Tuesday, August 28, 2018

பா. ஜீவ சுந்தரி


பா. சீவசுந்தரியின் அலங்காரப் பேச்சுக்கள்
‘மாதவம் ஆகவில்லை!


பா. சீவ சுந்தரி, குமரி மாவட்டப் படைப்பாளர் அல்ல. இவர், மாயாவரத்தைச் சார்ந்தவர். ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்’ மற்றும் ‘பெண் என்னும் பகடைக்காய்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளவர். இவரைப் பேட்டி எடுத்தவர்கள் குமரி மாவட்டத்தைச் சார்ந்த படைப்பாளர்கள் சிவ. அய்யப்பன் மற்றும் கோதை சிவாகண்ணன் என்பதாலும், குமரி மாவட்ட மாதவம் இதழில் இவரது பேட்டி இடம் பெற்றிருந்ததாலும் அவ்விமர்சனத்தை இந்நூலில் அடியேன் சேர்த்திருக்கிறேன்.
பெண்கள் பற்றிய பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ளட்டும்என்கிற தலைப்பில் எழுத்தாளர் பா. சீவசுந்தரி பேட்டியானது மாதவம்மார்ச் 2017 இதழில் வெளிவந்தது. இடதுசாரி சிந்தனையுள்ள இவர் வைத்துள்ள சில கருத்துக்கள் வித்தியாசமானவை என்பதனைவிட நியாயமானவை என்பதாகவே எடுத்துக்கொள்ள முடிந்தது. ஆண் பெண் இருபாலரையும் ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாக நான் கருதுவதில்லை. இருவரும் சமமானவர்கள் என்றும் சொல்வதற்கில்லைஎன்று வெளிப்படையாகவே பேசும் அவரது பார்வை பெண்ணியம் குறித்து இன்னும் ஆழமாகவே சிந்திக்க வைக்கிறது.
சுதந்திரப் போரில் பங்கெடுக்க வேண்டிய தேவை இருந்தபோது பெண்கள் தீவிரமாகத் தெருவில் இறங்கி போராடினார்கள். நாடு விடுதலைப் பெற்றபிறகு பெரும்பாலான பெண்கள் மீண்டும் வீடுகளை நோக்கித் திரும்பினார்கள் என்கிற அவரது வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், அதுபோல விடுதலைப் புலிகள் படையில் பெண் புலிகள் மிகத் தீவிரமாகப் போரில் பங்கெடுத்தார்கள். போருக்கு பிந்திய நிலையில் அடையாளங்கள் ஏதுமின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள் என்பது ஏற்கத் தகுந்தது அல்ல. ஒருவேளை விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றிருந்தால் அவர்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்திருக்க மாட்டார்கள் அல்லவா? போரின் போக்கு அதன் சூழ்நிலையை மாற்றியது என்றுதான் கருத இங்கு இடம் இருக்கிறது.
இப்போதும் பெண்கள் பங்கெடுக்கும் எந்தப் போராட்டங்களும் தோற்பதில்லைஎன சீவசுந்தரி சொல்வது வரிந்து திணிக்கும் செயலாகவே பார்க்க முடிகிறது. பெண்கள் பங்கெடுத்த கூடங்குளம் அணுஉலைப் போராட்டம் என்னானது? இந்திய இராணுவத்திற்கு எதிராக மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தினார்களே, அது என்னானது? தலாக்கிற்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டம் என்னானது? இசுலாமியப் பெண்கள் சீவனாம்சம் கேட்டு போராட்டம் நடத்தினார்களே, அது என்னானது? சீவனாம்சம் சம்பந்தமாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காங்கிரசு தூக்கி வீசியதே, அப்போது இடதுசாரி பெண்கள் எங்கேப் போனார்கள்? போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.
இன்றைக்கும், “இடதுசாரி பெண்கள் அமைப்புகள் மட்டுமே தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள் என்பதனை மறுப்பதற்கு இல்லைஎன்பது அவ்வமைப்பின்மீது அவர் கொண்டிருக்கிற உறவைக் காண்பிக்கிறது. இடதுசாரி பெண்கள் போராட்டம் என்பது நான்கு சுவற்றிற்கு முடங்கிப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. ‘அகில உலகப் பெண்கள் தினம் அன்று பாவனை காட்டும் ஊர்வலம் மட்டுமே இன்றைக்கு நடைபெறுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவது குறித்து பேசும்போது, “வளைகுடா நாடுகளைப்போல, ‘கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்என்ற தண்டனை முறைகளை இங்கு கொண்டுவர முடியாது. அது முறையல்ல. குற்றங்கள் நிகழாமல் இருக்க வேண்டுமானால், மக்களின் மன நிலையில்தான் மாற்றங்கள் நிகழ வேண்டும். அது ஒன்றுதான் வழிஎன அவர் முன்வைக்கும் வாதம் முற்றிலுமாக ஏற்கத்தகுந்ததே! அதற்காக அவர் சொல்லும் நிர்பயா பாலியல் குற்ற வழக்கு, வர்மா அறிக்கை, வரதட்சணை தடைச் சட்டம் போன்ற காரணகாரியங்கள் ஏற்கத் தகுந்ததே.
வீட்டுவேலை செய்யும் பெண்கள் குறைந்தபட்சம் மாதம் 2000 முதல் 5000 வரை ஊதியமாகப் பெறுகிறார்கள். அங்கு அவரது உழைப்பு மதிக்கப்படுகிறது. வீட்டில் நாள் முழுவதும் உழைக்கும் மனைவிக்கு ஊதியம் கொடுக்கும் நிலை வந்தால் உங்களுக்கு கட்டுபடியாகுமா? என்கிற கேள்வி அன்பை வம்பால் இழுக்கும் கேள்விதான். அதனால்தான் நடிகர் கமலகாசன் போன்றோர்கள் திருமணம் செய்யாமல் வாழ்க்கை நடத்துவதை உறுதி செய்தார்கள். தேவையில்லாதபோது அவளை வெளியே அனுப்பி விடுகிறார்கள். மனைவி வீட்டு வேலையை முழுமையாக செய்ய முன்வந்தால் வீட்டிற்கு வேலைக்காரி எதற்கு என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. பெற்றோர்களைக் கொண்டு அநாதை இல்லங்களில் விட்டுவிட்டவர்களால் அல்லது கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போனதால் வந்த விளைவுதான். அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும்.
பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் அநாதை இல்லங்களில் சேர்ப்பதற்குக் காரணமே பெண்கள்தான் (மனைவிதான்) என்பதனை மறந்துவிடக்கூடாது. அதேவேளையில், அடுக்களை பெண்களுக்கானது மட்டுமல்ல என்கிற பா. சீவசுந்தரியின் வாதம் நியாயமானதே. குழந்தை வளர்ப்பு என்பதிலிருந்து பெண் விலக வேண்டும் என்பதைவிட, ஆணுக்கு குழந்தை வளர்ப்பில் பங்கிருக்கிறது என்பதையே அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன் என்கிற அவரின் ஆதங்கம் ஏற்கத்தகுந்ததே. வீட்டு வேலையை ஆண் பெண் பகிர்ந்து செய்வது அவர்களிடையான அன்பை வளப்படுத்த உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
திருமணம் செய்து கொண்டு விட்டதாலேயே சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் ஆணுக்கு சொந்தமாகி விடாதுஎன்கிற வாதம் ஏற்கத்தகுந்ததே. மனைவியின் விருப்பமின்றி அவளோடு கணவர் பிணைவது என்பது பாலியல் வன்முறைதான். அதனால்தான் பலதாரமணம் உருவானதோ என்பதும் ஆலோசனைக்குரியது. அதற்கு மாற்றுவழி என்னவென்பதும் ஆலோசனைக்குரியது.
பெண்கள் அணியும் இரவி (நைட்டி), கால் இறுக்கி (லெக்கின்சு) போன்றவற்றை ஆதரிக்கும் பா. சீவசுந்தரி, பர்தாவை ஆதரிப்பது விசேசம் ஒன்றுமில்லை. பர்தா அவரவர் உரிமை என உச்சி முகர்ந்து போவது சிறுபான்மையினரின் மதத்தின்மீது இடதுசாரிகள் கொண்டிருக்கிற அக்கறைதான். பர்தா, இசுலாமியப் பெண்கள் மீது திணிக்கப்படுகிறது என்பதனை அவர் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை.
பெண்கள் காலுக்கு உதவாத செருப்பைக் கழற்றி வீசுவதுபோல், விவகாரத்து செய்துவிட்டு அடுத்த திருமணத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் நட்டமடையப் போவது ஆண்களும், சந்தேகப் பேர்வழிகளும்தான்என்கிறார் பா. சீவசுந்தரி. பெண்கள், விவகாரத்து செய்துவிட்டு இன்னொரு ஆணைத்தானே திருமணம் செய்ய வேண்டும்? இன்னொரு பெண்ணையா திருமணம் செய்யப் போகிறார்கள்? அப்படியென்றால், “ஆண் மனமோ பெண் பற்றிய சென்ற தலைமுறை பார்வையையே மாறாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறதுஎன்கிற உங்கள் வாதத்தை எங்கே பொருத்திப் பார்ப்பது? தலைமுறைப் பார்வை மாறிய ஆணையா கண்டுபிடித்து அவள் இன்னொரு திருமணம் செய்யப் போகிறாள்?
பெண்ணாதிக்க சிந்தனையுள்ள பெண்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு என்னவென்றால் அவர்களுக்கு ஆண்களைப் பிடிக்காததுபோல் கருத்து சொல்வார்கள். இது குடும்பங்களை சீர்குலைக்கிற செயல். இவரது கட்டுரையில் எந்தவொரு இடத்திலும் ஆண்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதனைச் சொல்வவே இல்லை. இன்றைக்கு பெண்கள் இவ்வளவு சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் ஆண்கள்தான். இன்றைக்கும் பெண்ணுரிமைக்காக ஆண்கள் போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கான விழிப்புணர்வுளை ஆண்கள்தான் முன்னெடுத்துச் செல்கிறார்கள். இந்த அம்மா சீவசுந்தரி வாசித்த புத்தகத்தை தூக்கி வீசியது யார் என்பதனைப் பார்த்தாலே இந்த அம்மாவின் அலங்காரப் பேச்சுக்கள் கலைந்துவிடும்.

No comments:

Post a Comment