது; வாழ முடியாது. நல்ல இலக்கியம் என்பது சுதந்திரமான கள்ளக் காதல் போன்றது என்பது குமார செல்வாவின் கண்டுபிடிப்பு. உண்மையிலேயே கள்ளக் காதலியிடம் நீங்கள் சுதந்திரமாக அனைத்தையும் பேசி விடுவீர்களா? அது ஒருவகை ஈர்ப்பின் காரணமாக காமத்தை அவசரமாக தணிக்கும் இடம். மனைவியிடத்தில் தோழமை உறவைப் பேணி வந்தால் அதில் கிடைக்கும் சுதந்திரமும் காதலும் எந்தவொரு கள்ளக் காதலியிடமும் கிடைத்துவிடாது. அந்த அற்புதமான உறவைப் பேணவும், வளர்க்கவும் தெரியாததால்தான் பலர் கள்ளக் காதலுக்கு அடிமையாகி வாழ்க்கையையும், பணத்தையும் தொலைத்து விடுகிறார்கள். அந்த கள்ளக் காதலி, எத்தனை கள்ளக் காதலனை வைத்திருப்பாள் என்று யாருக்கும் தெரியாது. தீராத நோய்களையும் வாங்கி வந்து விடுகிறார்கள்.
மனைவியிடம் நீங்கள் நினைத்த நேரத்தில் சுதந்திரமாக புகுந்து விளையாடலாம். உங்கள் மனைவி, உங்களுக்கு மட்டும் உரித்தான விளைநிலம். உங்கள் விளைநிலத்தில் நீங்கள் நினைத்தவாறு செல்லலாம்; சுவைக்கலாம். திருக்குர்ஆன் இவ்வாறாக சொல்கிறது, “உங்கள் மனைவியர், உங்கள் விளை நிலங்கள். விளை நிலங்களுக்குள் நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள் (அல் பகரா 2:223). உங்கள் விளை நிலங்களில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பயிரிடலாம். அடுத்தவர் நிலத்தில் நீங்கள் பயிரிட முடியாது. அப்படி பயிரிட்டால் அது அத்துமீறல்; குற்றம்.
கள்ளக் காதலில்தான் சுதந்திரத்தைப் பார்க்க முடியும் என ஆணித்தரமாக வாதத்தை முன்வைக்கும் குமார செல்வாவிடம் கள்ளக் காதலை ஆதரிக்கிறீர்களா என்று சிவ. அய்யப்பனும், கோதை சிவகண்ணனும் கேட்கிறபோது, “காதலில் ஏதப்பா நல்ல காதல்? கள்ளக் காதல்? அதுபோல கள்ளத் தொடர்பு, தகாத உறவு என்ற வார்த்தைகள் எல்லாம் பத்திரிகைக்காரங்க உருவாக்கும் பொதுப்புத்தி என முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். நல்ல காதலையும், கள்ளக் காதலையும் வித்தியாசப்படுத்திய அவர் இப்பொழுது எல்லாம் ஒரே காதல்தான் என்கிறார். ஆக, காதல் அனைவருக்கும் பொதுவானது. யாரும் யாருடனும் படுத்து எழும்பலாம். நேர்வழியில் மனைவியிடம் செல்வதும், திருட்டு வழியில் அடுத்தவர் மனைவியிடம் செல்வதும் ஒரே காதல்தான் என்கிறார். அவ்வாறு அவர் சமூகத்திற்கு முன்வைக்கும் செய்தியானது ஒழுக்க நிலையை தடம் புரளச் செய்கிறது. அவர் கல்லூரியில் பேராசிரியராக பணி செய்வதற்கு தகுதி உடையவரா என்கிற கேள்விக் கணையை எழுப்புகிறது. அந்தவகைப் பட்டியலில்தான் குமார செல்வாவின் குன்னிமுத்து நாவல் வெளிவருகிறது. ‘குன்னிமுத்து நாவலானது திரைப்படமாக வந்தால் ‘எ சான்றிதழ் கிடைக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே.
வட்டார மொழி குறித்துப் பேசும் குமாரசெல்வா, “சிலர் புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்ட மாதிரி வட்டார மொழியை கையாளுகிறார்கள். படைப்பின் மொழி நாவல் முழுக்க செத்தப் பிணமாய்க் கிடக்கிறது. அந்த சுமையை வாசிப்பில் தூக்கி சுமக்க வாசகர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள் என்கிறார். சாகித்ய அகாதமி விருதுபெற்ற இளம் எழுத்தாளர் மலர்வதியின், ‘காட்டுக்குட்டி நாவலை மையப்படுத்தி பேசியதுபோல் வாசகர்களுக்குத் தோன்றலாம். அப்படியென்றால் இடையிடையே வட்டார மொழியை எழுதினால் படைப்பானது இடையிடையே செத்துக் கிடக்குமா? செத்த பிணம் பாரமாக இருப்பதால், அதனை ஆங்காங்கே இறக்கிவைத்து எடுத்துச் செல்வதுதான் சரியாக இருக்குமோ?
“நீங்களும் பேச்சு வழக்கில் ஒரு வட்டார நாவல் எழுதியிருக்கிறீர்களே? என்ற ஒரு குற்றச்சாட்டை சிவ. அய்யப்பனும், கோதை சிவகண்ணனும் முன்வைத்தபோது, அதற்கு அவர், “கருத்தரங்கம் ஒன்றில் பேராசிரியர் ஒருவர் என்னை கேலி செய்த அதேகாரியத்தை நீங்களும் செய்யாதீர்கள். ஏனெனில், “குன்னிமுத்து வட்டார நாவல் கிடையாது என்கிறார். “குன்னிமுத்து நாவல் பெரும்பாலும் விளவங்கோடு வட்டார வழக்கில்தானே எழுதப்பட்டுள்ளது? எனக் கேட்கிறபோது, “வட்டார மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் இரண்டாயிரத்திற்கும் பிந்திய புது யதார்த்த வகைப்பட்ட நாவல் அது என்று அவருடைய நூலுக்கு அவரே சான்றிதழ் வழங்குகிறார். வட்டார மொழிதான் என்பதனை ஒத்துக்கொண்டு விட்டு அது புது யதார்த்த வகை என இன்னொரு அர்த்தம் கொடுக்க முனைகிறார். உங்களுடைய நாவலும் ஆங்காங்கே செத்துத்தானே கிடக்கிறது என்கிற குற்றச்சாட்டிற்கு அவர் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. 
பொன்னீலனின், ‘மறுபக்கம் நாவலைக் குறித்து குமாரசெல்வா, “அலெக்சு, சார்ச், கோமசு என மூன்று முக்கிய மீனவ கதாப்பாத்திரங்கள் வருகின்றன. உண்மையிலேயே இவர்கள் பார்வையில் நாவல் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நாவலாசிரியர் இவர்களுக்குள் புகுந்து விவேகானந்தர் எங்களுக்குச் சொந்தமில்லையா? என்று பேசுகிறார். இது நிச்சயமாக மீனவர்களின் பிரச்சனையாக இருக்க முடியாது என்கிறார்.  அது முற்றிலும் உண்மைதான். அவர் அந்நூலில் ஒரு கம்யூனிச பயங்கரவாதத்தைப் போர்த்திக்கொண்டு அவருக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாகவே எழுதியிருக்கிறார் என்பதனை ஏற்கனவே அந்நூலுக்கு மறுப்பாக அடியேன் எழுதிய, “மறுபக்கத்தின் மறுபக்கம் நூலில் விரிவாகப் பேசியுள்ளேன்.
பொன்னீலன் ஒரு கம்யூனிச பயங்கரவாதி என்பதற்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் இங்கு சுட்டிக்காட்ட விளைகிறேன். மண்டைக்காடு கலவரத்தின்போது இந்து சகோதரர் ஒருவர் கலவரம் குறித்த விவரம் தெரியாமல் புதூர்த்துறை மீனவர் கிராமத்திற்குள் சென்றுவிடுகிறார். அவரை அடித்துக் கொலை செய்வதற்கு மீனவர்கள் முற்படுகிறார்கள். அவரைக் காப்பாற்றும் பொருட்டு, அவ்வூரின் பங்குப் பாதிரியார் மற்றும் அவருக்குத் துணையாக பணி செய்யும் இன்னொரு பாதிரியார் முயற்சி செய்கின்றனர். அந்த இந்து சகோதரரைப் பாராட்டும் பொருட்டு, அவர்மேல் அடிவிழாமல் இருக்க கீழேவிழுந்த அவன்மேல் படுத்து அடியைத் தாங்குகிறார்கள்.
மேற்கண்ட நிகழ்வைக் குறித்துப் பொன்னீலன், ஏ, சாமிமாருவ பூள வச்சுதானுவ டேய்! என வர்ணனை செய்கிறார். கத்தோலிக்கப் பாதிரியார்களை பாவாடை சாமியார் என ‘மறுபக்கம் நூல் முழுவதும் மட்டம்தட்டும் பொன்னீலன், பாவாடை சாமியார்கள் சேர்ந்து இந்து சகோதரனை பூளை வைத்தார்கள் என்கிறார். பூளை வைத்தார்கள் என்பதற்கு முக்குவ மொழியில் அவர்கள் அவனை ஓத்தார்கள்  என்று பொருள். வன்புணர்ச்சி செய்தார்கள் என்று அர்த்தம். ஒரு இந்து சகோதரரை, கத்தோலிக்க பாதிரியார்கள் காப்பாற்றிய வரலாற்று நிகழ்வுதனை, எவ்வளவு மட்டமாக, கீழ்த்தரமாக சித்தரிக்க முடியுமோ அப்படி சித்தரித்ததால் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் சாகசம் செய்ய பொன்னீலன் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு இன்னும் அந்த போதைவெறி அடங்காததால் அந்நூலை அவரது சாகசக்காரர்களைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தும் வெளியிட்டுள்ளார்.
காமராசரை எனக்குப் பிடிக்காது என்கிற குமார செல்வாவின் கூற்று ஏற்கும்படி இல்லை. நேசமணி விசுவாசிகளுக்கு காமராசரைப் பிடிக்காது என்பது வாடிக்கையான விசயம்தான். குமாரசெல்வா ஒரு நேசமணி பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. மார்த்தாண்டம் முபாரக் ஓட்டலின் வெளியே, “தொற்று நோயாளிகளுக்கு உள்ளே அனுமதி இல்லை என்று ஒரு அறிவிப்புப் பலகை தொங்கி இருக்கிறது. அந்த ஓட்டலில் காமராசர் சாப்பிடச் சென்றிருக்கிறார். அதனால் அவர் பிடிக்காத நபராக குமார செல்வாவுக்கு மாறிவிட்டாராம்.
இராகுல்காந்தி, மு.க. சுடாலின் ஆகியோர் பெட்டிக் கடையில் தேநீர் அருந்தி, பத்திரிகைக்கு செய்தி கொடுப்பதுபோல் காமராசர் குடிக்கவில்லை என்கிற விசயம் வருத்தமாக இருக்கலாம். அப்படி விளம்பரம் செய்யும் மனிதரும் அல்ல காமராசர். அவர் ஓட்டலுக்கு செல்லும்போது அவரைச் சுற்றி பலர் இருந்திருப்பார்கள். அதனால் அப்பலகை அவர் கண்ணில் படாமல் போயிருக்கலாம். அதனை அவரிடம் யாராவது சொல்லி, அதுகுறித்து அவர் பேசாமல் போயிருந்தால் அக்குற்றச்சாட்டை முன்வைக்கலாம். அதுதான் முறையானதாக இருக்க முடியும். ஏன், குமார செல்வாவே காமராசரை சந்தித்து குற்றச்சாட்டை முன்வைத்திருக்கலாம். அவரை சந்திக்கும் முயற்சியை அப்பொழுது மாணவர் பருவத்தில் இருந்த குமார செல்வாவும் எடுக்கவில்லை. மேலும், குமார செல்வாவுடன் படித்த மாணவர்கள் பெரும்பாலானோர் சிரங்கு பிடித்தவர்கள் என்றும், அவர்கள் அந்த ஓட்டலுக்கு செல்லும்போது கைகளை நிக்கர் உறையில் மறைத்து வைத்துவிடுவார்கள் என்றும் கூறுகிறார். அப்பறம் எதனை நீட்டி அவர்கள் பொருட்களை வாங்கினார்கள் என்பது அப்பாவித்தனமாக உள்ளது.
குஞ்ஞன்நாடார் தலைமையில் குமரி மாவட்டத்தை சென்னையோடு இணைப்பதற்கு நடந்த போராட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் விளவங்கோடு தாலுகா மக்கள். அம்சியிலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தை கல்லெறிந்து தாக்கியிருக்கிறார்கள். சந்தை மைதானத்தில் இருந்த தபால் நிலையத்தை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். பேருந்துகளில் கல்வீசி தாக்கியிருக்கிறார்கள். அதன்பிறகுதான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம் அனைவரும் அறிந்ததே. இதில் காமராசர் கலவரக்காரர்களுக்கு உதவி செய்யவில்லை என்பது உண்மை.
குமார செல்வாவின் உறவினர் ஒருவர் இக்கலவரம் சம்பந்தமாக காமராசரை சந்தித்து உதவி கேட்டபோது, ஆடு, மாடு, கோழி திருடி அடி வாங்கியவனுக்கெல்லாம் உதவி கேட்குதா? என்று காமராசர் மீது குமாரசெல்வா ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அந்த உறவினர் யாரென்றும் அவர் குறிப்பிடவில்லை. உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை மந்திரியாக இருந்த லூர்தம்மாள் சைமன் என்பவர் குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தபோது, சில மீனவர்கள் காமராசரைச் சந்தித்து லூர்தம்மாளுக்கு ஏதாவது ஒரு பதவி கொடுக்க வேண்டுமென கேட்டனர். அதற்கு அவர், ‘கொஞ்சம் பொறுங்கள் என்றார். ஊருக்கு வந்தவர்கள், ‘காமராசர், உங்கள் ஓட்டுக்களை எல்லாம் கடலில் கொண்டு போடுங்கள் என்று சொன்னதாக செய்தி பரப்பினர். காமராசர் இப்படி பேசிவிட்டார். அப்படிப் பேசிவிட்டார் எனப் பொய் பிரச்சாரங்கள் இப்படித்தான் முன்வைக்கப்படுகிறது.
தேவிக்குளம், பீர்மேடு பிரச்சனையில் நேசமணியின் நிலைப்பாடுதான் சரியானது என்கிற குமார செல்வாவின் வாதம் ஏற்கத்தகுந்ததே. இருப்பினும் நேசமணியால்தான் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்தோம் என்கிற குற்றச்சாட்டும் தொடரத்தான் செய்கிறது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். பாசல் அலியின் அறிக்கையில் தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகியப் பகுதிகளை இணைப்பதற்கு சென்னையோடு இணைக்க பரிந்துரை செய்ததற்காக காங்கிரசு கட்சியைச் சார்ந்த கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதவியை விட்டு விலகினார்கள்.
29 அக்டோபர் 1955 இரணியல் கவ்வாய் திரையரங்கில் நேசமணி தலைமையில் கூட்டம் கூடியபோது பீர்மேடு, தேவிகுளம் பகுதிகளை சென்னையோடு இணைக்க வலியுறுத்தும் வகையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் பதவிகளைவிட்டு விலக வேண்டுமென கோரிக்கை வைத்தபோது அது நிராகரிக்கப்பட்டது. தோப்பூர் மு. சுப்ரமணியம், “தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களுக்கு அல்லவா நாம் போராடினோம். இனி அவற்றின் நிலை என்ன? என்றபோது, “இனி நாம் எதுவும் செய்வதில்லை. அத்தாலுகா மக்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என நேசமணி பதில் அளித்திருக்கிறார்.
இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கேரள மந்திரி சபையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசாரின் பிரதிநிதி இடம்பெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. (ஆதாரம்: தினமலர் 30.10.1955). இதனைக்குறித்து பி.எச். மணி எழுதுகிறார், “உரோம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது அதன் மன்னன் நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். அப்படியும் இருக்குமோ என சந்தேகம் கொள்பவர்களுக்கு நேசமணியின் செய்கை இருக்குமென தெரிவிக்கிறது. இங்கு நேசமணி அதே நீரோ வேலையைத்தான் செய்தார். தேசியம் பிளவுபட்டுக் கொண்டிருந்தபோது நேசமணி மந்திரி பதவிக்கு கோரிக்கை எழுப்பிக் கொண்டிருந்தார் என்கிறார். தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை சென்னையோடு சேர்ப்பதற்கு நேசமணி, பாராளுமன்றத்தில் நீண்ட விவாதம் நடத்தினாலும், அதனை மீட்டெடுக்கும் செயல் திட்டத்தில் அவர் இறங்கவில்லை என பி.எச். மணி, “இராச்சிய புனரமைப்பு கமிசன் செய்த அநீதியை நேசமணி எப்படி சமாளித்தார்? என்கிற பெயரில் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார்.
குமாரசெல்வா. “தலித்திய, பெண்ணிய எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெற்றால் வைரமுத்து, மேத்தா போன்ற ரீதியில் எழுதும் தங்கள் போலி எழுத்துக்கள் அடிபட்டுவிடும் என்ற பயம்தான் காரணம் என்று குறிப்பிடுகிறார். அடியேனுக்குத் தெரிந்தவரையில் வைரமுத்துவும், மேத்தாவும் அவர்களுடைய கவிதைகளை பாடப் புத்தகங்களில் வையுங்கள் எனக் கேட்டதில்லை. பாடப் புத்தகங்களில் தலித்தியம், பெண்ணியம் இருக்கத்தான் செய்கிறது. அதேவேளையில் அவர்களது கவிதைகள் அடிபட்டுப் போகவில்லை.
“தமிழனுக்கு கவிஞன் என்றால் தெரியாது. திரைப்பட பாடலாசிரியர்தான் இவனுக்குக் கவிஞன். இந்தப் பொதுப்புத்தியை பேராசிரியர்களும் ஆதரிப்பதுதான் எனது வருத்தம் என்கிற குமார செல்வாவின் ஆதங்கம் ஏற்கத்தகுந்தது அல்ல. தமிழனுக்கு கவிஞன் என்றால் தெரியாது என்றால் குமாரசெல்வா தமிழன் இல்லையா? யார் சிறந்த கவிஞன் என்பதனை தீர்மானிக்க வேண்டியது ஒவ்வொரு வாசகனின் இரசனையைப் பொறுத்தது. மரபுக் கவிதை, புதுக் கவிதை, கைக்கூ கவிதை, நவீனக் கவிதை என கவிதைகளின் வகைகள் நீண்டாலும் அதில் இரசிக்கவும், உள்வாங்கவும், ஈர்க்கவும் பெரும்பாலான வாசகர்களால் எது முடிகிறதோ அதுவே சிறந்த கவிதையாக மாறிவிடுகிறது.
மொழியை முன்னிறுத்தி வளம் சேர்த்தவர்கள் திராவிட இயக்கத்தினர் என்பதனை குமாரசெல்வா முற்றிலும் மறுக்கிறார். தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்கள் என்கிற வரிசையில் வை.மு. கோதை நாயகி அம்மாள், இராமாமிர்தம், பாரதிதாசன், ரா.பி. சேதுபிள்ளை, நெ.து. சுந்தர வடிவேலு, குழந்தை, மு. வரதராசன், ஈ.வெ. இராமசாமி நாயக்கர், சி.என். அண்ணாத்துரை, ஈ.வி.கி. சம்பத், மு. கருணாநிதி, செயப்பிரகாசம், டி.கே. சீனிவாசன், இராதாமணாளன், நெடுஞ்செழியன், செழியன், வாணன், மு. மேத்தா, சுரதா, தென்னரசு, நா. காமராசன், வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா என திராவிடப் பட்டியல் நீள்கிறது. பாரதிதாசன்தான் திராவிட இயக்கத்தின் முன்னோடி. திராவிட இலக்கியத்தின் பிற முன்னோடிகள் என அறியப்படுபவர்கள் பரிதிமாற் கலைஞர், ஞானியாரடிகள் மற்றும் திரு.வி.க. இலக்கியம் என்கிற பெரியதொரு வலையில் திராவிட இலக்கியம் சிறு கண்ணிகளாக இருந்தாலும், அந்தக் கண்ணிகளை நீக்கிவிட்டு, தமிழ் இலக்கிய வரலாற்றில் மீன் பிடிப்பது சாத்தியமில்லை.
போலி இலக்கியவாதிகளான தமிழ்ப் புலவர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், அரசியல் மேடைப் பேச்சாளர்கள் என உருவாகி தமிழை நாசப்படுத்தி விட்டார்கள் என குமாரசெல்வா சாடுகிறார். அப்படி என்றால் தமிழ் மொழியை இன்றைக்கும் வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் குமாரசெல்வா போன்றவர்களா என்கிற கேள்வி எழுகிறது. பாடப் புத்தகக் குழுவில் இருப்பவர்கள், மாணவர்களுக்கு சாக்கடைப் புத்தகங்களை படிக்க வைக்கிறார்கள் என்று சொல்லும் குமாரசெல்வா, அவருடைய குன்னிமுத்து நாவலும் அதேவகையைச் சார்ந்ததுதான் என்பதனை அறிவாரா?
பொன்னீலனின், ‘மறுபக்கம் நாவலானது காமக் கதையை முன்னெடுத்துச் செல்வதுபோல், குமார செல்வாவின் ‘குன்னிமுத்து நாவலும் காமக் கதையை முன்னெடுத்துச் செல்கிறது. இக்காமக் கதைகளை சமூகத்திற்கு கொண்டு சேர்ப்பதுதான் தமிழ் வளர்ச்சியாக இருக்குமா? நாவல் என்கிற பெயரில் இக்காமக் கதைகளை கல்லூரிப் பாடமாக வைத்தால் மாணவர்கள் உருப்படுவார்களா? நாகர்கோவில் இராசன் பிக்சர் பேலசு திரையரங்கில் நீலப்படம் பார்க்க மாணவர்களை அழைத்துச் செல்வதுபோல் இருக்கும். மாணவர்களுக்கு சாக்கடைப் புத்தகங்களை வாசிக்கக் கொடுக்கிறார்கள் என்றால், அதற்கு எதிராக ஒரு பொதுநல வழக்காவது குமாரசெல்வா தொடுத்திருக்க வேண்டாமா? மாணவர் நலனில் அக்கறையுள்ள தன்மானமுள்ள பேராசிரியர் என்பதனை குமாரசெல்வா நிருபித்திருக்க வேண்டாமா?
“செத்துப்போன தொல்காப்பியர், திருவள்ளுவர் ஆகியோருக்கு எல்லாம் தங்கள் மண்ணில் தாராளமாக குடியுரிமை வழங்குகிறார்கள் என்கிற இன்னொரு குற்றச்சாட்டை குமாரசெல்வா முன்வைக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது மக்களின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்று ஆங்காங்கே திருவுருவச் சிலைகளை நிறுவி மரியாதை செலுத்தி வருகிறது. மறைந்தாலும் படைப்புகளால் நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும் புலவர்களான திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோரை, ‘செத்துப்போன என்ற அடைமொழியுடன் உச்சரிக்கும் தமிழ் பேராசிரியர் குமார செல்வாவின் அறிவு ஞானம் வழிந்து ஓடுவதனை அடியேனால் பார்க்க முடிகிறது.
மிகச் சிறந்த ஆய்வின் மூலமாக திருவள்ளுவர் என்பவர் குமரி மண்ணில் பிறந்தார் என்பதனை வட்டார மொழியின் அடிப்படையில் ஒரளவிற்கு நிருபித்து இருப்பவர்கள் பள்ளம்துறை தொ. சூசைமிக்கேல், திருக்குறள் ஆய்வு மையத்தின் தலைவர் கேசவ சுப்பையா மற்றும் ஆய்வுக் களஞ்சியம் ஆசிரியர் முனைவர் பத்மநாபன். அதுபோல், தொல்காப்பியர் என்பவர் குமரி மண்ணில் பிறந்தார் என்பதனை வட்டார மொழியின் அடிப்படையில் ஓரளவிற்கு நிருபித்து இருப்பவர்கள் பைங்குளம் இரா. சிகாமணி, புலவர் சி. ஞானமிர்தம், குணா போன்றவர்கள். திருவள்ளுவர், கடியப்பட்டணத்தில் பிறந்தார், குறத்தியறையில் பிறந்தார், திருநயனார்குறிச்சியில் பிறந்தார் என்றும், தொல்காப்பியர் காப்பிக்காட்டில் பிறந்தார் என்பதிலும் பலருக்கு உடன்பாடு இருக்க வாய்ப்பில்லை. அடியேனுக்கும் அப்படித்தான். இதற்கு ஆதாரப்பூர்வமாக குமாரசெல்வா மறுப்பு எழுதியிருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். அடியேனும் அதனை அறிந்துகொள்ள வாய்ப்பாக இருந்திருக்கும். அதனை விட்டுவிட்டு புலவர்களுக்கு எதுவும் தெரியாது போலவும், தனக்கே எல்லாம் தெரியும் போலவும் குமாரசெல்வா காய் நகர்த்தியிருப்பது தமிழுக்குச் செய்யும் அழகல்ல.
உங்கள் வாழ்க்கைப் போராட்டம் உங்கள் படைப்புகளில் வெளிப்படுவதில்லையே என்கிற கேள்விக்கு குமாரசெல்வா, “தன்னைப்பற்றித் தானே எழுதிப் பிறரிடம் அனுதாபம் பெறுவதையும், பேருந்துப் பயணிகளிடம் துண்டறிக்கை வினியோகித்து பிச்சை கேட்பதனையும் ஒன்றாகவே கருதுகிறேன் என்கிறார். அப்படியென்றால், “ஒரு புளிய மரத்தின் கதை நூலை அவரது இளமைப் பருவ அனுபவத்தின் வாயிலாக எழுதிய சுந்தர இராமசாமி, “கடல் நீர் நடுவே நூலை அவரது ஆழ்கடல் மீன்பிடித்தல் அனுபவத்தின் வாயிலாக எழுதிய கடிகை அருள்ராசு, “அத்தினாபுரத்தில் அவரது வாழ்க்கை அனுபவங்களைக் குறித்து எழுதிய யோ.டி. குருசு, “காத்திருந்த கருப்பாயி நூலில் அவரது அனுபவங்களைக் குறித்து எழுதிய மலர்வதி ஆகியோர் அனுதாபம் வேண்டி பேருந்துப் பயணிகளிடம் துண்டு அறிக்கை வினியோகித்து பிறரிடம் கையேந்தி பிச்சை கேட்கிறார்கள் என்கிறாரா? இப்படிப்பட்ட நூல்கள் புறந்தள்ளப்பட வேண்டியவை என்பது அவரது பேட்டியிலிருந்து வெளிப்படுகிறது. அப்படி வியாக்கியானம் பேசிய அவர், “ஆழி சூழ் உலகு நாவலானது, “குன்னிமுத்து நாவல்போல் புது எதார்த்த நாவல் என அவர் சொல்வதும், பாடத்தில் வைத்த சுந்தர இராமசாமியின், “புளியமரத்தின் கதை நாவலானது உருவி எடுக்கப்பட்டு வேறொரு தகுதியற்ற நாவல் சொருகப்பட்டது என்று சொல்லி வருத்தப்படுவதும் வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது.
1960-களில் தமிழில் ஒரு கருத்தை முன்னிறுத்திக் கதையளக்கும் செயல் யதார்த்தவாதம் என்று கூறப்பட்டது. அதே யதார்த்தத்தை இப்போதும் சிலர் எழுதுகிறார்கள் என்ற வகையில் ‘மறுபக்கம், ‘தோல் போன்ற நாவல்களை சுட்டிக்காட்டி இது, “நின்றுபோன மழையின் பழைய தூற்றல் என்கிறார். தோல் நாவலானது 2012-இல் சாகித்ய அகதாமி விருது பெற்றது. டி. செல்வராசின் ‘தோல்’ நாவலிலும், பொன்னீலனின் ‘மறுபக்கம்’ நாவலிலும் ஏற்கனவே சொல்லப்பட்ட செய்திகள்தான் இருக்கின்றன. இலட்சியம் பேசுவதும், செயற்கையாய் சித்தரிப்பதும் அதன் பாணி என்கிறார்.
புதிய யதார்த்தம் என்பது இதுவரை சொல்லப்படாத அல்லது சொல்ல மறுக்கப்பட்ட விசயம். அப்படிப்பட்ட வரிசையில் வந்ததுதான் குமார செல்வாவின் குன்னிமுத்து நாவல். இப்படிப்பட்ட அற்புதமான படைப்புகளை சமூகத்திற்குத் தரும் குமாரசெல்வா போன்ற படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைக்காமல் போவது எவ்வளவு வருத்தத்திற்குரிய விசயம். அதன் ஆதங்கம்தான் இவ்வளவு பெரிய நீண்ட வியாக்கியானம். ‘மறுபக்கம்’ நாவலானது பழைய சித்தாந்தம் என்றால் ‘குன்னிமுத்து’ நாவலானது புதிய சித்தாந்தமா என்கிற கேள்வி எழுகிறது. அதே மறுபக்கம் பாணியில்தான் குன்னிமுத்து நாவலும் வலம் வருகிறது.
‘குன்னிமுத்து’ நாவல் குறித்து பாதிரியார் ஆன்றனி கிளாரட், நேசமணியின் அணுகுமுறையான சி.எச்.ஐ. நாடார் மத்தியில் வேர்பிடித்த காங்கிரசு ஈழப் புயலில் தமிழகம் முழுவதும் துடைத்து எறியப்பட்ட பின்னரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காலூன்றி நிற்பதற்குக் காரணம் இந்த சாதிய அடிக்கட்டுமானம் இல்லாமல் வேறென்ன? ஈழத்தில் நிகழ்ந்த மனிதகுலப் பேரவலம் எள்ளளவும் அசைக்க முடியாத எஃகுக் கோட்டையான ஒரு மனிதச் சமூகத்தின் சாதிய மனசாட்சியை தொடாமல் விடுவதில்தான் மையப்புள்ளியைக் கைப்பற்றிவிட்டு மற்றவை மீது நையாண்டி பொழியும் குமார செல்வாவின் யதார்த்தவாத சூத்திரம் அம்பலப்பட்டுப் போகிறது.
பாசக கூட்டணி என்றால்கூட திமுகவுக்கு ஓட்டுபோடும் போதகர் யசுதின் மோசசுகளும், பாசக வேட்பாளருக்குமான பிரச்சார மேடையில் கலயனுடன் அமரும் குமரிப் பேராயரும், அதற்கு நேர்மாறாக மதவாதக் கட்சிக்கு எந்தக் கூட்டாளியின் பொருட்டும் ஆதரவு தராத கத்தோலிக்க கிறித்தவ சமூகமும் முன்வைக்கப்படுகின்றனர். பூ வெற்றி பெறுகிறது. இந்த இடத்தில் குமார செல்வாவின் விவரிப்பு யதார்த்தத்தையும், புனைவையும் போட்டு குழப்புகிறது. அனேகமாக புனைவு வடிவத்தை அவர் தேர்ந்தெடுத்த காரணமும் இதுவாக இருக்கலாம். நாவல் வடிவில் எதார்த்தத்தை உணர்வதும், அதேநேரத்தில் புனைவு சுதந்திரத்தில் விரும்பும் வகையில் எதார்த்தத்தை விவரிப்பதுமாக வழுக்கிச் செல்கிறார் குமாரசெல்வா.
பொன். சீதாராமனும், பெல்மனும் போட்டியிடும் நாடாளுமன்றத் தேர்தலில் பூ வெற்றி பெறுகிறது. சி.பி.எம். வேட்பாளர் தோற்கிறார். இப்படித்தான் கதை விடுகிறார் குமாரசெல்வா. ஆனால் கலயன் ஆதரவில் பூ வெற்றி பெற்றபோது தோற்றது பெல்மன் அல்ல. நாமும் யதார்த்தத்தை புனைவுடன் கலந்து குழப்பியடிப்போம். வாசகர்கள் முட்டாள்கள் இல்லையே. (தோற்றது நாடாளுமன்றத்தில் தூங்கி தண்டம் அழுததால் செல்வாக்கை இழந்துபோன காங்கிரசு வேட்பாளரும் அண்மையில் காலஞ்சென்ற அவரது ஆன்மா ஆண்டவனின் அமைதியில் இளைப்பாறுவதாக!). தாவுவதற்கு வேறு கட்சியை விட்டு வைக்காத தாமக வேட்பாளரான, ‘குமரி நெப்போலியனுமாவார்கள்’ (இவரது அண்மையத் தாவல் கூடங்குளம் போராட்ட ஆதரவு அணியிலிருந்து எதிரணிக்கு பாராட்டு திரு. நெப்சு!).
இரண்டுபேரும் சி.எச்.ஐ. நாடார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்குமாகவும் சமூகம் பிரிந்து அதுபோலவே பிற கிறித்தவ சமூகங்கள் பிரிந்ததால் பூ வெற்றி பெற்றதா இல்லை குமாரசெல்வா விவரிப்பதுபோல இவர்கள் பூவுக்கு வாக்களித்ததால் அது வெற்றிப் பெற்றதா? ஆக, கூட்டணி தர்மத்தில் கம்யூனிசுகளிடமும், கலயன்களிடம் நாடாளுமன்றத் தொகுதியை இழந்துவிட்ட காங்கிரசு வடிவில் சி.எச்.ஐ., அரசியல் அதிகாரம் இம்மாவட்டத்தில் பறிபோய் இருக்கிறது. சி.எச்.ஐ. நாடார் சமூகத்தினர் அரசியல் முகமாக காங்கிரசு காட்சி இருக்கிறது. இதில் ஈழமோ, கூடங்குளமோ, முல்லைப் பெரியாறோ, காவரியோ, பாலாறோ, நெய்யாறு இடதுகரை சானலோ, ஏன் சி.பி.எச்.இ. பாடத்திட்டமோ கூட குறுக்கே வர முடியாது. காங்கிரசு என்றால் காங்கிரசுதான்.
இப்படி எந்தவகையிலும் போணியாகாத காங்கிரசு சரக்கிற்காக காலிக் கடையை விரிப்பதை வீர நேசமணிக்கே அரசியல் அறிமுகம் தர தாராள உள்ளம் காட்டும் ‘வெற்றி நாயகி’களாக சட்டமன்ற உறுப்பினர்கள்... இவ்வளவு அம்சங்களை உள்ளடக்கிய ஓர் யதார்த்தத்தை தொடாமலே செல்வதால் குன்னிமுத்து நிச்சயமாக ஒரு புனைவுதான். கடற்கரை மணல் அகழ்வு தொடர்பான விவரிப்புகளிலும் புனைவு அருமையாக வந்திருக்கிறது. பெருமாள்சாமி அண்ணாச்சியின் கடற்கரை மணல் அள்ளும் தொழிலில் மீனவர்களின் எதிர்ப்புக்கும் அதோடு பெருமாள் சாமியின் எதிரி நாராயண சாமியின் இந்துப் படைப்புக்குமான தொடர்பை உருவாக்கும் குமாரசெல்வா உண்மையிலேயே கில்லாடிதான் என்கிறார்.
எல்.எம்.எச்.க்குச் சொந்தமான சொத்துக்களை சி.எச்.ஐ. அமைப்பைச் சார்ந்தவர்கள் அபகரித்து வைத்திருப்பது பற்றியோ, மார்த்தாண்டம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை அபகரித்து கடைகள் கட்டியிருப்பது பற்றியோ, கூடங்குளம் போராட்டத்தின்போது நிதியுதவி மூலம் சி.எச்.ஐ. கல்லூரிகளில் அணுஉலை பாதுகாப்பானது என்கிற போர்வையில் மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற கருத்தரங்குகள் பற்றியோ, அரசுக்குச் சொந்தமான பெருமாள் குளத்தை சட்டத்திற்குப் புறம்பாக விலை கொடுத்து வாங்கியதைப் பற்றியோ, பேருந்துகள் செல்வதற்கு வசதியாக நாகர்கோவில் பெண்கள் கிறித்தவ கல்லூரியின் வளாகச் சுவரை சற்று இடித்துக் கொடுக்க அனுமதியாமல் சி.எச்.ஐ., ஆயர் சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியது பற்றியோ, ஆயராகுவதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்பவர்களைப் பற்றியோ சொல்லாமல் நகரும் குமார செல்வாவின் குன்னிமுத்து நாவலானது சி.எச்.ஐ. அவருக்கு வழங்கிய பேராசிரியர் பதவிக்கான நன்றி விசுவாசம்தான் காரணமாக இருக்கலாம் அல்லது சி.எச்.ஐ. அமைப்பை விமர்சித்தால் பேராசிரியர் பதவியை இழக்க வேண்டியது வரலாம் என்கிற பயவுணர்வாகவும் இருக்கலாம். சி.எச்.ஐ.காரர்கள் பெரும்பாலும் காங்கிரசு கட்சியில் ஐக்கியமாகி விட்டதால் காங்கிரசு கட்சியைப் பற்றி சிறு விமர்சனத்தைக்கூட குமாரசெல்வா முன்வைக்காமல் செல்வது அவர் சார்ந்திருக்கும் இன்னொரு குறுகிய வட்டத்தை அம்பலப்படுத்துகிறது.
தனது வாழ்க்கை அனுபவங்களை நான் கதைகளில் சொல்வதில்லை எனப் பீத்துப் பெருமை பேசும் குமாரசெல்வா பேட்டிகளிலும், அரங்குகளிலும் தன்னைப்பற்றி பீத்திக் கொள்வதில் குறை வைப்பதில்லை. ‘கய்தமுள்’ என்கிற எனது கவிதைத் தொகுப்பு நூலை, நான் எழுதிய நாவல், சிறுகதைத் தொகுப்புகளுடன் நீங்கள் அவசியம் சேர்க்க வேண்டும். காரணம், குமரி மண்ணில் புதிய தலைமுறை கவிஞர்களின் உருவாக்கத்திற்கு அதுவே முதல் நூல் என தனது நூலைக் குறித்து அவரே பீத்துப் பெருமைப் பேசுவதும், ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் என்னைக் கேலி செய்த அதே காரியத்தை நீங்களும் செய்யாதீர்கள் என அனுதாபம் தேடுவதும், நான் எழுந்து அவர்களிடம் நீங்கள் கூறிய சொற்கள் விளவங்கோடு வட்டாரச் சொற்கள். இதற்கும் சங்க இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டவுடன், அதற்கு இன்னொரு பட்டிமன்றப் புலவர், நீ அவரை இந்தளவிற்கு கேவலப்படுத்தி இருக்கக்கூடாது என்று கூறினார் என வியாக்கியானம் பேசுவதும், இந்தப் பட்டிமன்றத் தமிழ்ப் புலவர்களுக்கு கூட்டம்தான் பிரச்சனையே தவிர நான் பிரச்சனை அல்ல என நியாயம் தேடுவதும் அவரது தொடர்கதைப் போக்காக உள்ளது. அவ்வாறு தற்பெருமை பேசுவதன் மூலம் அவர் பீத்துப் பெருமையில் மிதக்கிறார். “என்னைப்பற்றி நானே சான்று பகிர்ந்தால் என் சான்று செல்லாது” (யோவான் 5:31) என்பது குமாரசெல்வா வழிபடும் இயேசுவின் வாக்கு.
‘குன்னிமுத்து’ நாவலில், பெந்தேகோத்தேகாரர் ஒருவர் பயணச்சீட்டு எடுக்காமல் சென்னையிலிருந்து நாகர்கோவிலில் நடக்கும் அற்புத கூட்டத்திற்கு தொடர் வண்டியில் பயணிக்கிறார். பரிசோதகர் அவரிடம் பயணச் சீட்டைக் கேட்கும்போது இயேசுவானவர் பரிசோதகரைத் தொட்டு பெந்தேகோசுத்தேகாரரை காப்பாற்றுகிறார். அவர் நடந்ததை விளக்கி அற்புதக் கூட்டத்தில் சான்று பகருகிறார். பயணச்சீட்டு எடுக்காமல் தொடர் வண்டியில் ஏறி வந்தது திருட்டுத்தனம் எனச் சொல்லி கம்யூனிசவாதி ஒருவர் கேள்வி எழுப்புகிறார். இவ்வாறு பெந்தகோத்தே சபைகளை நக்கலாகவும், கிண்டலாகவும் கதையளக்கும் குமாரசெல்வா, ‘குன்னிமுத்து நாவல் எழுதப்பட்ட விதம் குறித்து விவரிக்கும்போது, “மதியத்திற்குப் பிறகு சில நேரங்களில் தூக்கம் என்னைத் தழுவியது உண்டு. அப்பொழுது எனது கரம் எழுதிக் கொண்டுதான் இருந்தது. கிறக்கம் நீங்கிப் பார்த்தபோது விழித்த நிலையில் இருந்து எழுதியதைவிட ஆழமாகவும், சிறப்பாகவும் அமைந்திருந்தது கண்டு வியப்புற்றேன் என்கிறார். குமாரசெல்வா என்கிற சி.எச்.ஐ.காரர் இப்படி எழுதினால் ஆச்சரியம்; ஆரோகுணம். இதனை ஒரு பெந்தேகோத்தேகாரர் எழுதினால் திருட்டுத்தனம்; பொய் சாட்சியம். இப்படித்தான் சில படைப்பாளர்கள் பீத்துப் பெருமையில் மிதக்கிறார்கள்.  
“நான் இப்போதும் இளமையாகத்தான் இருக்கிறேன். கொஞ்சம் டிப்பிரசன். சிறுவயதிலேயே தந்தையை இழந்த எனக்கு தந்தையாக விளங்கிய மாமனாரின் மரணம் ரொம்பவே பாதித்துவிட்டது. என்ன செய்தாலும் மீண்டுவர இயலவில்லை என்று குமாரசெல்வா சொல்வதால் அவருக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்குவது சிறப்பானதாக இருக்குமெனக் கருதுகிறேன்.

No comments:

Post a Comment