Wednesday, August 22, 2018

குறும்பனை சி. பெர்லின்


குறும்பனை சி. பெர்லினின், “சேலுகேடு கடவுளை கைகழுவுகிறது!

கடலில் திடீரென ஏற்பட்ட சேலுகேடால் வள்ளங்களில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றவர்கள், இழப்பீட்டை கணக்கில் கொள்ளாமல் தொழிலுக்கான உபகரணங்களை அவசர அவசரமாக வெட்டி விட்டுவிட்டு கடற்கரையை நோக்கி வள்ளத்தைத் திருப்பிவிட்டனர்.

ஓங்கி அடித்த அலை பொத்தென அந்தோணிதாசனின் வள்ளத்தில் விழுந்ததால் இயந்திரம் பழுதாகி நின்றது. அதனை சரிசெய்ய எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. தொடர்ந்து அலையின் ஆவேசம் அதிகமாக இருந்ததால் அபாயகரமாக எழும்பிய அலை ஒன்று வள்ளத்தை கவிழ்த்துப் போட்டது.
பேருந்து படிக்கட்டில் சிலமணி நேரம் தொங்கிப் பயணிப்பது சுலபம்தான். வள்ளத்தைப் பிடித்துக்கொண்டு வெளவால்போல் கடல் தண்ணீருக்குள் மணிக்கூர் கணக்கில் தொங்கிக் கிடப்பது மிகமிகக் கடினம்தான். அப்படித்தான் அவ்வள்ளத்தில் அந்தோணிதாசன், மரியதாசன், வின்சென்ட், பணிமயம், இனிகோ ஆகியோர் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, தூங்க வழியின்றி தொங்கிக் கிடந்தனர்.

நாட்கள் கடந்தன. அவர்கள் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எந்தவொரு வள்ளத்தையும் காணவில்லை. தங்களைக் காப்பாற்ற யாராவது வருவார்கள் என்கிற நம்பிக்கை அவர்களிடம் கரைந்து கொண்டிருந்தது. இப்படி உயிருக்குப் போராடும் மீனவர்களின் பாடுகளை சேலுகேடு முன்வைக்கிறது. அவர்கள் குடும்பங்களில் நிலவும் பார சிலுவைகளையும் சேலுகேடு எடுத்து இயம்புகிறது.
காணாமல் போனவர்களை உடனடியாக கண்டுபிடித்து காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளோ வருவாய்த்துறைக்கும், முதலமைச்சருக்கும், கடலோர காவல் படைக்கும் செய்தியை அனுப்பிவிட்டோம் என மூன்று நாட்களுக்குப் பிறகு பாதிக்க மக்களிடம் தகவல் சொல்வதும், காணாமல் போனவர்களை தேடினால் அரசுக்கு இழப்புதான் என்கிற மனநிலைப் போக்கும் தெளிவாக இந்நாவலில் படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது.

அந்தோணிதாசனின் மனைவி ஆஞ்சலியும், அவள் பிள்ளைகள் செயந்தி, வசந்தி, சாந்தி, குணசீலி ஆகியோர் கடற்கரையில் முட்டிப்போட்டு கடலைப்பார்த்து மன்றாடினார்கள். வின்சென்ட் குடும்பமும் பணிமயத்தின் குடும்பமும் நற்கருணை பெட்டிக்கு முன்பாகவும், சகாயமாதா படத்திற்கு முன்பாகவும் ஒப்பாரி வைத்து மன்றாடினார்கள். பங்குப் பாதிரியார், கோயிலின் நடுவில் முழந்தாள்படியிட்டு இரண்டு கைகளையும் அகலமாக விரித்து மன்றாடினார். இருப்பினும், ‘கடவுள் நம்மை கைவிட மாட்டார் என்கிற நம்பிக்கை பொய்த்துப்போனது.

சேலுகேடு, பல குடும்பங்களை சிதைத்துவிட்டு நகர்ந்து செல்கிறது. விஞ்ஞானம் வளர்ந்த பிறகும் அதற்கான நவீன யுக்திகளை அரசு பயன்படுத்த முன்வரவில்லை. மீனவர்களுக்காக குரல் கொடுப்பதற்கு அவர்களுக்கான பிரதிநிதிகளும் சட்டமன்றத்தில் இல்லை. அனைத்தும் அரசியல் சார்ந்து இயங்குவதால் உரிமையை நிலைநாட்டுவது மீனவர் வாழ்வில் கடினமாகப் போகிறது. அதற்குக் காரணம் மீன்வளத் துறையில் மீனவர்கள் இல்லை. அங்கு இருப்பவர்களுக்கு மீனவர்கள்மீது அக்கறையும் இல்லை.
சேலுகேடு, வாழ்வின் எதார்த்தங்களைப் பதிவு செய்கிறது. சில சட்ட சிக்கல்களை முன்வைக்கிறது. விடை தேட வேண்டிய கட்டாயத்தை வாசகருக்குத் தருகின்றது. குறும்பனை சி. பெர்லினின் கைவண்ணத்தில் உருவான இந்நாவல் உயிரோட்டமுள்ள அற்புதமானதொரு நாவல். மீனவர்களின் வாழ்வியலை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் வாசிக்க வேண்டிய நெய்தல் நாவல்.



No comments:

Post a Comment