Tuesday, August 28, 2018

வறீதையா கான்சுதந்தின்


வறீதையா கான்சுதந்தின், பேரிடர் அபலைகளின் துயரம்” மீனவர்கள் மீதுள்ள நம்பகத்தன்மையை இழக்கச் செய்கிறது!
மீனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவானது காலங்காலமாக மீனவர்கள் அனுபவித்து வரும் சிக்கலுக்குத் தீர்வாக அமையுமா? என்கிற கேள்விக் கணையோடு, “பேரிடர் அபலைகளின் துயரம்என்கிற தலைப்பில் 28.12.2017 தி இந்துவில் வறீதையா கான்சுதந்தின் எழுதிய கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கிறது. ஆட்கொணர்வு மனுவை கேள்வியோடு தொடுத்து கேள்வியோடு நிறுத்தியிருக்கிறார். ஆட்கொணர்வு மனு குறித்த விவரமோ, அதற்கு அரசு அதிகாரிகள் அளித்த பதிலோ, அதற்கு நீதிமன்றம் சொல்லியிருக்கிற முடிவோ இக்கட்டுரையில் இல்லை என்பதால் அதனை நீதிமன்றத்தில் சமர்பித்த குளச்சல் ஆன்றோ லெனின், அதனைக் குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.
“26 வருடங்களுக்கு முன்னால் கடலில் இறந்துபோனதாகச் சொல்லப்படுகின்ற ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறையைச் சேர்ந்தவர். அவருக்கு இன்றுவரை இறப்பு சான்றிதழ் பெற முடியவில்லை என்பதாலேயே இறந்து போனவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடோ, அரசின் எந்தவிதமான மறுவாழ்வு கவனிப்போ கிடைக்கவில்லைஎன சொல்லும் வறீதையா கான்சுதந்தின், மரித்துப் போனவரின் பெயரைக் கட்டுரையில் குறிப்பிடவில்லை. ஒருவேளை அவருக்கு அப்பெயர் தெரியாமலும் இருக்கலாம். தெரியவில்லை என்றால், அவர் குடியிருக்கும் ஊருக்கு அருகிலுள்ள சின்னத்துறை ஊருக்குச் சென்று அதனை அறிந்து கட்டுரையில் சேர்த்திருக்கலாம். அவ்வாறு சேர்க்காதபோது கட்டுரையின் தரம் மதிப்பிழந்து விடுகிறது. தமிழகம் முழுவதும் கடற்கரை கிராமங்களுக்குச் சென்று, மக்களின் வாழ்வாதாரத்தை அறிந்ததாக அவரது வேறு சில கட்டுரைகள் வாயிலாகச் சொல்லும் அவர் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கான மேம்பாட்டுப் பணியில் தன்னை ஐக்கியப்படுத்தி இருக்கலாம். அக்குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய இழபீட்டிற்கு ஆவன செய்திருக்கலாம். அரசு அதிகாரிகளை சந்தித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம். அப்படியும் எதுவும் நடந்துவிடவில்லை.
நான்கு மீனவர்கள் சின்னத்துறையில் சுமார் ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு ஆழ்கடல் விசைப்படகைக் கப்பல் இடித்த விபத்தில், அந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டார்கள். இன்றுவரை அந்த மீனவர்களுக்கு இறப்புச் சான்றிதழோ, எந்தவித நிவாரணமோ கிடைக்கவில்லை. அவர்களின் உறவினர்கள் மீண்டும் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயில்களைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்எனச் சொல்லும் வறீதையா கான்சுதந்தின் அவர்கள் யார் என்பதனை கட்டுரையில் குறிப்பிடவில்லை. எதோ இவர் கேள்விப்பட்டிருக்கிறார் என்பதுபோல்தான் எடுத்துக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. பாதித்த குடும்பங்ககளை சந்தித்து ஒரு வரி சேர்த்திருந்தால்கூட கட்டுரை வலுப்பெறும். பெயர்களைக்கூட குறிப்பிடாதபோது கட்டுரையின் தரம் தரமிழந்து போகிறது. தமிழகம் முழுவதுமுள்ள அறிவுசீவிகள் வாசிக்கிற தமிழ் இந்து நாளிதழில் இப்படியாக கட்டுரைகளை வடிப்பது மீனவர்கள் மீதுள்ள நம்பகத்தன்மையை இழக்கச் செய்கிறது.
ஒருவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்யவதற்குக் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கிற சட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதுஎன வறீதையா கான்சுதந்தின் குறிப்பிடுகிறார். இது தமிழ் நாட்டுச் சட்டமா? அல்லது வேறு மாநிலங்களில் வேறு சட்டமா இருக்கிறதா? கட்டுரை வடிக்கும்போது ஏதாவது சந்தேகம் இருந்தால் சட்ட வல்லுநர்களை தொடர்பு கொண்டு பேச வேண்டும். அந்த சட்டத்தை மாற்றியமைக்க வழிமுறைகள் என்னவென விசாரியுங்கள். உங்களுக்கு கட்டுரை எழுதுவது மட்டும்தான் நோக்கமென்றால், அதில் பிறருக்கு சட்ட சந்தேகம் ஏற்படும் வகையில் எழுதாதீர்கள்.
காசுமீரில் கணவனை, மகனை இழந்த பெண்களுக்கு இடையேயான தோழமையை உருவாக்கி இருக்கிறார்கள். தங்களுடைய துயரத்தை சமூகமாக இணைந்தே எதிர்கொள்வது. அதிலிருந்து மீட்சி பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடுவது என்ற நோக்கத்தோடு காசுமீர் பெண்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்என வறீதையா கான்சுதந்தின் குறிப்பிடும் செய்தியானது விவரமின்றி குறுகிக் கிடக்கிறது. அந்த தோழமை எவ்வாறு செயல்படுகிறது என்பதான விவரங்கள் இல்லை.
காசுமீரில் கணவனை இழந்தவர்கள், மகனை இழந்தவர்கள் அனவைரும் இசுலாமியர்கள். குமரியில் ஓகிப் புயலால் கணவனை இழந்தவர்கள், மகனை இழந்தவர்கள் அனைவரும் கத்தோலிக்கக் கிறித்தவர்கள். அங்கே ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் காணாமல் போயிருப்பார். இங்கு அப்படி இல்லை. அங்குள்ள கலாச்சாரம் வேறு. இங்குள்ள கலாச்சாரம் வேறு. அங்கு மதத் தலைவர்கள் குறுக்கீடு கிடையாது. இங்கு மதத் தலைவர்கள் குறுக்கீடு உண்டு. இதில் சுனாமியில் இறந்துபோன பெண்களையும் சேர்க்கச் சொல்கிறார். அப்படியொரு தோழமை உறவு குமரி மண்ணில் உருவாக சாத்தியமே இல்லை. சாத்தியமென்றால் அதனை வறீதையா கான்சுதந்தின் இன்னும் விரிவாக கட்டுரையில் எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்.
ஓகிப் புயல் அடித்து ஒருநாளுக்குள் ஓய்ந்துவிட்டது. அதன்பிறகு கப்பற்படையை அனுப்பக்கோரி குழித்துறையில், அதாவது வறீதையா கான்சுதந்தின்படி ஏழாயிரம் வேணாட்டுப் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். உடனடியாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி, தூத்தூர் கல்லூரியில் வந்து ஆயர் மற்றும் பாதிரியார்களை சந்திக்கிறார். இழப்பீடு இருபது இலட்சம் என அறிவிக்கிறார். போராட்டம் ஓய்ந்துவிட்டது. எதற்கான போராட்டம், எதற்காக மாறியது?
ஓகிப் புயல் ஒரு நாளுக்குள் ஓய்ந்துவிட்டது. உடனடியாக பத்து படகுகளில் மீனவர்கள் ஏன் தேடச் செல்லவில்லை? கப்பற்படையை அனுப்புமாறு ஏன் கையேந்தி நின்றார்கள்? மீனவர்களின் தலைமைத்துவத்தை திருடியவர்கள் யார்? இது விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விசயம்.
வருவாய் ஈட்டுகின்ற குடும்பத் தலைவர் நிரந்தரமாக விட்டுப் பிரிந்துவிட்ட, அந்தக் குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு வாழ்வாதாரம் வேண்டும். பிள்ளைகளுடைய படிப்பைக் கவனிப்பதற்கு நிதி உதவி தேவைப்படுகிறது. பேரிடர் மறு வாழ்வை மறு கட்டுமானமும் பெண்மையைப்படுத்தப்படுவதே சமூக நீதிஎன சொல்லும் வறீதையா கான்சுதந்தின் ஆதங்கமானது ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய செய்தியாகும். அரசானது வாழ்வாதாரத்திற்கு என இருபது இலட்ச ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை எனவும் அறிவித்திருக்கிறது. இதனை ஒரு நல்ல செய்தியாகப் பார்க்கிறேன்.
சுனாமியில் கொள்ளை அடித்த கூட்டங்களை ஓகிப் புயலில் காண முடியவில்லை. வருடம்தோறும் மறைமாவட்டத்திற்கு பத்து சதவீத வரி கட்டும் மக்களுக்கு மறைமாவட்டம் என்னச் செய்யப் போகிறது என்பதும் விவாதிக்கப்பட வேண்டிய விசயம். இதற்கு ஒரு கூட்டு முயற்சி தேவைதான். இருப்பினும், இது இக்கட்டுரையோடு முடிந்து போகும். இனி, அடுத்த பேரிடர் நேரத்தில் மீண்டும் கட்டுரை வடிப்பதற்கு வாய்ப்பாக அமையலாம். பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுதான் பிரச்சனை?



No comments:

Post a Comment