Tuesday, August 28, 2018

டி. டேனியல்



டி. டேனியலின், “திருவாங்கூர் தமிழர் உரிமைப் போராட்டம் நேசமணிமீது கட்டமைக்கப்பட்ட பொய்களை உடைத்தெறிகிறது!
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நவீன வரலாற்றில் துறைத்தலைவராக பணியாற்றியவர் பேராசிரியர் டி. டேனியல். இவர் களியக்காவிளை அருகிலுள்ள காஞ்சிரம் பொற்றை ஊரைச் சார்ந்த கிறித்தவ நாடார் ஆவார். “திருவாங்கூரில் பொறுப்பாட்சி அமைவதற்கான போராட்டம் என்கிற நூலானது இவரது முதல் நூலாகும். “திருவாங்கூர் தமிழர் போராட்டம் என்பது இவரது இரண்டாவது நூலாகும். இந்த இரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. இவர், “தென்னிந்திய வரலாற்று காங்கிரசு அமைப்பு தலைவராக பலகாலம் பணி செய்தவர்.
நேசமணியின் பக்தர்கள் அதிகமாக தூக்கிப் பிடிக்கின்ற நூலானது இரசாக் எழுதிய, “நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம். இந்நூலில், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை நேசமணி துவக்கினார் என்கிற ஒரு பொய் வரலாறு புனையப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு பொய் வரலாறை, நூலில் சேர்த்ததற்காக இரசாக்கின் குடும்பத்தாரே வருத்தப்பட்டதாக இலக்கிய வட்டாரத்தில் ஒரு செய்தியும் உலாவுகிறது. இதனால் இந்நூலானது வாசகர்கள் மத்தியில் வலுவிழந்து போய்விட்டது. இந்த பொய் வரலாற்றை டி. டேனியலின் நூல் உடைத்து எறிகிறது. இந்நூலை எழுதிய டி. டானியலும் ஒரு நேசமணி பக்தர் என்பதுதான் இந்நூலுக்கான சிறப்பு. இந்நூலை டி. டேனியல், முழுக்க முழுக்க ஆதாரத்தின் அடிப்படையில் எழுதியிருக்கிறார் என்பது இந்நூலுக்கான கூடுதல் சிறப்பு. தற்பொழுது இந்நூலே வாசகர்களால் அதிகளவில் வாசிக்கப்படுகிறது. இலக்கிய வட்டாரங்களில் இந்நூலைக் குறித்தே அதிகமாக பேசப்படுகிறது.
டி. டேனியலை ஒருமுறை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தேன். அவர் எழுதிய ஆங்கில நூல்களை அடியேனிடம் கொடுத்தார். அதனை ரூ 200/- கொடுத்து விலைக்கு வாங்கிக் கொண்டேன். அப்பொழுது அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். “நான் இந்த நூலை வெளியிட்டபோது, இந்நூலானது சாதாரண மக்களிடம் போய் சேரவில்லை. ஒருநாள் இந்நூல் பேசப்படும் என நினைத்தேன். என் உழைப்பு வீண் போகவில்லை. உங்களைப் போன்றவர்கள் என் வீட்டிற்கு வருகை புரிவதன் மூலம் அது உறுதியாகிறது என்றார். அப்பொழுது இந்நூல் தமிழில் வெளிவரவில்லை.
இந்நூலுக்கான மூலத் தரவுகளை 1971-லிருந்தே டி. டேனியல் சேகரித்து இருக்கிறார். திருவனந்தபுரம் தலைமை செயலகம் மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றில் இருந்த அரசாங்க ஆவணங்கள், காவல்துறை அறிக்கைகள், நீதிபதிகளுக்கும் வட்டாட்சியருக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ கடிதப் பரிமாற்றங்கள், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசின் தீர்மானங்கள், டெல்லி ஆவணக் காப்பகத்திலுள்ள வாராந்திர அறிக்கைகள், திருவாங்கூர் சட்டமன்றப் பதிவேடுகள், போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் எழுதிய வெளியீடுகள், அன்றைய பத்திரிகைச் செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நூலைப் படைத்திருக்கிறார். இந்நூலில், அவரது கடுமையான உழைப்பு தெரிகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்ததற்கு முதல் காரணமாக அமைந்தது, நாடார்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு. அந்த விழிப்புணர்வுக்கு மூலகாரணமாக இருந்தது கிறித்தவ சமயம் என்பது மறுப்பதற்கு அல்ல. இரவிக்கை அணியும் போராட்டம் என்பதும் கிறித்தவ சமயத்தால் எழுச்சி பெற்றது. அதனால் மதமாற்றமும் அதிகளவில் நிகழ்ந்தது..
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்ததற்கு இரண்டாவது காரணமாக அமைந்தது, தமிழ் மொழி புறக்கணிப்பு. அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் முதன்மை மொழியாக கற்றுக் கொடுக்கப்பட்டது. நீதிமன்றங்களிலும், அரசு அலுவலகங்களிலும் மலையாளமே ஆட்சி மொழியாக இருந்தது. இதுகுறித்து திவான், “நாட்டின் ஆட்சி மொழி மலையாளமாக இருக்கும்போது, மாநிலத்தின் எதோ ஒரு மூலையில் உள்ள மக்களின் நன்மைக்காக அதனை மாற்ற முடியாது என்றார்.
சட்டமன்றத்தில் சாதி இடஒதுக்கீடு கேட்டு பலர் மன்னரை அணுகினர். இதுதான் நேசமணி, தாணுலிங்க நாடார், சிதம்பர நாடார் ஆகியோரை ஒரே குடையின்கீழ் கொண்டுவரச் செய்தது. அதன்பின்பு, மதம் விளையாடியதால் நாடார்கள் கால ஓட்டத்தில் பிரிந்து போனார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
குமரி மண்ணில் அரசியல் கட்சியாக, “அகில திருவாங்கூர் தமிழர் காங்கிரசு தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைவராக சாம் நத்தானியேல் இருந்தார். செயலாளராக ஆர்.கே. இராம், இணைச் செயலாளர்களாக ஈ.ஆர். வேலாயுதப் பெருமாள், வி. தாசு ஆகியோர் இருந்தனர். காந்திராமன், பி.எச். மணி, கே. நாகலிங்கம், வி. மார்க்கண்டன் ஆகியோர் உறுப்பினர்களாகவும், மேலும் செயற்குழு ஒன்றும் தேர்வு செய்யப்பட்டது.  இக்கட்சியின் முக்கிய நோக்கமானது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபடுவது. அதன்பின்பாக திருவாங்கூரில் தமிழர் பிரதேசம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரு சிந்தனை அவர்கள் மத்தியில் வலுவடைந்தது. அதற்கு இப்பெயர் பொருத்தமாக இல்லை எனக்கூறி 1946 சூன் 30 அன்று அக்கட்சியின் பெயரை, “திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என அறிவித்தனர்.
நேசமணி, ஏன் ஆலன் நினைவு அரங்கில் 1947 செப்டம்பர் 8 அன்று ஒரு கூட்டத்தைக் கூட்டினார் என்கிற ஒரு கேள்வி பலருக்கு எழுவதுண்டு. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை ஆலன் நினைவு அரங்கில் வைத்துத் துவங்குவதற்காகத்தான் நேசமணி கூட்டத்தைக் கூட்டினார் என்கிறார்கள். டி. டேனியல் என்கிற நேசமணி பக்தரின் நூலை வாசிக்கும்போது, அது பொய் என்பது நிருபணமாகிறது.
15 இலட்சம் திருவாங்கூர் தமிழர்களைப் பாதிக்கக்கூடிய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக, முன்னணித் தமிழ்த் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டமொன்றுக்கு நேசமணி ஏற்பாடு செய்திருந்தார். அக்கூட்டத்தில், “தமிழர்களுக்கென ஒரு தனிப்பிரதேச அமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டிய தேவை குறித்து வலியுறுத்தினார். அவர்கள் இந்த இலட்சியத்தை அவர்களது அரசியல் அமைப்பான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு மூலம் அடைய வேண்டும் என்று நேசமணி பேசியதாக  ஆங்கிலப் பத்திரிகையான, “தி இந்து 12 செப்டம்பர் 1947, பக்கம் 10-இல் செய்தியாக வெளியிட்டுள்ளது. இது ஒரு முக்கியமான பதிவாகும்.
இந்நூலில் கடைசி பக்கத்தில் திருவாங்கூர் தமிழர் காங்கிரசு தொடங்கப்பட்டது குறித்து, ‘தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை ஆதாரத்தோடு கொடுத்துள்ளார்கள். அதுபோல், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறித்தும், ‘தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியையும் ஆதாரத்தோடு கொடுத்துள்ளார்கள். இந்த ஆதாரங்கள் அனைத்தும், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை நேசமணி துவக்கினார் என்கிற பொய் வரலாறை உடைத்து எறிகிறது. இதுதான் இந்த நூலுக்கான பெருமை. “குளச்சல் போர் என்கிற நூலின் மூலம் எப்படி பனந்தடிகளை குறித்த பொய் வரலாறுகள் உடைக்கப்பட்டனவோ, அப்படியே பல பொய் வரலாறுகள் இந்நூல் வாயிலாக உடைபட்டுப் போகிறது.
ஆலன் நினைவு அரங்கில் நேசமணி கூட்டத்தைக் கூட்டியது எதற்கு என்றால் தனியாக ஒரு அரசியல் கட்சியை உருவாக்கவும், அதன்மூலம் சீர்திருத்தக் குழுவில் இடம் பெறவும் என பி.எச். மணி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த அறிக்கை உண்மைக்கு எதிரானது. அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம் அதனை மெய்பிக்க இயலவில்லை என்கிறார் நேசமணி பக்தரான டி. டேனியல். திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை வலிமைப்படுத்தவும், நிலைநிறுத்தவும் கருதியே நேசமணி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் சேர்ந்தார் என ஆவணங்கள் மூலம் தெரியவருவதாக டி. டேனியல் குறிப்பிடுகிறார். அவர் மேலும் சொல்கிறார், “பல்வேறு தரப்பிலும் உள்ள அறிவாளிகள் மட்டத்தில் ஆதரவையும் நல்லெண்ணெத்தையும் பெற்ற பின்னரே திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் சேர விரும்பினார். இந்த முடிவுக்கு வந்தபின்பே அவர் ஆலன் நினைவு அரங்கில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் என்கிறார்.
ஒருவேளை பி.எச். மணியின் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், அன்றைய சூழ்நிலையை கீழ்கண்டவாறுதான் கருத வேண்டியதாய் இருக்கிறது. சமசுதான காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான முத்துக்கிருசுணன் பிள்ளை கொண்டுவந்த தீர்மானமானது ஆலன் நினைவு அரங்கில் தோல்வியைத் தழுவியதற்கு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சியினர் அதிகளவில் அரங்கில் இருந்ததுதான் காரணமாக இருந்திருக்கும். அதனால் புதிய கட்சியைத் துவங்காமல், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் தன்னை இணைத்து விடலாம் என நேசமணி மனதிற்குள் முடிவெடுத்து இருக்கலாம்.
நேசமணியை திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சியில் உறுப்பினராக சேர்த்துக் கொள்வதற்கு பல எதிர்ப்புகள் இருந்தன என்பதனை நேசமணியின் பக்தர் டி. டேனியல் பதிவு செய்யவில்லை. ஒருவேளை அவர் நேசமணி பக்தர் என்பதால் அதனைத் தவிர்த்து இருக்கலாம். அந்த எதிர்ப்புகளை எல்லாம் உடைத்தெறிந்து நேசமணி எப்படி பொறுப்புக்கு வந்தார் என்பதனையும் சுட்டிக்காட்டவில்லை.
“மக்கள் இயக்கமான 5 வயது குழந்தையான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்று 22.08.1951 அன்று கருங்கல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நேசமணி 28.08.1962 அன்று ‘மாலை முரசு இதழ் பேட்டியில், “1947 செப்டம்பர் மாதம் நாகர்கோவிலில் நகர பிரமுகர்கள் கூட்டம் என் தலைமையில் நடந்தது. அதில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு அமைக்கப்பட்டது என்றார். இதனை பி.எச். மணி, “உண்மை தெரிந்தும் மறைத்திருக்கிறார் என்கிற கட்டுரை வாயிலாக மேற்படி விசயங்களை அறியத் தருகிறார்.
“நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம் என்கிற நூலை இரசாக் சொல்லச்சொல்ல அதனை எழுதியிருக்கிறார்கள். 12.01.1991 அன்று இரசாக் அவர்கள் மரித்துவிட்டார்கள். அவர் உயிரோடு இருந்த காலம் வரை அந்நூல் அச்சாகி வெளிவரவில்லை. ஆறு வருடங்களுக்குப் பிறகு 1998-இல் அந்நூல் அச்சாக்கி வெளியிட நேசமணியின் அபிமானிகள் சிலர் முயன்றிருக்கிறார்கள். அதன்விளைவாக இரசாக்கின் நூலை, “நேசமணி ஒரு பொய் என்கிற நூலுக்கு மறுப்பாக திருப்பியிருக்கிறார்கள். அந்நூலை வெளியிட்ட தமிழாலயம் அமைப்பின் இயக்குனர் புலவர் கு. பச்சைமால், தனது மதிப்புரைக்கு, “நேசமணி ஒரு மெய் என்கிற பெயரை சூட்டியதிலிருந்தே அதனை அறிய முடிகிறது.   
பி.எச். மணி, நேசமணியை அவருடைய காலகட்டத்திலேயே மிகக் கடுமையாக, “கன்னியாகுமரி இதழில் விமர்சித்து இருக்கிறார். 1984-இல், “நேசமணி ஒரு பொய் என்கிற நூலானது பி.எச். மணியால் வெளியிடப்பட்டு குமரி மண்ணில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நூலில், 1962 முதல் 1980 வரை ‘கன்னியாகுமரி, 1974 ‘ஆனந்த விகடன், 1952 ‘ஐக்கிய தமிழகம் ஆகிய இதழ்களிலும், 1952 முதல் 1955 வரை ‘தினமலர் பத்திரிகையில் வெளியான முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து ஆவணங்களாக கொடுத்துள்ளார். “நேசமணி ஒரு பொய் என்கிற நூலுக்கு, நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிவிட்டோம் என இன்னும் சிலர் பொய் சொல்லிக் கொண்டுதான் திரிகிறார்கள். ஏன் எழுதியும் வருகிறார்கள். அடியேன் கேள்விப்பட்டதுவரை இதுவரையும் அப்படியொரு வழக்கு கீழமை நீதிமன்றத்தில்கூட பதிவு ஆகவில்லை என்பதுதான்.
நேசமணி, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசைத் துவங்கினார் என்கிற பொய் வரலாறு வேண்டுமென்றே நேசமணி அபிமானிகளால் இராசாக்கின் நூலில் சேர்க்கப்பட்டதாகவும், அதனால், “நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம் என்கிற நூலுக்கு தடை உத்தரவு கேட்டு பி.எச். மணி நீதிமன்றத்தை அணுகியதாகவும், அதுவும் அவருடைய மரணத்திற்குப் பின்பாக அவரது வாரிசுதாரர்கள் யாரும் வழக்கினைத் தொடர்ந்து நடத்தாததால் அவ்வழக்கு இல்லாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியாயினும் டி. டேனியலின், “திருவிதாங்கூர் தமிழர் உரிமைப் போராட்டம் குறித்த குமரி மாவட்ட வரலாறானது தொடர்ந்து பேசப்படும் என்பதில் அடியேனுக்கு மாற்றுக் கருத்து இல்லை.
இந்நூலில் சாத்தன்விளை என்.டி. தினகர் எழுதிய, “தெற்கெல்லைப் போராட்டம் 1948 முதல் 1956 வரையிலான சுருக்கமான வரலாறு பின்னிணைப்புக் கட்டுரையாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்நூலை தமிழில் க. விசயகுமார் மொழிபெயர்த்து உள்ளார். கோவையிலுள்ள, ‘தமிழோசைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “உண்மை வரலாறுகள், ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும் என்பது இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது. இந்நூலை தமிழில் கொண்டுவர பெரிதும் முயற்சி எடுத்தவர் சாத்தன்விளை என்.டி. தினகர். அவரையும், நூலாசிரியர் டி. டேனியலையும் குமரி மாவட்ட மக்கள் அனைவரும் பாராட்ட கடமைப்பட்டுள்ளார்கள்.



No comments:

Post a Comment