Wednesday, August 22, 2018

சிவலட்சுமி


சிவலட்சுமியின், ‘நதியில் நனையும் நிழல்கள்” வாழ்வின் அழகியலை முன்வைக்கிறது!

இயற்கை, மனிதர்களை பாதுகாத்து வருகிறது. மனிதரின் வாழ்வாதாரமும் இயற்கைதான். இயற்கையின் நிழலில் மனிதர்கள் வாழ்வதே நீடித்த வாழ்வுக்கான ஆனந்தம். இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என்கிற அற்புதமான சிந்தனையின் அடிப்படையில் வடக்குத் தாமரைக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி சிவலெட்சுமி கவிதை நூலொன்றினைப் படைத்திருக்கிறார்.

“ஒருநாள், எனக்கும் வானத்திற்கும் போட்டி நடந்தது. நான் பெருமூச்சை எடுத்து வைத்தேன். அது புயலை எடுத்து வைத்தது. இறுதியில் நான் புதுப்புது லட்சியங்களை நோக்கி நடக்கும் என் பாதங்களை எடுத்து வைத்தேன். வானம் தோற்றது” என கவிக்கோ அப்துல் இரகுமான் இயற்கையை பாடுபொருளாக எடுத்துக்கொண்டு பேசுகிறார். “இயற்கை ஒரு தூரிகையை படைக்க எண்ணி ஒரு ஓவியத்தைப் படைத்தது. அதுதான் வானவில். சொர்க்கத்திலிருந்து வீசியெறியப்படுகிற துரும்புகூட அழகாகத்தான் இருக்கிறது” என வானவில் குறித்து கவியரசு நா. காமராசன் எழுதுகிறார். அதிலிருந்து சிவலெட்சுமியின் கவிதைகள் சற்று வித்தியாசப்படுகிறது. அவரது படைப்புகள் உள்ளதை உள்ளபடி பேசுகிறது. இயற்கையோடு உள்ள உறவை முன்வைக்கிறது. வாழ்க்கையின் முக்கியத்துவத்தை இயற்கையோடு இயைந்து அர்த்தப்படுத்துகிறது. “எனக்கு உணவாய் வருவதும் இயற்கை! எனக்கு உயிரைத் தந்ததும் இயற்கை!” என அவர் முன்வைக்கும் வார்த்தைகள் மிக எளிது. அதன் அர்த்தமோ மிகப் பெரிது.

“நாங்கள் காற்று மன்னவன். கால்நடை யாத்திரியைக் கண்டு முரசறையும் கட்டியங்காரர்கள். தரையில் நடக்கப் பிரியப்படாதபோது காற்று எங்கள் தலைகளின்மீதே நடந்து செல்கிறது” என புதுக் கவிதையின் தாத்தா கவிஞர் மு. மேத்தா மரங்கள் குறித்து எழுதுகிறார்.  இவ்வாறு வித்தியாசமாக பேசும் கவிஞர் மத்தியில் தனது கவிதையை சாதாரண நடையில் செதுக்கி, மரத்தின் மகத்துவத்தை அளப்பரிய அறியத் தருகிறார் கவிஞர் சிவலெட்சுமி. “காய் கனியைத் தந்த மரம்! காற்றை தூய்மைபடுத்தும் மரம்! மருந்தாய் பயன்படும் மரம்! முக்கனிகள் நிறைந்த மரம்! நிழலைத் தருகின்ற மரம்! நன்மையாய் உதவும் மரம்!” என மரத்தால் என்னென்ன நன்மைகள் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும் இருக்கிறதோ அதனை அப்படியே அழகுபடச் சேர்த்து கட்டுமரமாகத் தந்திருக்கிறார்.

குழந்தையைப் பற்றி பேசும்போது கவிஞர் செயசீலன், “நெஞ்சில் ஏறி நின்று உதை விடுவாய். கதைகள் கேட்பாய். எனைத் தழுவி சிறுநீரால் தீர்த்தமாட்டி எனை நித்தம் புனிதனாக்கி வளர்த்து எனைக் கனிய வைப்பாய். இளக வைப்பாய். நெகிழ வைப்பாய். கல் நெஞ்சை பனியாக உருக்கி நிற்பாய்” என்கிறார். சிவலெட்சுமியின் கவிதைகள் இன்னும் நேரடியாக, “மெல்ல ஊர்ந்து செல்லும் குழந்தை! பொக்கை வாயுடன் சிரிக்கும் குழந்தை! கள்ளம் கபடம் இல்லா குழந்தை! நாளை நாட்டை காத்திடும் குழந்தை!” என குழந்தையின் அழகை சொல்வது மட்டுமின்றி இக்குழந்தை நாட்டை காத்திடும் குழந்தை என்கிறார். இன்றைய மாணவர்கள் நாளைய நாட்டின் மன்னர்கள் என்கிற கருத்தை எடுத்து முன்வைக்கிறார்.
தமிழ்மொழி குறித்து, “தத்துவம் யாவும் தமிழ்மொழி யுணர்த்தலால் சத்தியஞ் செய்வேன் என்தாய்மொழி அதுவே!” என்கிறார் கவிஞர் கிரிசா மணாளன். அதனை சிவலெட்சுமி, “உலகின் மொழியாய் உள்ளது பலவே! உயிரின் மொழியாய் உள்ளது சிலவே! உறவை சேர்க்க உதவிடும் தமிழே! என்னை ஈர்த்த ஒரு மொழி தமிழே! என தமிழ் மொழியின் பெருமையை எடுத்து அற்புதமாக இயம்புகிறார்.

“பிறந்த பின்புதான் பாசம் வரும். வளர்ந்த பின்புதான் நட்பு வரும். பருவமடைந்தால்தான் காதல் வரும். நான் பிறக்கும் முன்னரே என்னில் அன்பு வைத்த தாயே, உன்னை கண்முன் கண்ட தெய்வமாய் வணங்காமல் நான் இருந்து என்ன பயன்?” என கவிப்புயல் இனியவன் தாய்க்கு கவிதை எழுதுகிறார். அதற்கும் ஒருபடி மேலாக, கடவுளின் அமைதி முகமாக, தரிசனத்தின் அடையாளமாக தாயைக் காண்கிறார் சிவலெட்சுமி. “உண்மையில் அதிசயம் நீயே! கண்கண்ட கடவுளும் நீயே! என்னை ஈன்றவள் நீயே! எனக்கு உயிரைத் தந்தவள் நீயே!”. எவ்வளவு அற்புதமானதொரு வார்த்தை வனப்பு சிவலெட்சுமியின் கவிதைகளில் பூத்துக் கிடக்கிறது. அதனை அள்ளிப் பருகுபவர்களுக்கும், வாசித்து இரசிப்பவர்களுக்கும்தான் அதன் சுவையும், தரமும் அளவில்லாமல் கிடைக்கும்.

கடலை எத்தனை முறை பார்த்தாலும் அதன் அழகு குறையாது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கடல் ஒரு அற்புதமான இதம் தரும் மருந்து. கடற்கரைக்குச் சென்று நல்ல காற்றை சுவாசித்து மகிழ்ந்தவர்கள் உண்டு. கடற்கரைக்குச் சென்று நல்ல கவிதை எழுதி வந்தவர்கள் உண்டு. அக்கடலில் பலவகையான உயிரினங்கள் வாழ்கிறது. அப்படிப்பட்ட கடல் மனிதர்களுக்கு உணவையும் தருகிறது என்கிறார் சிவலெட்சுமி. “உயிர்கள் பல வாழும் கடல்! முத்து சிப்பி கிடைக்கும் கடல்! மீன்பிடிக்க உதவும் கடல்!’ எனக் கடலின் பயன்பாட்டை கவிதை வழியாக கோடிட்டுக் காட்டுகிறார். 

மரங்கள் வெட்டப்பட்டதால், ‘வீட்டிற்கு ஒரு மரம் நடுவோம்’ என விளம்பரம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு அரசு தள்ளப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு மரங்களை வெட்டி காசு பார்க்கும் கடத்தல்காரர்கள் உருவாகியுள்ளனர். “அன்று, வீட்டுக்கு ஒரு வீரன் தேவை என்றார்கள். வீரர்களை வளர்த்தோம். இன்று,வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பீர் என்கிறார்கள். மரங்கள் வளர்கின்றன” என்கிறார் கவிஞர் காசியானந்தன். “மனிதா! நீ என்ன நினைத்தாய் இந்த பூமி உனதென்றா? இல்லை, இந்த பூமி நீ வாழும் காலம்வரை உன்னைத் தாங்கி வரும். ஆனால், உனக்கு சொந்தமல்ல. உன் சந்ததியினரின் சொந்தம். அவர்கள் நலமாக வாழ நீ நட வேண்டாம் மரத்தை! மாறாக, வெட்டாமல் இரு” என கவிஞர் சோனி யோசப் அறிவுரை வழங்குகிறார். சிவலெட்சுமியோ, தனது கவிதைகளில் அறிவுரை எதுவும் சொல்லாமல் கவிதையை வித்தியாசமான முறையில் சுவைக்கத் தருகிறார். கவிஞர்கள் மத்தியில் சற்று மாறுபட்டு கவிதை படைக்கிறார். “காய் கனியைத் தந்த மரம்! காற்றை தூய்மைபடுத்தும் மரம்! மருந்தாய் பயன்படும் மரம்! முக்கனிகள் நிறைந்த மரம்! நிழலைத் தருகின்ற பெரிய மரம்! நன்மையாய் உதவும் மரம்!” என்கிறார். மனிதர்கள் இல்லை என்றாலும் மரங்கள் வாழும். மரங்கள் இல்லை என்றால் மனிதர்கள் வாழ இயலாது என்பதனை எளிதாக தந்திருக்கிறார் இளம் கவிஞர் சிவலெட்சுமி.

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால், எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது என சுவாமி விவேகானந்தர் அறிவுறுத்துகிறார். உண்மை புனிதமானது; இனிமையானது. தீமையிலிருந்து உங்களை விடுவிக்கிறது. உண்மையைத் தவிர உங்களைக் காப்பாற்றக் கூடியது இந்த உலகில் எதுவும் இல்லை என புத்தர் உபதேசம் செய்தார். அப்படிப்பட்ட உண்மையை, “உண்மையைப் பேச வேண்டுமடி பாப்பா! உலகமே உன்னை போற்றுமடி பாப்பா! உண்மையே சிறந்த அறமடி பாப்பா! உண்மையே புகழைத் தந்திடுமடி பாப்பா!” என சிவலெட்சுமி உணர வைக்கிறார்.

உண்மையும், நேர்மையும் சமுதாயத்தின் நடுவில் கடைபிடிக்க வேண்டுமே தவிர குகைகளில் அல்ல என மகாத்மா காந்தி உரைக்கிறார். அதனை சிவலெட்சுமி, “தானம் செய்ய வேண்டாம் பாப்பா! தவமும் செய்ய வேண்டாம் பாப்பா! உண்மையால் உள்ளம் தூய்மையாகும் பாப்பா! உண்மைப் பேசுபவனே சிறந்தவனடி பாப்பா!” என்கிறார். வாழ்க்கையில் ஒருவர் உண்மையாக வாழவில்லை என்றால் தானமும், தவமும் வீண் என்பதனை பாப்பாவுக்கு ஒரு பாப்பாவாக இருந்து எடுத்துரைப்பது உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பாப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ளும்போதுதான் பெரிய புதையலே கிடைக்கிறது. “நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், பரலோக உலகில் நுழைய முடியாது என்ற இயேசுவின் வாக்கு கூர்ந்து நோக்கத்தக்கது.

‘கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பது ஒளவை வாக்கு. ‘கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே மேல். ஏனெனில், கல்லாமைதான் தீவினையின் மூலவேர்’ என்கிறார் கிரேக்க அறிஞர் பிளேட்டோ. ‘எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு’ என திருவள்ளுவர் அமுதூட்டுகிறார். அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தை சிவலெட்சுமி தனது கவித்துவத்தில், “நிலையாக நிலைத்த செல்வம். நல்லதிற்கே உதவும் நல்ல செல்வம். திருட முடியாத செல்வம். பட்டங்கள் வாங்க வைக்கும் செல்வம். பாரினை உயர வைக்கும் செல்வம். சமுதாய நலத்திற்கு தேவையான செல்வம். எல்லாவற்றிற்கும் உயரிய செல்வம். என்றுமே உலகின் உயரிய செல்வம்” என கல்விச் செல்வத்தின் மகிமையை எடுத்து இயம்புகிறார். இந்த சிறுவயதிலே அவர் கவிதை நூல் ஒன்றினைப் படைத்திருப்பது அவரிடம் இருக்கும் கல்விச் செல்வமே என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தைப் பெறுவதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களும், பெற்றோர்களும் போற்றுதலுக்கு உரியவர்களே.

சிவலெட்சுமிக்கு ஆன்மிகத்தின்மீது பற்று அதிகமாவே இருக்கிறது. இந்துத்துவம் என்பது ஆன்மிக நெறிமுறை. அந்த நெறிமுறைதான் அவரை அழகிய வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறது. அவருடைய ஆன்மிகப் பற்றினை அவரது கவிதைகளில் ஆங்காங்கே காண முடிகிறது. இந்நூலில் கடவுள் வாழ்த்து ஒன்றினையும் வடித்திருக்கிறார். எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருப்பெற செய்கிறேன் என பகவத் கீதை உரைக்கிறது. அதனால் இன்றைய வறுமை நிலையை கண்டுணர்ந்த சிவலெட்சுமி, “உண்ண உணவில்லை. உடுக்க உடையில்லை. குடியிருக்க வீடில்லை. கைகொடுக்க உறவில்லை. காலில் செருப்பில்லை. கல்வி கற்க பணமில்லை. பசியால் தவிக்கிறோம். பட்டினியால் துடிக்கிறோம். வறுமையைப் போக்கவே வந்தருள்வாய் கடவுளே!” என கடவுளிடம் விண்ணப்பம் வைக்கிறார். அவருடைய விண்ணப்பம் ஏறெடுக்கப்பட வேண்டும் என்பதே சிவ அடியாராகிய அடியேனின் அவா.

இன்றைக்கு வரதட்சணை என்பது பெண்களின் பிரச்சனையாக மட்டுமல்ல, பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் பிரச்சனையாகவும் மாறியிருக்கிறது. பெண்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதில் வரதட்சணை துணை நிற்கிறது. திருமணம், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிற சித்தாந்தம் மாறி ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. பெண் வேண்டும் ஆண்கள், வரதட்சணை பெயரில் பிச்சை எடுக்கும் அவலநிலை நீடிக்கத்தான் செய்கிறது. படித்த ஆண்கள்தான் அதிகமாகப் பிச்சை எடுக்கிறார்கள். ஆண்களின் கல்விச் செல்வம் இங்கு அடமானம் வைக்கப்படுகிறது.

இப்படிபட்ட சமூகத்தின் அவல நிலையை மு. மேத்தா, “பூக்களில் நானும் ஒரு பூவாய் பிறப்பெடுத்தேன். பொன்விரல் தீண்டலையே. நான் பூமாலை ஆகலையே” என வரதட்சணையின் கொடூரத்தை முன்வைக்கிறார். சிவலெட்சுமி, பெண்ணினத்திற்கே முன்னோடியாக தனது கவிதை வரிகளை, “கொடுப்பதற்கு வரதட்சணை இல்லாததால் சோகத்தில் உயிரை மாய்ப்பது மடமையம்மா!” என்கிறார். மு. மேத்தா, ஏக்க நிலையை முன்வைக்கிறார். சிவலெட்சுமி, நம்பிக்கை விதையை முன்வைக்கிறார். “கல்வியில் புலியானாய். கணனியில் சிங்கமானாய். வாழ்க்கையில் சிறந்தவளானாய். வரதட்சணையால் சோர்ந்து போகலாமா?’ என அறிவுக் கண்களைத் திறக்க வைத்து நம்பிக்கையை விதைக்கச் செய்கிறார்.
மதுவை ஒழிக்க பெண்கள் கிளர்ந்து எழுந்ததுபோல் வரதட்சணையை ஒழிக்க பெண்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்பது சிவலெட்சுமியின் ஆவலாக உள்ளது. “எழுந்திடு பெண்ணே! வாழ்வை மாற்றிடு. ஒழுக்கத்தில் சிறந்த பெண்ணே! ஒழித்திடு வரதட்சணையை உலகம் போற்றும் வகையில்!” என்கிறார். தூக்கத்தைக் கலைத்துவிட்டு வாருங்கள் என அழைப்பு விடுக்கிறார். சமூகத்தில் நிலவும் அநீதியைக் குறித்து எழுதும்போது சிவலெட்சுமியின் வேகம் மின்னலாக நீளுகிறது.

சிவலெட்சுமியை அடியேனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் கவிஞர் சூடி சுந்தர். சிவலெட்சுமியின் கவிதைகளைக் கொடுத்து, அதனை வாசிக்க வேண்டும் என்றும், அதனை வெளியிட உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஓரிரு நாட்களில் கவிதைகளை முழுமையாக வாசித்து முடித்தேன். எட்டாம் வகுப்பு மாணவி சிவலெட்சுமியின் கவிதைக்குள் கிடக்கும் சமூகச் சிந்தனையைக் கண்டு வியந்தேன். கவிதைக்கான பெயரை தேர்வு செய்துவிட்டு, அட்டைப்படம் வடிவமைக்கும் விசயம் குறித்து கன்னியாகுமரி விரைவு இதழாசிரியர் தா. சகாய சுரேசு செல்வனிடம் பேசினேன். சிவலெட்சுமியின் கவிதைக்காக அட்டைப்பட பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். பிழை திருத்தம் செய்யும் பணியை தனித்தமிழ் ஆர்வலர் குமரிச் செல்வனிடம் ஒப்படைத்தேன். அவரும் மனநிறைவாகச் செய்து முடித்தார். இந்நூல் வெளிவருவதற்கான பொருட்செலவை ஆதாம் ஏவாள் பதிப்பகத்தார் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் அடியேனின், “தெற்கு எழுத்தாளர் இயக்கம்” சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவலெட்சுமியின் கவிதைகள், பல விசயங்களைப் பேசுகிறது. பல்வேறு கருத்துக்களை முன்வைக்கிறது. அவர் பார்த்த, இரசித்த விசயங்களை தரிசனங்களாக தந்திருக்கிறார். அனைவரும் இரசிக்கும் வகையில் வாழ்வின் அழகியலை அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறார். அதனால் அவரது கவிதை அழகு பெறுகிறது. அற்புதம் அடைகிறது. நீங்களும் நூலை வாங்கி வாசியுங்கள். அந்நூல் உங்களுக்கும் மன நிறைவைத் தரும் என்பதில் அடியேனுக்கு ஐயமில்லை.




No comments:

Post a Comment