Tuesday, August 28, 2018

ஆன்றனி கிளாரட்


தமிழ்ச்செல்வனின், “உள்ளாட்சி & மீன்வளத்துறை மந்திரி லூர்தம்மாள் சைமன், மண்ணை மீட்டுருவாக்கம் செய்கிறது!
“உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை மந்திரி லூர்தம்மாள் சைமன் என்ற நூலை திறனாய்வு செய்த கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த கத்தோலிக்கப் பாதிரியார் ஆன்றனி கிளாரட் உரை.
இந்நூல் குறித்து ஆன்றனி கிளாரட், இந்நூலுக்கு அணிந்துரை எழுதுவதற்காக இதனை நான் வாசித்தேன். இதற்கு முன்பு ஏற்கனவே தமிழ் அவர்கள், லூர்தம்மாள் சைமன் குறித்து ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதற்கும், இந்த நூலுக்கும் என்ன வித்தியாசம்? அதில் இல்லாதது எது இந்த நூலிலே இருக்கிறது என்பதனைப் பற்றி நான் கூர்மையாகத் தேடினேன். முந்தைய புத்தகம் ஏற்கனவே பலராலும் பேசப்படுகின்ற, வரலாற்றை தொகுக்கின்ற முறையிலாக இருந்தது. இந்நூல், லூர்தம்மாள் சைமன் அவர்களைப் பற்றியும், அவரது சிந்தனைகளையும் ஆதாரப்பூர்வமாகத் திரட்டி ஒரு கடுமையான உழைப்பின் அடிப்படையில் அதற்கான ஆவணங்கள், நூல்கள் போன்றவற்றை எல்லாம் பார்த்து அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு நூலாக இருக்கிறது. இதன் பின்னால் நிறைய உழைப்பும், பயணங்களும், செலவுகளும் இருக்கிறது. அப்படி ஆதாரங்களின் அடிப்படையிலே உருவாக்கப்பட்ட பலருக்கும் தெரியாத நமது மண்ணைச் சார்ந்த ஒரு ஆளுமை, அன்னாருடைய வரலாறு ஒரு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அது. மீளக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
வரலாறு, இன்றைக்கு பலருக்கும் விருப்பமான ஒரு தளம். வரலாற்றில் என்ன நடந்ததோ, அதைச் சொல்ல வேண்டும் என்று உணர்ச்சிப் பொங்க ஆவேசமாக பேசுகின்றவர்கள் ஏராளமானோர் உண்டு. வரலாற்றில் இது இப்படித்தான் நடந்தது என எந்தவொரு இரண்டு வரலாற்று ஆய்வாளர்களும் ஒத்துக் கொள்வதே இல்லை. எனவேதான் இன்றைக்கு வரலாறு என்கிற துறையைவிட வரலாற்றை எழுதுகின்ற வரலாற்றியல் துறையானது மிகவும் மேம்பட்டதாக அறியப்பட்ட ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதுவும் நான் அறிந்த வரைக்கும் கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த வரலாறு என்பது தமிழ்நாட்டில் வேறு எந்தப் பகுதியைவிடவும் இடியாப்பச் சிக்கல் நிறைந்த ஓர் வரலாறாக இருக்கிறது.
பல நேரத்தில் எனக்கு ஒரு ஆதங்கம் உண்டு. மாவட்டத்தில், மாவட்ட வரலாறு என்று எழுதப்பட்டிருக்கிற நூல்கள் எல்லாம் சாதி வரலாறாக இருக்கிறது. இதைப்பற்றி வெளிப்படையாக விவாதிக்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். வரலாற்றில் ஆர்வம் இல்லாத, வரலாற்றுப் பாடத்தையே பெரிய அளவில் விரும்பாத மாணவர்கள் என்கிற நிலையிலிருந்து ஒரு துப்பறியும் நாவல் அளவிற்கு விறுவிறுப்பாக கற்பனைகளும், கட்டுக் கதைகளும், புராணங்களும் வரலாற்று விமர்சன உத்திகளை விஞ்ஞானப் பூர்வமாக சந்திப்பதற்கு திராணியில்லாத உள்ளீடு இல்லாத கட்டுக் கதைகள் வரலாறுபோல் எழுதப்பட்டிருக்கின்றன.
வரலாறு வேறா? புராணம் வேறா? என்றால் அந்தளவிற்கு நான் வரவில்லை. அது வேறு. அதில், இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கலைஞர் கருணாநிதி கேட்ட கேள்விபோல் திசைமாறிப் போய்விடும். அதனை நான் தவிர்க்கிறேன். ஆனால், அதற்கு அப்பாற்பட்ட நிலையில்கூட வரலாறு என்று சொல்லப்படுவது, ஆங்கிலத்தில் சொல்வார்கள் எல்லா தவளைகளும் இல்லாத தன்னுடைய வாலைப் பற்றி சிறப்பாகப் பேசிக் கொள்ளுமாம். எனக்கு நீண்ட வரலாறு இல்லை என்றால் எல்லோர் முன்னிலையிலும் எனக்கு என்ன வரலாறு உண்டு, அது எனக்குத் தெரியாது எனச் சொல்லுகின்ற நேர்மை இருக்கிறதே அது அறிவு நேர்மை சம்பந்தப்பட்டது. இங்கே, பெரியவர் கொடிக்கால் இருக்கிறார். இந்த மாவட்டத்தைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற வரலாற்று நூல்கள் அத்தனையிலும் எழுதப்பட்டிருக்கிற ஏராள சம்பவங்களில் நேரடி சாட்சியாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஒருமுறை அவரோடு தொலைபேசி வழியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, உங்களுடைய காலத்திற்குப் பிறகு உங்களைப் பற்றி பேசப்படுகின்ற கதைகளை இப்பொழுது அறிந்தால் நீங்கள் அதனை ஏற்றுக் கொள்வீர்களா என்கிற சந்தேகம் எனக்கு உண்டு என்று சொன்னேன். வரலாறு என்னமோ அப்படித்தான் எழுதப்பட வேண்டும். இவர் பிறக்கும்போதே வானத்து நட்சத்திரம் காட்சி கொடுத்தது. ஆண்டவர் இயேசு பிறப்பைக் குறித்துப் பேசும்போது விவிலியத்தில் இப்படிச் சொல்வார்கள். இடையர்கள் எல்லாம் பாட்டுப்பாடிக் கொண்டிருந்தார்கள். வேறு வேலையே இல்லையா அவர்களுக்கு? தூய்மையாக, எளிமையாக, ஆதாரப்பூர்வமாக, தர்க்க நியாயங்களோடு ஏற்றுக் கொள்ளத்தக்க முறையிலே வரலாற்றைத் தேடுதல் என்பது, அது அறிவுக்கான வேட்கை, அது, எல்லோருக்குமான நலம் தரக்கூடிய ஒரு அம்சம்.
நண்பர் தமிழ், அந்த வேட்கையோடு திரிகிறார். ஒரு முனிவரைப்போல் நூலகம் நூலகமாக, திடீரென்று கேட்டால் கன்னிமாரா நூலகத்திலே இருந்து கொண்டிருக்கிறேன். படி எடுக்க விடமாட்டேன் என்கிறார்கள். பொடிந்து விடுமாம். அத்தகைய ஆவணங்களை எழுத நாள் கணக்காக அங்கே உட்கார்ந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பார். திடீரென்று கேட்டால் திருவனந்தபுரம் சட்டமன்ற நூலகத்திலே உட்கார்ந்து இருக்கிறேன் என்று சொல்வார். இது ஒரு தவம். அதனை அவர் கண்டறிந்து என்னச் செய்யப் போகிறார் என்றுதான் தெரியவில்லை.
மறைக்கப்பட்ட வரலாறு மீட்டெடுக்கப்பட வேண்டும். வரலாறை மீட்டெடுத்து மீட்டெடுத்து என்னச் செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியம். வரலாறு என்பது கடந்தகாலம் பற்றிய ஒரு தேடல் அல்ல. அது நிகழ்காலச் சிக்கல்களுக்கு விடை தேடுகின்ற ஒரு முயற்சி. அந்தவகையில் நான் புரிந்து கொள்கின்ற வரைக்கும் அரசியலில் தங்களுக்கு என்று எந்தவோரு முகவரியும் இல்லாமல் போயிருக்கின்ற கணிசமான எண்ணிக்கையில் இந்த மாவட்டத்தில் வாழுகின்ற முக்குவர்கள் என்கிற மீனவச் சமூகம் என்றைக்காவது ஒருநாள் அரசியல் அடையாளம் பெற்றிருந்ததா? அதனை அவர்கள் எப்படி பெற்றார்கள்? அதனை அவர்கள் எப்படி இழந்தார்கள்? எப்படி அதனை மீட்டுக் கொள்ள முடியும்? நான் புரிந்துகொண்ட வரைக்கும் தமிழுடைய தேடலுக்கான அடிப்படை சூத்திரம் இதுதான். இதில் மூடி மறைப்பதற்கு எதுவும் இல்லை.
அரசியல் என்பது எண்ணிக்கை. சனநாயகம் என்றால் நீங்கள் எத்தனை விழுக்காடு இருக்கிறீர்களோ அந்தளவிற்கு உங்களுக்குப் பிரதிநித்துவம் இருக்கிறதா? அதுதான் சனநாயகம். இவ்வளவு பரவலாக இருக்கிற முக்குவர் என்கிற சாதி ஒரு சட்டமன்ற உறுப்பினரைக்கூட பெறவில்லை என்பது அநீதியானதாகும். இந்த கருத்திலே தமிழுக்கும் எனக்கும் உடன்பாடு உண்டு. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஏனெனில், நானும் அந்த சாதியில் பிறந்தவன்தான்.
எதோ விருப்பு வெறுப்பின்றி காயங்கள் நுகர்த்தலின்றி ஒரு வரலாறை யாரும் தேடுவதில்லை; யாரும் எழுதுவதில்லை. வெளிப்படையாகத்தான் ஒரு உரைவீச்சு. இல்லாத ஒன்றைத் தேடி அலைவது இருட்டறையில் இருக்கின்ற கறுப்பான ஒரு பூனையைத் தேடி அலைந்து திரிவதல்ல ஆய்வு. இருக்கிற நிலவரத்திற்கு காரணம் என்ன? சட்டமன்ற ஒருங்கமைப்பிற்குப் பிறகு, சாதிவாரியாக எடுத்துப் பார்த்தால் கிள்ளியூர் தொகுதியில் முக்குவர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால், சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்தவொரு கட்சியும் முக்குவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தவில்லை. பின்னணி என்ன? முக்குவர்கள், கிறித்தவன் என்றாலே ஓட்டைப் போட்டுவிடுவார்கள், அதற்காகத்தான். அவர்களுக்கு சாதி பற்றிய உணர்வு இல்லை. அவர்களுடையது எல்லாம் சமய அடையாளம். சமயம் சார்ந்து எந்த சிக்கலும் இல்லாமல் அவர்கள் சந்திக்க நேரிடும் நிர்பந்தம் இருக்கிறது.
எங்காவது ஒரு சமயக் கலவரம் நடந்தால் அதன் உடன் பிரதிபலிப்பை இந்த மாவட்டம் எதிர்கொள்கிறது. அதற்கு உடனடியாக பலிகேடாக மீனவர்கள் மாற்றப்படுகிறார்கள். இது அவர்கள் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு திரிகிற சிலுவையாக இருப்பதற்கு அவர்களுடைய சமூக அடையாளங்கள்தான். இதற்கு அப்பாற்பட்ட முறையிலே இந்த மாவட்டத்தில் இருக்கிற இந்து, கத்தோலிக்க, சி.எச்.ஐ., நாடார் என்கிற பெரும்பான்மையான ஒரு சமூகத்தோடும், நீண்ட காலமாக அரசியல் அடையாளத்தை தங்களுக்கென தக்க வைத்துக் கொண்டிருக்கிற வெள்ளாளர் சாதி மக்களோடும், முசுலிம்கள், தலித்துகள், நாயர்கள் என்று அறியப்படுகிற இந்த மாவட்டத்தில் வாழுகிற எல்லா சர்வ சாதியினரோடும் ஒரு நேர்மையான சமூக உரையாடலுக்கு முக்குவர்கள் தயாராக இருக்கிறார்கள். எந்தவோரு சண்டை சச்சரவையோ, எந்தவொரு சாதி மோதலையோ, எந்தவொரு சமூகப் பிரச்சனையையோ உருவாக்குவது அல்ல. எல்லா மக்களும் நல்லுள்ளம் கொண்டவர்கள்தான் என்கிற அடிப்படையான நம்பிக்கையிலிருந்துதான் இந்த ஆய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில், அந்த வரிசையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் தமிழ்ச்செல்வன். ஏற்கனவே லூர்தம்மாள் சைமன் நூல், அண்ணன் கொட்டில்பாடு துரைசாமி அவர்கள் பற்றிய நூல்.
கொட்டில்பாடு துரைசாமி அவர்கள், மீனவர்களுடைய கதையைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அது, ‘புதுமைத்தாய்’ இதழிலே அப்பொழுது வெளிவந்திருக்கிறது. அந்த இதழின் ஆசிரியர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் நம் மத்தியிலே, கொடிக்கால் சேக் அப்துல்லா. வரலாற்றைத் தேடி நீண்ட நெடிய கனத்தப் புத்தகங்களுக்குப் போக வேண்டிய தேவையில்லை. புதிய மரபு இன்னும் அழியாமலே நம்மோடு நிலவிக் கொண்டுதான் இருக்கிறது.
லூர்தம்மாள் சைமனைப் பற்றிப் பேசும்போது காங்கிரசார் அவரைத் தோற்கடித்தார்கள் என்று தன்னுடைய இந்த புத்தகத்தின் ஓர் அத்தியாயத்திலே தமிழ் முன்வைக்கிறார். இது காங்கிரசாருக்கும் பாசக.வுக்கும் உள்ள மோதல் அல்ல. இங்கே அதனுள்ளே இருக்கிற தொழில் சம்பந்தப்பட்ட மோதல்களும், பிரச்சனைகளும். அதனைச் சார்ந்து இயங்குகின்ற அரசியல்களும் சிக்கல்களும் இருக்கின்றன. எல்லாவற்றையும் தொகுத்து நமக்கு வாசிக்கத் தருகிறார். இன்றைக்கு லூர்தம்மாள் சைமனின் பிந்தைய ஒரு காலகட்டத்தில், அதுவே காமராசர் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரோடு மந்திரியாக இருந்த எல்லோருக்கும் நூற்றாண்டு விழா இங்கே நடக்கத்தான் செய்கிறது. ஆனால் அபத்தம் என்னவென்றால் ஒவ்வொருவருக்கும் அந்ததந்த சாதியார் நூற்றாண்டு விழா கொண்டாடிய போதுதான் அபத்தம்.
கன்னியாகுமரி மாவட்டம் என்கிற ஒரு சமூகம் இங்கே இல்லை. இது ஒரு எதார்த்தம். ‘குமரிச் சங்கமம்’ என்கிற நிகழ்ச்சியிலே கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகளைப் பற்றி பாடல்கள் எழுதினேன். செகத் கத்பார் அவர்கள் மெட்டமைத்தார்கள். மூன்று கடல், நான்கு திணை எனப் பாட்டு உண்டு. அது வலிந்து உருவாக்க முயற்சி செய்கின்ற ஒரு கூட்டுச் சமூகம். இது கற்பனையிலே கட்ட முடியாத ஒன்று. குறிப்பாக இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே சாதி என்கிற எதார்த்தத்தைக் கடந்து எந்தவோரு ஒற்றுமையையும் கட்ட முடியாது. நான் சாதி பார்க்க மாட்டேன் என்றெல்லாம் பேசிக் கொண்டு திரிபவர்கள் நமக்கு சாதி கடந்த உறவுக்கு உதவுவதே இல்லை. சாதி கடந்த ஒற்றுமையும் உறவும் சாதி பார்ப்பதில்லை என்கிற ஒற்றை வசனத்திலே செய்ய முடியாத ஒன்று. அது எதார்த்தமானது அல்ல. நான் இன்ன சாதி, நீங்கள் இன்ன சாதி. நமக்குள்ளே என்ன பிரச்சனை? லூர்தம்மாள் சைமனை கொண்டு வந்ததால்தான் நேசமணிக்கு மந்திரி பதவி கொடுக்க முடியாமல் போனதா? இவையெல்லாம் பேசப்படாமல் எந்தவோரு தீர்வையும் எட்ட முடியாது. எந்தவொரு ஒற்றுமையும் எட்டாது.
நூல் வெளியீட்டின்போது பெருந்தலைவர் காமராசர் குறித்து ஒருவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர், “லூர்தம்மாள் சைமனுக்க தோள்ல காமராசருக்கு கைபோடணும். அதனாலயாக்கும் அவளை மந்திரியாக்கிவிட்டு நேசமணியை மந்திரியக்கல்ல என்றார். அப்படியென்றால் அவர் சொல்கிற கருத்தில் உண்மை இருக்கிறதோ இல்லையோ லூர்தம்மாள் சைமனுக்கும், நேசமணிக்குமான ஒரு முரண்பாடு அங்கே வைக்கப்படுகிறது. இன்னும் இருக்கிறது. ஒருவரைப் பற்றி ஒருவர் பேசாமலே தொடர்ந்து போய் கொண்டிருக்கிறபொழுது தொடர் வண்டித் தண்டவாளம்போல ஒட்டாமல் தொடர்ந்து போய் கொண்டேதான் போகும்.
தமிழர்களிடையே ஒத்தக் கருத்துக்கள் எட்டுவதற்கு ஒத்த விவாதம் அரசியல் மேடைகளில் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதுவும் தேர்தல் அரசியலில் நிச்சயமாக இல்லை. சிந்தனை அரங்குகளிலே அதற்கான கருத்துப் பரிமாற்றம் நடக்குமென்று சொன்னால் அதுதான் அரசியலுக்கும் சரி, ஏனைய எல்லாத் தளங்களுக்கும் சித்தனைப் பங்களிப்பை உள்ளீட்டைத் தருகின்ற அம்சம். இதைக் கட்டுவது தூய மைல்கல். இதைக் கட்டுவதில் ஒரு முக்கியமான பங்களிப்பு. அதை ஒரு எழுத்தாளர், ஆய்வாளர் என்கிற முறையில் நண்பர் தமிழ் தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு எனது பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!



No comments:

Post a Comment